Last Updated : 30 Mar, 2019 08:00 AM

 

Published : 30 Mar 2019 08:00 AM
Last Updated : 30 Mar 2019 08:00 AM

தேர்தலில் ஹர்திக் பட்டேல் போட்டியிடுவதில் சிக்கல்

குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராடியவர் ஹர்திக் பட்டேல்.

மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள விஸ்நகர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது வெடித்த கலவரம் தொடர்பான வழக்கில் ஹர்திக் பட்டேலுக்கு விசாரணை நீதிமன்றம் 2 ஆண்டுகள் தண்டனை விதித்திருந்தது. இந்த தண்டனையை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.

இதனிடையே அண்மையில் ஹர்திக் பட்டேலுக்கு திருமணம் நடந்தது. இந்நிலையில் குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத் நகரில் கடந்த 12-ம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.

இதனால் வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அவர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் விஸ்நகர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை ரத்து செய்ய கோரி என குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஹர்திக் பட்டேல் புதிய வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

ஆனால் இதை எதிர்த்து குஜராத் மாநில அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி, ஹர்திக் பட்டேலின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என அறிவித்தார்.

தண்டனையை ரத்து செய்யக் கோரும் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஹர்திக் பட்டேல் வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x