Published : 27 Mar 2019 12:19 PM
Last Updated : 27 Mar 2019 12:19 PM
தாம் வடிவமைத்த பக்கங்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக பாஜகவின் ஐடி பிரிவு மீது ஆந்திரா நிறுவனம் புகார் கூறியுள்ளது. 'பாதுகாவலன் (சவுக்கிதார்)' எனும் பெயரில் தவறுகள் செய்வதாகவும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆந்திராவின் நெல்லூரைச் சேர்ந்த சிறிய இணையதள வடிவமைப்பு நிறுவனம் ‘W3Layouts’. இது கண்ணைக் கவரும் வகையில் வடிவமைத்து தனது இணையதளத்தில் பல பக்கங்களை வெளியிட்டிருந்தது. இந்தப் பக்கங்களில் ஒன்றை அந்நிறுவனத்தின் அனுமதியின்றி பாஜக பயன்படுத்தியதாகப் புகார் எழுந்துள்ளது. இந்தப் பக்கத்தில் இருந்த அந்நிறுவனத்தின் பெயரையும் எடுத்து அதை தனதாக பாஜகவின் ஐடி பிரிவு பயன்படுத்தி இருப்பதாகவும் கூறியுள்ளது.
இது குறித்து அந்த நெல்லூர் நிறுவனம் செய்துள்ள ட்விட்டரில், ‘நம் வடிவமைப்பை பாஜக இணையதளத்தில் பார்த்து பரவசம் கொண்டோம். பிறகு அதன் பின்புறம் இருந்த எங்கள் நிறுவனத்தின் பெயரை அகற்றியதுடன் அதற்காக எந்தத் தொகையும் அளிக்காதது அதிர்ச்சியை அளித்தது.’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தப் புகாருக்குப் பின் நெல்லூர் நிறுவனம் வடிவமைத்த பக்கத்தை பாஜக மாற்றி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், தம் மீது நெல்லூர் நிறுவனம் கூறும் புகார் தவறானதாகவும் பாஜகவின் ஐடி பிரிவு மறுத்துள்ளது.
இது குறித்து பாஜக ஐடி பிரிவின் அமைப்பாளரான அமித் மால்வியா கூறும்போது, ‘இதுபோல் வடிவமைப்புகளில் அதன் பெயர்களை நாம் பயன்படுத்தும் வழக்கம் இல்லை. இதைக் குறிப்பிடக் கூறியபோது நாம் வேறுவகையில் அதை பயன்படுத்துவதாகக் கூறியதை நெல்லூர் நிறுவனம் ஏற்காமல் வலியுறுத்தியதால் அவர்கள் வடிவமைப்பை நாம் அகற்றி விட்டோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு நெல்லுர் நிறுவனத்தின் நிறுவனரான ஹிதாயத், உரிமங்கள் சட்டப்படி வடிவமைப்பின் பக்கங்களில் உள்ள பெயரை அகற்ற யாருக்கும் உரிமை இல்லை எனக் கூறியுள்ளார். இதுபோல் அகற்றவேண்டுமானால் அதற்கான தொகை நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த சர்ச்சைக்குப் பின் பாஜகவின் ஐடி பிரிவு வேறுபல தனியார் நிறுவனங்களின் இலவச வடிவமைப்பு பக்கங்களை பயன்படுத்துவதையும் நிறுத்தி விட்டதாக தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT