Published : 09 Mar 2019 09:09 AM
Last Updated : 09 Mar 2019 09:09 AM
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (இவிஎம்) மோசடியை தடுக்க ‘பூத் ரக்ஷக்’எனும் பெயரில் வாக்குச்சாவடி கண்காணிப்பாளர்களை சமாஜ்வாதி கட்சிநியமிக்கவுள்ளது. இவர்கள், உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் தன் கூட்டணிக் கட்சிகளான பகுஜன் சமாஜ் மற்றும் ராஷ்டிரிய லோக் தளம் ஆகியவற்றின் வேட்பாளர்களுக்கும் சேர்த்து பணியாற்றுவார்கள் எனத் தெரியவந்துள்ளது.
கடந்த 2014 மக்களவை தேர்தலில் வென்று பிரதமராக நரேந்திர மோடி அமர்ந்தது முதல் இவிஎம்களில் மோசடி நடைபெறுவதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகின்றன. பழைய முறையிலான வாக்குச்சீட்டு பதிவை அமலாக்கவும் வலியுறுத்தி வந்தனர். தேர்தல் ஆணையம் இந்தப் புகாரை தொடர்ந்து ஏற்காததுடன், பழைய முறையை மீண்டும் அமலாக்கவும் மறுத்து விட்டது. இதனால், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்சிங் யாதவ், வேறு வழியின்றி ஒரு புதிய உத்தியை கையாள முடிவு செய்துள்ளார்.
அகிலேஷின் திட்டப்படி, அவர் தமதுகட்சியின் சார்பில் இவிஎம்களின் கண்காணிப்பாளர்களை நியமிக்க உள்ளார். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அமர்த்தப்படும் இவர்கள் வாக்காளர்களிடம் இவிஎம்கள் மீது புகார் உள்ளதா? அவர்கள் அளித்த சின்னத்திற்கான ஒப்புகைச் சீட்டு பொருந்துகிறதா? என்றும்கேட்டறிவார்கள். இதில், குறை இருந்தால் அப்பிரச்சினையை தேர்தல் ஆணையத்திடம் புகாராக முன்வைப்பார்கள். இத்துடன், வாக்காளர்கள் தமது வாக்குச்சாவடிகளுக்கு செல்வதிலும் அங்கு தமது அடையாள அட்டைகளை காண்பித்து வாக்களிப்பதிலும் பிரச்சினை இல்லாமல் உள்ளதா என்பதையும் சமாஜ்வாதி கண்காணிப்பாளர்கள் உறுதி செய்ய உள்ளனர்.
இதற்காக, அகிலேஷ் தனது உ.பி. பிரச்சாரக் கூட்டங்களில் ஒரு புதிய கோஷம் அறிமுகப்படுத்தி உள்ளார். ‘பூத் நஹி பட்னே தேங்கே, வோட் நஹி கட்ன தேங்கே (வாக்குகளை பிரிய அனுமதியோம், வாக்குப்பதிவை குறைக்கவும் விட மாட்டோம்)’ என்பதே அந்த கோஷம் ஆகும். உ.பி.யின் 80 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 1,63,331 வாக்குச்சாவடிகள் உள்ளன. எனவே, அதே எண்ணிக்கையில் தமது கட்சி சார்பில் கண்காணிப்பாளர்களை நியமிக்க சமாஜ்வாதி திட்டமிட்டுள்ளது. எனினும், வழக்கமாக, வாக்குச்சாவடிகளில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சார்பில் முகவர்கள் (பூத் ஏஜெண்ட்) மட்டுமே நியமிக்கப்படுகின்றனர். இதற்கு, மத்திய தேர்தல் ஆணையமும் அனுமதிக்கிறது. சமாஜ்வாதி தற்போது எண்ணுவது போல் ஒரு அரசியல் கட்சி சார்பில் கண்காணிப்பாளர்களை நியமிக்க அனுமதி கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் சமாஜ்வாதியின் தேசிய செய்தித்தொடர்பாளரான ராஜேந்தர் சவுத்ரி கூறும்போது, “எங்கள் பூத் ரக்ஷக் தொண்டர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டால் அவர்கள், வாக்குச்சாவடியிலிருந்து விலகி இருந்து பணியாற்றுவார்கள். அப்போது, உ.பி.யில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசின் தவறான கொள்கைகளை பிரச்சாரம் செய்வார்கள்” எனத் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT