Published : 18 Mar 2019 09:22 AM
Last Updated : 18 Mar 2019 09:22 AM

ஜெகன், சந்திரசேகர ராவை மோடி ஆட்டிப் படைக்கிறார்- சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி ஆட்டிப் படைத்து வருவதாக ஆந்திர மாநில இடைக்கால முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.

ஆந்திர மாநில இடைக்கால முதல்வரும், தெலுங்கு தேச கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசித்தார். அதன் பின்னர், தமது தேர்தல் பிரச்சாரத்தை அவர் அங்கு தொடங்கினார்.

இதனைத் தொடர்ந்து, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது:பணப் பரிவர்த்தனை வழக்கில் கைதாகி விசாரணையை எதிர்கொண்டு வரும் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பிரதமர் நரேந்திர மோடி உறுதுணையாக இருக்கிறார்.

ஜெகன்மோகன் ரெட்டியையும், தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவையும் மோடி ஆட்டி படைத்து வருகிறார்.தேர்தலில் குறுக்கு வழியில் வெற்றி பெற ஜெகன்மோகன் ரெட்டி பல வகைகளில் முயற்சி செய்து வருகிறார்.

தேர்தல் ஆணையத்தின் விண்ணப்ப படிவம் எண் 7-ல்முறைகேடு செய்து தெலுங்கு தேசக் கட்சியினர் 9 லட்சம் பேரின்ஓட்டுகளை அவர் நீக்கியுள்ளார்.

இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவேண்டும் என்று சந்திரபாபு நாயுடு, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால், சிறப்பு அந்தஸ்து வழங்க சாத்தியமில்லை, மாநில வளர்ச்சிக்கு தேவையான நிதியை ஒதுக்குகிறோம் என்று மத்திய அரசு கூறியது. அதனால் பாஜக கூட்டணியில் இருந்து சந்திரபாபு விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளுநரை சந்தித்த ஜெகன்

முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யும், தனது சித்தப்பாவுமான ஒய்.எஸ். விவேகானந்த ரெட்டியின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்யக் கோரி ஆந்திர ஆளுநர் நரசிம்மனை ஜெகன்மோகன் ரெட்டி நேற்று முன்தினம் சந்தித்து மனு அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x