Published : 15 Mar 2019 09:12 AM
Last Updated : 15 Mar 2019 09:12 AM
கர்நாடகாவில் மக்களவைத் தேர்தலில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மஜத 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் ஹாசன் தொகுதியில் அவரது பேரன் ப்ரஜ்வல் ரேவண்ணாவும், மற்றொரு பேரன் நிகில் குமாரசாமி மண்டியா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். ஏற்கெனவே அவரது மகன்களில் ஒருவர் முதல்வராகவும், மற்றொருவர் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருப்பதால் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
இந்நிலையில், ஹாசன் மாவட்டம் ஹொலெநர்சிப்பூரில் ப்ரஜ்வல் ரேவண்ணாவை வேட்பாளராக அறிமுகப்படுத்தும் கூட்டம் நேற்று முன் தினம் மாலை நடைபெற்றது. அப்போது தேவகவுடா பேசுகையில், ‘‘ எனது இளமை காலத்தில் இருந்து ஹாசன் தொகுதி மக்கள் என்னை ஆதரித்து, தேர்தலில் வெற்றிபெற வைத்திருக்கிறார்கள்.
இப்போது எனக்கு வயதாகிவிட்டதால் அரசியலில் இருந்து ஓய்வு பெறலாம் என நினைக்கிறேன். இந்த தேர்தலில் ஹாசனில் நான் போட்டியிட மாட்டேன். எனக்கு பதிலாக என் பேரன் ப்ரஜ்வல் ரேவண்ணா போட்டியிடுகிறார். இனி அவருக்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும். நான் சாதியினரின் முன்னேற்றத்துக்காக மட்டுமே உழைக்கவில்லை. இருப்பினும் எல்லோரும் மஜதவை சாதி கட்சி என்றும், குடும்ப கட்சி என்றும் விமர்சிக்கிறார்கள். அதனால்தான் தேர்தலில் நிற்கும் முடிவை கைவிட்டுள்ளேன்.
என் பேரன் இந்த தொகுதி மக்களுக்காக 24 மணி நேரமும் உழைக்கிறார். அதனால் நான் இங்கிருந்து விலகி கொள்கிறேன்'' என கூறியவாறு, கண்ணீர் விட்டு அழுதார்.
குடும்பமே கண்ணீர்
இதனைக் கண்ட தேவகவுடாவின் மூத்த மகனும், பொதுப்பணித்துறை அமைச்சருமான ரேவண்ணா, அவரது மனைவி நகர சபை தலைவர் பவானி ஆகியோரும் அழுதனர். இதனால் ஹாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ப்ரஜ்வல் ரேவண்ணாவும் கண்ணீர் விட்டு அழுதார்.
தேவகவுடாவும் அவரது குடும்பத்தினரும் கண்ணீர் விட்டு அழும் வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவி, வைரலாகியுள்ளது. ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தேவகவுடாவை ஆதரித்தும், விமர்சித்தும் ஏராளமானோர் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT