Published : 29 Mar 2019 08:00 AM
Last Updated : 29 Mar 2019 08:00 AM
உத்தரபிரதேச மாநிலத்தில் இடதுசாரிகளுடன் கூட்டு சேர காங்கிரஸ் மறுத்து விட்டது. எனினும், அம்மாநிலத்தின் அதிகம் புகழ்பெறாத சிறிய கட்சிகளை காங்கிரஸ் தனது கூட்டணியில் சேர்த்து வருகிறது.
ஒரு காலத்தில் உ.பி.யின் முக்கியக் கட்சிகளின் கூட்டணிகளில் தவறாமல் இடம்பெற்றவர்கள் இடதுசாரிகள். இவர்களில், அதிக செல்வாக்கு பெற்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு (சிபிஐ) அதிகபட்சமாக 1967-ல் ஆறு தொகுதி கிடைத்திருந்தது. அதே 6 தொகுதிகள் மீண்டும் 1984-ல் சிபிஐக்கு உ.பி.யில் கிடைத்தது. இதில் கான்பூர் தொகுதியில் சுபாஷினி அலியும் வெற்றி பெற்றிருந்தார். அதன் பிறகு அக்கட்சிக்கு சுமார் 30 வருடங்களுக்கு முன் 1991 தேர்தலில் கடைசி வெற்றி கிடைத்தது. இதுவும் தற்போது சரிந்து சிபிஐக்கு 0.1 சதவிகித வாக்குகள் மட்டுமே உ.பி.யில் மீதம் உள்ளன.
இந்நிலையில், காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட சிபிஐயின் உ.பி. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இது, காங்கிரஸ் பொதுச்செயலாளரான ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுடன் பத்து நாட்களுக்கு முன்பாகவே முறிந்தது. அதேசமயம், மற்றொரு பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி வதேரா, உ.பி.யில் செல்வாக்கு இல்லாத கட்சிகளான மஹான் தளம், ஜன் அதிகார், அப்னா தளத்தின் கிருஷ்ணா பட்டேல் பிரிவு ஆகியவற்றுடன் பேசி கூட்டணி அமைத்துள்ளார். இதற்கு பாஜகவை போல் காங்கிரஸும் உபியில் இடதுசாரி கட்சிகளை வளர்க்க விரும்பவில்லை என்பது காரணமாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, உ.பி.யில் சிபிஐ 7 தொகுதிகளிலும், சிபிஐ எம் எல் 4 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளன. இவர்களுக்கு ஆதரவு மட்டும் அளித்துவிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி(சிபிஎம்) போட்டியில் இருந்து ஒதுங்குகிறது. இடதுசாரிகள் அனைவரும் இணைந்து உ.பி.யின் மூன்று தொகுதிகளில் பொது வேட்பாளர்களை நிறுத்தலாம் என சிபிஎம் அளித்த யோசனை இன்னும் ஈடேறவில்லை.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் உபி மாநில சிபிஐ செயலாளரான டாக்டர் கிரீஷ் சந்திரா கூறும்போது, ‘உபியின் 75 தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதியிலும் எங்களுக்கு 10,000 முதல் 25,000 வாக்குகள் உள்ளன. வெறும் 4 தொகுதிகளை ஒதுக்கியிருந்தால் காங்கிரஸுக்கு அந்த வாக்குகள் கிடைத்து பல தொகுதிகளில் அதன் வேட்பாளர் வெற்றி பெறும் நிலை ஏற்பட்டு இருக்கும். ஆனால், விலாசம் தெரியாத கட்சிகளுடன் கூட்டு சேரும் காங்கிரஸ் எங்களை கண்டு ஏனோ அஞ்சுகிறது’ என்றார்.
இதனிடையே, மக்களவை தேர்தலில் மாநில அளவில் மட்டுமே கூட்டணி என சிபிஐஎம் பொதுச்செயலாளரான சீதாராம் யெச்சூரி அறிவித்திருந்தார். ஆனால், அக்கட்சியால் உ.பி.யுடன் சேர்த்து பிஹாரிலும் கூட்டணி அமைக்க முடியவில்லை. பிஹாரில் சில தொகுதிகளில் போட்டியிடும் இடதுசாரிகள் மற்ற இடங்களில் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான மெகா கூட்டணிக்கு ஆதரவளிக்கத் திட்டமிடுகிறார்கள். இதில், காங்கிரஸும் முக்கிய உறுப்பினராக இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT