Published : 30 Mar 2019 09:25 AM
Last Updated : 30 Mar 2019 09:25 AM
காங்கிரஸில் இணையவிருக்கும் பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹாவை இழுக்க லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் விரும்புகிறது. அவரது மனைவியான நடிகை பூனம் சின்ஹாவை தம் பக்கம் இழுக்க சமாஜ்வாதி கட்சி முயல்கிறது
2014-ல் இரண்டாம் முறையாக வென்றது முதல் சத்ருகன் சின்ஹா தன் கட்சியான பாஜகவை விமர்சனம் செய்து வந்தார். இதனால், அவரை தன் கட்சியில் இழுத்து லக்னோவில் போட்டியிட வைக்க சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்சிங் யாதவ் விரும்பினார். இதற்காக, சத்ருகன் லக்னோ வந்து அகிலேஷை சந்தித்துப் பேசியிருந்தார். ஆனால், அவர் தனக்குப் பதிலாக தனது மனைவியான பூனம் சின்ஹாவை போட்டியிட வைக்கும்படி அகிலேஷிடம் யோசனை அளித்ததாகக் கூறப்பட்டது.
இதை ஏற்று சமாஜ்வாதியும் பூனமை லக்னோவில் போட்டியிட வைக்க முயல்கிறது. அங்கு பாஜக சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் போட்டியிடுகிறார். இந்நிலையில், காங்கிரஸில் சத்ருகன் சின்ஹா சேர்வது அடுத்த மாதத்திற்கு என தள்ளிப் போய் உள்ளது. இதற்கு அவர் பிஹாரின் பாட்னா சாஹேப் தொகுதியிலேயே போட்டியிட வற்புறுத்துவது காரணம் ஆகும்.
இந்தத் தொகுதி, மெகா கூட்டணிக்கு தலைமை வகிக்கும் ஆர்ஜேடியிடம் உள்ளது. பாட்னா சாஹேப்பை காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டால் தான் அங்கு அக்கட்சியில் சேரும் சத்ருகன் சின்ஹா போட்டியிட முடியும். இதைவிட, சத்ருகனை தன் கட்சியில் சேர்த்து பாட்னா சாஹேபை தாமே அவருக்கு ஒதுக்கலாமே என லாலு திட்டமிடுகிறார். இதனால், லாலுவுடன் பேசி முடித்த பின் தன்னிடம் வருமாறு ராகுல் கூறியிருப்பதாகத் தெரிகிறது.
எனவே, இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டெல்லி அலுவலகத்தில் சந்தித்த சத்ருகன் சின்ஹா கட்சியில் சேரவில்லை. நேற்று வெளிடப்பட்ட ஆர்ஜேடி வேட்பாளர்கள் பட்டியலில் பாட்னா சாஹேப் தொகுதி இடம்பெறவில்லை.
இது குறித்து சத்ருகன் டெல்லியில் ராகுலை சந்தித்த பின் கூறும்போது, ''எனது காங்கிரஸ் இணைப்பு விரைவில் நடைபெறும். நவராத்ரியில் உங்களுக்கு நல்ல செய்தி அளிக்றேன். சூழல் எதுவாக இருப்பினும் தொகுதி ஒன்று தான்'' எனத் தெரிவித்துள்ளார்.
இந்த இருவரது போட்டி உறுதியாவதற்கு முன்பாகவே அவர்கள் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய மகளும் பாலிவுட் நடிகையுமான சோனாக்ஷி சின்ஹா தயாராகி வருகிறார்.
சமாஜ்வாதியின் திரை நட்சத்திரங்கள்
உ.பி.யில் சமாஜ்வாதி பல திரை நட்சத்திரங்களை தேர்தலில் களம் இறக்கியுள்ளது. இதற்கு அதன் பொதுச்செயலாளராக இருந்த அமர்சிங்கின் பாலிவுட் தொடர்பு முக்கியக் காரணமாக இருந்தது. அமர்சிங் உதவியால் இதுவரை ராஜ்பப்பர், நபீஸா அலி, ஜெயப்பிரதா மற்றும் சஞ்சய் தத் ஆகிய பாலிவுட்டினர் சமாஜ்வாதியில் போட்டியிட்டிருந்தனர்.
இவர்களில் ராஜ்பப்பர் பிறகு காங்கிரஸில் இணைந்து தற்போது உ.பி. மாநில தலைவராக உள்ளார். தனது தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடுகிறார். சில தினங்களுக்கு முன் பாஜகவில் இணைந்த ஜெயப்பிரதா மூன்றாம் முறையாக ராம்பூரில் போட்டியிடுகிறார். தன் கட்சியின் பொதுச்செயலாளராக்கி சஞ்சய் தத்தை லக்னோவில் போட்டியிட வைக்க சமாஜ்வாதி முயன்றது.
ஆனால், சிலவாரங்களிலேயே மும்பை திரும்பிய சஞ்சய் அரசியலுக்கே முழுக்கு போட்டு விட்டார். எனினும், அதற்கானக் காரணங்களை அவர் இதுவரை கூறவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT