Published : 04 Mar 2019 09:08 AM
Last Updated : 04 Mar 2019 09:08 AM
கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதால் பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் உள்ள 4,250 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளிடம் காணொலிக்காட்சி மூலம் கலந்துரையாடல் நடத்தினார். இதில் நிர்வாகிகள் அளித்த தகவல்களும், கட்சியின் மேலிடம் மேற்கொண்ட கணிப்பும் ஒரே மாதிரியாக இருந்தது. கடந்த 2014 தேர்தலின்போதும் இதே முடிவு எங்களுக்கு கிடைத்தது.
இதை வைத்துப் பார்க்கும்போது வரும் தேர்தலில் பாஜக 300 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. மோடி மீண்டும் பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது. நாடு முழுவதும் பாஜகவினர் தேர்தல் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகள் இன்னும் கூட்டணியைகூட முடிவு செய்யாத நிலையில், எங்கள் கட்சி 90 சதவீதம் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளை முடித்துவிட்டது.
கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 5 பேர் வீதம் வேட்பாளர்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சில தினங்களில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை சந்தித்து 28 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்ய உள்ளோம். வெற்றி வாய்ப்பு உள்ளவர்களுக்கே முன்னுரிமை என்பதை தெளிவுப்படுத்தியுள்ளோம். கர்நாடகாவில் 22 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாஜகவை நாடு முழுவதும் வீட்டு வாசலுக்கே கொண்டு செல்லும் பணியை நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர். வாக்குச்சாவடி அளவிலான நிர்வாகிகளின் பங்களிப்புக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. முதல்கட்டமாக பெங்களூரு வடக்கு,பெங்களூரு தெற்கு உள்ளிட்ட 10 மக்களவைத் தொகுதிகளின் முக்கிய நிர்வாகிகளுக்கு இன்னும் சில தினங்களில் பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. அடுத்த 7 வாரங்களுக்கு முழுமையாக கட்சி வேலை செய்ய வேண்டும் என அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT