Published : 14 Mar 2019 01:35 PM
Last Updated : 14 Mar 2019 01:35 PM
உ.பி.யில் பகுஜன் சமாஜின் மாயாவதி, சமாஜ்வாதியின் அகிலேஷ் சிங் யாதவ் மற்றும் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் அஜித் சிங் ஆகியோர் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
உ.பி.யில் ஏழு கட்டங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டம் உ.பி.யின் மேற்குப்பகுதியில் ஏப்ரல் 11-ல் நடைபெறுகிறது. எனவே, மேற்குப்பகுதியின் முக்கிய நகரமான மீரட்டில் மாயாவதி, அகிலேஷ் மற்றும் அஜித் சிங் ஒரே மேடையில் தம் பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளனர்.
உ.பி.யில் மொத்தம் உள்ள 80-ல் எட்டு தொகுதிகளுக்கு முதல்கட்டத் தேர்தல் நடைபெறும். இங்குள்ள பாக்பத், முசாபர் நகர் மற்றும் மதுராவில் ராஷ்டிரிய லோக் தளம் போட்டியிடுகிறது. இதற்கான பிரச்சாரக் கூட்டங்களின் தேதிகள் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது.
இது குறித்து 'இந்து தமிழ்' இணையதளத்திடம் சமாஜ்வாதியின் நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ''எங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான தொகுதி ஒதுக்கீடு இன்னும் முடியாமல் உள்ளது. இங்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர்களைப் பொறுத்து அந்தத் தொகுதிகள் எந்தக் கட்சிக்கு என முடிவு செய்யப்படும். எனவே, பாஜகவின் வேட்பாளர் பட்டியலுக்காகக் காத்திருக்கிறோம்'' எனத் தெரிவித்தனர்.
இதனிடையே, சமாஜ்வாதி சார்பில் மேலும் இரண்டு வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இத்துடன் அக்கட்சி சார்பில் 11 வேட்பாளர் பெயர்கள் வெளியாகி உள்ளன.
வழக்கமாக முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவிக்கும் மாயாவதி இந்தமுறை தாமதமாக இன்று அறிவிக்க உள்ளார். இந்த மூன்று கட்சிகள் அமைத்து உ.பி. கூட்டணியில் சமாஜ்வாதி 37, பகுஜன் சமாஜ் 38 மற்றும் ராஷ்டிரிய லோக் தளம் மூன்றில் போட்டியிடுவது என முடிவாகி உள்ளது.
அமேதி, ரேபரேலி தொகுதிகளில் போட்டியிடும் ராகுல் மற்றும் சோனியா காந்திக்காக அங்கு வேட்பாளர்கள் இக்கூட்டணி நிறுத்தப் போவதில்லை என முடிவு செய்துள்ளது.
உ.பி.யின் மூன்று முக்கிய கட்சிகளின் தலைவர்களும் ஒரே மேடையில் பேசுவதால் அவை அம்மாநிலத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், அதன் தாக்கம் எந்த அளவிற்கு ஏற்பட்டது என்பது மே 23-ல் வெளிவரும் முடிவுகளில் தெரியவரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT