Published : 13 Mar 2019 06:43 PM
Last Updated : 13 Mar 2019 06:43 PM
மக்களவைத் தேர்தலில் பாஜக சுமார் 40 சதவீத வேட்பாளர்களை களம் இறக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மாற்றம் பல தனியார் நிறுவனங்கள் மூலமாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளின் தாக்கம் எனக் கருதப்படுகிறது.
நாட்டில் மொத்தம் உள்ள 28 மாநிலங்களில் பாஜக 12-லும், அதன் கூட்டணிக்கட்சிகள் 6-லும் ஆட்சி செய்து வருகின்றன. இவற்றின் சில மாநிலங்களில் ஆளும் அரசுகள் மீதும், அதன் பல தொகுதிகளின் மக்களவை எம்.பி.க்கள் மீதும் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்தத் தகவல் பாஜக சார்பில் மக்களவைத் தேர்தலுக்காக நடத்தப்பட்ட பல்வேறு வகை கணக்கெடுப்புகள் மூலம் பாஜகவிற்கு தெரியவந்துள்ளது. இவை பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலம் சமீப நாட்களில் எடுக்கப்பட்டுள்ளன.
இவற்றில், சுமார் 40 சதவீத எம்.பி.க்கள் மீது பொதுமக்கள் அதிருப்தியுடன் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு மீண்டும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தால் வெற்றி பெற முடியாது எனவும் கூறியுள்ளதாகத் தகவல் கூறப்படுகிறது. இந்த முறை மக்களவைத் தேர்தலில் புதிய முகங்களை களம் இறக்கினால் வெற்றிக்கான வாய்ப்புள்ளதாகவும் அந்தக் கணக்கெடுப்பின் முடிவுகள் பரிந்துரைத்துள்ளன. எனவே, இதை ஏற்று 40 சதவீதம் புதிய முகங்களையும், இளைஞர்களையும் களம் இறக்க பாஜக தலைவர் அமித் ஷா விரும்புவதாகக் கருதப்படுகிறது.
அதேசமயம், கடந்த 2014 தேர்தல் முதல் அதிக வயதான மூத்த தலைவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்படுவதில்லை என முடிவு செய்யப்பட்டது. இதை இந்தத் தேர்தலில் தளர்த்தி வெற்றி வாய்ப்புள்ள தலைவர்களை மீண்டும் பாஜக போட்டியிட வைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் 11-ல் நடைபெற உள்ள முதல்கட்ட வாக்குப்பதிவில் 91 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, பாஜகவின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் விரைவில் கூடி நாடு முழுவதிலும் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த வேட்பாளர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு மாதம் பிரச்சாரம் செய்ய கால அவகாசம் தரும் வகையில் தேர்வு செய்யப்படுகிறது. இதற்கு ஏற்ற வகையில் அவர்களின் பட்டியலை பாஜகவின் தலைமை அறிவிக்க உள்ளது.
பாகிஸ்தான் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதலுக்குப் பின் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு பொதுமக்கள் இடையே கூடி இருப்பதாகக் கருதப்படுகிறது. எனினும், பாஜக இதை பெரிதாக நம்பி இருக்கத் தயாராக இல்லை. எனவே, தனது கூட்டணிக்கட்சிகளையும் சேர்த்து மொத்தம் 272 எம்.பி.க்கள் மீதான புள்ளி விவரங்கள் திரட்டி உள்ளது. தனியார் நிறுவனங்கள் மூலமாக சுமார் நான்கு விதமானக் கணக்கெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதன் முடிவுகளை தனது கூட்டணிக்கட்சிகளின் தலைவர்களிடமும் பாஜக பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளது. இதன்படி, அக்கட்சிகளும் தம் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் தெரிகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT