Last Updated : 03 Mar, 2019 01:10 PM

 

Published : 03 Mar 2019 01:10 PM
Last Updated : 03 Mar 2019 01:10 PM

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவா? டெல்லி தலைமையுடன் தமிழக ஆம் ஆத்மி கட்சியினர் ஆலோசனை

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவளிக்க ஆம் ஆத்மி கட்சி பரிசீலனை செய்கிறது. இதற்காக, அக்கட்சியின் தமிழகத் தலைவர்களுடன் அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லியில் ஆலோசனை செய்கிறார்.

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக என இரு கட்சிகள் தலைமையில் தமிழகத்தில் கூட்டணி அமைந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடிக்கு நிலவி வரும் கடும் எதிர்ப்பு காரணமாக தனது வாக்குகளைச் சிதறடித்து வீணாக்க வேண்டாம் என எதிரணியில் உள்ள  சிறிய கட்சிகளும் கருதுகின்றன.

இந்தவகையில், டெல்லியில் தனிமெஜாரிட்டியுடன் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியும் விரும்புகிறது. இக்கட்சி கடந்த 2014  மக்களவைத் தேர்தலில் தமிழகத்தின் 22 தொகுதிகளில் போட்டியிட்டது.  இதில், அதிகபட்சமாக சுமார் 20,000 வாக்குகளை நான்கு தொகுதிகளில் பெற்றது. வெற்றிபெற முடியாத தனது இந்த வாக்குகளை வலிமையான எதிர்க்கட்சியாக திமுக தலைமையில் அமையும் கூட்டணிக்கு மாற்றி விட யோசனை செய்கிறது.

இதற்கான கோரிக்கை திமுகவிடம் இருந்து வந்தால் அதை பரிசீலனை செய்வது எனவும் முடிவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதற்காக ஆம் ஆத்மி கட்சியின் தமிழகப் பொறுப்பாளரும் டெல்லியின் முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சோம்நாத் பாரதி தமிழகத் தலைவர்களுடன் கடந்த மூன்று நாட்களாக ஆலோசனை நடைபெற்றது.

கட்சியின் தேசிய அமைப்பாளரான கேஜ்ரிவாலுடனும் அதன் தமிழக தலைவர்கள் சந்திப்பு நடத்தி இருந்தனர். இதில், தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன், துணை ஒருங்கிணைபாளர் சுதா மற்றும் பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களிடம் கேஜ்ரிவால் தமிழகத்தின் சட்டப்பேரவைக்கு வரவிருக்கும் இடைத்தேர்தல் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது அவர்கள் தமிழகத்தில் தனித்துப் போட்டியிடத் தயாராக இருப்பதாகவும் தம் தலைவர்களிடம் தெரிவித்தனர்.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளரான வசீகரன் கூறும்போது, ''கடந்த முறையை விடக்குறைவானாலும் வெற்றிவாய்ப்பு உள்ள தொகுதிகளில் போட்டியிடத் தயார் எனக் கூறினோம்.  மூன்றாவது அணியாகக் கூட்டணி அமைக்கும் வாய்ப்புகளும் உள்ளன. இதன் இறுதி முடிவை எங்கள் கட்சியின் தலைமை எடுத்து சில தினங்களில் அறிவிக்க உள்ளது'' எனத் தெரிவித்தனர்.

இதனிடையே, கடந்த மாதம் 26-ல் கேஜ்ரிவாலை சந்தித்த கமல், தன் கட்சியின் பிரச்சாரத்திற்காக கேஜ்ரிவாலை தமிழகம் வர அழைத்திருந்தார். பிறகு, ஆம் ஆத்மி கட்சி இந்த தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடாது என செய்தியாளர்களிடம் கூறி இருந்தார்.  தம் கட்சி எடுக்காத இந்த முடிவை வெளியிட்ட கமல் மீது ஆம் ஆத்மியின் தலைமை அதிருப்தியாக இருப்பதாகவும் கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x