Last Updated : 29 Mar, 2019 03:03 PM

 

Published : 29 Mar 2019 03:03 PM
Last Updated : 29 Mar 2019 03:03 PM

தேசத்திலேயே ஒரே தொகுதி; விவசாயிகள் செயலால் மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்குத் திரும்பிய நிஜாமாபாத்: என்ன காரணம்?

மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு செயல்படுத்தப்பட உள்ள நிலையில், தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் தொகுதியில் மட்டும் இந்த முறை வாக்குச்சீட்டு ஓட்டுமுறை நடத்தப்பட உள்ளது.

நிஜாமாபாத் மக்களவைத் தொகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கும், மஞ்சளுக்கும் உரிய விலை கோரியும், மஞ்சள் வாரியம் அமைக்கக் கோரியும் பல போராட்டங்களை நடத்தினார்கள். அதற்குப் பலன் இல்லாததால்  170 விவசாயிகள் வேட்புமனுத்தாக்கல் செய்து போட்டியிடுகின்றனர்.

நிஜாமாபாத் மக்களவைத் தொகுதியில் மட்டும் 9 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் 8 தொகுதிகளில் டிஆர்எஸ் கட்சி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் டி அரவிந்த், காங்கிரஸ் சார்பில் மது யாஷ்கி கவுடா போட்டியிடுகிறார். மொத்தம் நஜாமாபாத் தொகுதியில் மட்டும் 185 பேர் இந்த முறை தேர்தல் களத்தில் உள்ளனர்.

வரும் ஏப்ரல் 11-ம் தேதி நிஜாமாபாத்தில் வாக்குப்பதிவு நடக்கிறது. ஒட்டுமொத்தமாக தெலங்கானா மாநிலத்தில் இந்த மக்களவைத் தேர்தலில் 443 வேட்பாளர்கள் களத்தில் இருக்கும் நிலையில் 185 வேட்பாளர்கள் நிஜாமாபாத்தில் மட்டும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிஜாமாபாத் தொகுதியில் மஞ்சள் மற்றும் சிவப்பு சோளம் அபரிமிதமாக விளைச்சல் அடைந்து வருகிறது. மஞ்சளுக்கு வாரியம் அமைக்க வேண்டும், சோளத்துக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என நீண்டகாலமாக தெலங்கானா அரசிடம் இந்தத் தொகுதியில் உள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், விவசாயிகளின் கோரிக்கையை டிஆர்எஸ் அரசு கண்டுகொள்ளவில்லை. மஞ்சள் வாரியத்தையும் அமைக்கவில்லை.

இதனால், இந்த மக்களவைத் தேர்தலில் டிஆர்எஸ் கட்சியின் வேட்பாளரை எதிர்த்து களமிறங்க விவசாயிகள் முடிவு செய்தனர். டிஆர்எஸ் கட்சி சார்பில் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவை எதிர்த்து 170 விவசாயிகள் போட்டியிடுகின்றனர்.

இதுகுறித்து தெலங்கானா தேர்தல் தலைமை அதிகாரி ராஜத் குமார் கூறியதாவது:

"நிஜாமாபாத் தொகுதியில் மட்டும் 185 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். வேட்பாளர்கள் அதிகம் என்பதால், வேறுவழியின்றி வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

எந்த மாதிரியான வாக்குச்சீட்டு பயன்படுத்த வேண்டும், எந்த நிறத்தில் இருக்க வேண்டும் என்பதற்கான ஒப்புதல் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் பெற்றுவிட்டோம். விரைவில் வாக்குச்சீட்டு அச்சடிக்கும் பணி தொடங்கும். இந்தத் தொகுதியில் மட்டும் 15.50 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கப்பட்டுவிட்டன. வாக்குச்சீட்டு முறையில் வாக்களிப்பது எவ்வாறு என்பதை விளக்கும் வகையில் மக்களுக்குவிழிப்புணர்வு பிரச்சாரமும் செய்யப்பட்டு வருகிறது.

வாக்குச் சீட்டில் தேசியக் கட்சிகள் முதலிலும் அதைத் தொடர்ந்து மாநிலக் கட்சிகளும், அங்கீகாரம் பெறாத கட்சிகளும், சுயேட்சைகளும் வரிசையாக இடம் பெறுவார்கள்.

தேர்தலில் தற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் அதிகபட்சமாக 64 வேட்பாளர்களின் சின்னங்களுக்கு மேல் இடம் பெற முடியாது என்பதாலும், வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்பதாலும், இந்த முறை வேறுவழியின்றி வாக்குச்சீட்டு முறைக்கு தேர்தல் ஆணையம் இங்கு மாறியுள்ளது.

வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கான காகிதம், வாக்குப்பெட்டிகள் போன்றவற்றை வாங்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 1996-ம் ஆண்டு அதிகபட்சமாக நல்கொண்டா மக்களவைத் தொகுதியில் 480 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வந்தபின் சமீபத்தில் 2010-ம் ஆண்டு சில சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மட்டும் வாக்குச்சீட்டு பயன்படுத்தப்பட்டது

மாநிலத்தில் 648 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு பரிசீலனையில் 145 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன".

இவ்வாறு ராஜத் குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x