Last Updated : 21 Mar, 2019 02:49 PM

 

Published : 21 Mar 2019 02:49 PM
Last Updated : 21 Mar 2019 02:49 PM

அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்வு: பிரதானமாக இருக்கும் வாரிசுகளும், பிரச்சார செலவும்

நம் நாட்டின் அரசியல் கட்சிகள் தம் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க என ஒரு குறிப்பிட்ட விதிமுறைகள் எதுவும் இல்லை. தம் வசதிகளுக்கு ஏற்றபடி மாநில, பிராந்திய மற்றும் தேசியக் கட்சிகள் அவர்களை பல்வேறு முறைகளில் தேர்ந்தெடுக்கின்றனர்.

விருப்ப மனுவிற்குப் பின் கட்சி தேர்வுக்குழு மற்றும் தலைமை நிர்வாகிகளின் நேர்முகத்தேர்வு என அதன் பின்னணியில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு 'மறைமுக நோக்கம்' உள்ளது. தமிழகத்தில் மட்டுமே விருப்ப மனு எனும் பெயரில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறது. மனுக்களைப் பெற்ற பின் அதை அளிப்பவர்களிடம் பொது மற்றும் தனித்தொகுதிக்கு என ஒரு டெபாசிட் தொகை பெறப்படுகிறது. பொது தொகுதியினருக்கு ரூ.25,000 வரையும், தனித்தொகுதிக்கு ரூ.10,000 வரையும் என அறிவிக்கிறார்கள்.

திரும்ப அளிக்கப்படாத இந்தத் தொகை கட்சி நிதிக்காக எனக் கூறப்படுகிறது. ஆனால், இந்தத் தொகை அந்த அரசியல் கட்சிகளின் தேநீர் செலவிற்கு போதாது என்பது இங்கு சொல்லத் தேவையில்லை.  எனினும், அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் இந்த முறை முழுமையாக செயல்படுத்தப்படுவதில்லை. இதன் திரைகளுக்குப் பின் பெரும்பாலான கட்சிகள் குறிப்பிட்ட பல வேட்பாளர்களை மனதில் வைத்து அரங்கேற்றப்படுவது வழக்கமாக உள்ளது.

இதற்கு பல உதாரணங்கள் தமிழக கட்சிகளிடம் உள்ளன.  சிலசமயம் விருப்ப மனு செய்யாதவர்களும் அவர்கள் கட்சியினால் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு விடுவது உண்டு. அதன்பிறகு அறிவிக்கப்பட்ட வேட்பாளரிடம் விருப்ப மனு பெறப்படுவது உண்டு. இதுபோல், தமிழகத்தின் ஒரு சட்டப்பேரவை தேர்தலில் ஒரு தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக வழக்கறிஞர் பதர் சையீது அறிவிக்கப்பட்டிருந்தார். பிறகு ஜெயலலிதாவின் தோழியான சையீதிடம் விருப்ப மனுவை அதிமுக கேட்டுப் பெற்றது.

ஜெயலலிதா இருக்கும் வரை போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் கட்சி சார்பில் பிரச்சாரச் செலவு அளிக்கும் வழக்கத்தை வைத்திருந்தார். ஆனால், இந்த வழக்கம் இந்தத் தேர்தலிலும் அதிமுக தொடர்கிறதா என்பது வரும் காலங்கள் தான் பதில் சொல்லும்.

திமுகவில், வேட்பாளர்கள் தேர்வு செய்து வைத்தபின் விருப்ப மனு பெறுவதாகப் புகார் கூறப்படுகிறது. இதற்கு, சிலசமயம், கட்சியினர் அறியாத ஒரு புதிய பெயர் வேட்பாளராக இடம் பெற்று விடுவதை உதாரணமாகக் காட்டுகின்றனர். இதன் பின்னணியில் கட்சிகளின் முக்கிய தலைவரது குடும்பத்தாரால் வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் எனவும், இவர்கள் பல சமயங்களில் வெற்றி பெறாமல் போவதுடன் தோல்விக்குப் பின் கட்சிப் பணியிலும் தொடராமல் இருந்து விடுவதாகவும் கூறுகிறார்கள்.

மதச்சார்பற்ற ஜனதா தளம்

இதுபோல், விருப்ப மனு முறை தமிழகம் தவிர வேறு எந்த மாநிலங்களிலும் இருப்பதாகத் தெரியவில்லை. அருகிலுள்ள மாநிலங்களில் கர்நாடகாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் மீது காசு பார்க்க வேண்டி அதன் தலைவர்கள் வேட்பாளர்களைத் தேடுவதாகப் புகார் உள்ளது.

ஆந்திரா, தெலங்கானா

ஒடிஸாவில் பிஜு ஜனதா தளம், ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் கட்சிகள் தம் வேட்பாளர்களை மாவட்டச் செயலாளர்கள் மூலமாகத் தேர்வு செய்கின்றனர். இவர்களை அணுக முடியாதவர்கள் தம் கட்சித் தலைமையை நேரடியாக அணுகுவதும் உண்டு.

தேர்தல் செலவைச் சமாளிக்க முடியுமா?

இம்மாநிலங்களின் முறைப்படி குறைந்தது இரண்டு பெயர்களை தம் தலைமைக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரைக்கிறது. அதில், வேட்பாளரால் தேர்தல் செலவைச் சமாளிக்க முடியுமா? போன்றவையும் மதிப்பிடப்பட்டு விடுகிறது.

தேர்தலில் வென்றால் பதவி

இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டவர்களை அழைத்து தலைமை பேசுகிறது. அப்போது அவர்களிடம் தேர்தலில் வென்றால் அமைச்சர் அல்லது ஏதாவது ஒரு பதவி கிடைக்கப்படுவதாக தலைவர்களால் உறுதி அளிக்கப்படுவதும் வழக்கமாக உள்ளது.

வெற்றிக்கு உற்சாகப்படுத்துதல்

இந்த உறுதிகள், தன் வேட்பாளர்கள் வெற்றிக்கு உற்சாகப்படுத்தவே தவிர அவை அனைத்தும் உண்மை இல்லை. இதேவகை தேர்வையே தென்னிந்தியாவின் பெரும்பாலான மாநிலக் கட்சிகள் பின்பற்றுகின்றன.

பிஹார் கட்சிகளின் தேர்வு முறை

பிஹாரின் கட்சித் தலைவர்கள் தம் குடும்பத்தினர் மற்றும் சமூகத்தினருக்கே முதல் வாய்ப்பளிக்கிறார்கள். இவர்கள் வேட்பாளர் தேர்விற்கு என ஒரு முறையை பின்பற்றுவது கிடையாது.

ஓங்கும் குடும்பத்தினர் கைகள்

எனினும், கட்சித் தலைவர்களின் குடும்பத்தினர் கைகளே வேட்பாளர் பரிந்துரைப்பில் ஓங்கி இருப்பது வழக்கம். வாய்ப்பு தரவில்லை எனில் கட்சி மாறி விடுவதாகக் கூறி வேட்பாளராவதும் பிஹாரில் அதிகம் உள்ளது.

புதியவர்களின் தொகை

நம் நாட்டின் இருதயமாகக் கருதப்படும் உ.பி.யின் பிராந்தியக் கட்சிகளின் தேர்வு மிகவும் வித்தியாசமானது. இதில் புதியவர்கள் தம்மிடம் உள்ள தொகையைப் பொறுத்தே தான் எந்தக் கட்சியிடம் போட்டியிட அணுகுவது என முடிவு செய்கிறார்கள்.

சமாஜ்வாதி தேர்வு முறை

பல வருடங்களாக கட்சியில் உள்ளவர்களுக்கு வாய்ப்பளிக்க அகிலேஷ்சிங் யாதவின் சமாஜ்வாதி தேர்வு செய்யும் முறை வேறு. இவர்களுக்கு தேர்தல் பிரச்சாரத்தில் செலவிட உள்ள தகுதியைஒ பொறுத்தே அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதாகவும் கருதப்படுகிறது.

கட்சிக்காக காசு பார்க்கும் நிலை

உ.பி.யில் போட்டியிட விரும்புபவர்களிடம் கட்சிக்காக காசு பார்க்கும் நிலையும் ஏற்படுவது உண்டு. இந்தவகைப் புகார் ஒவ்வொரு முறையும் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் மீது எழுகிறது.

அதிக தொகை அளிப்பவர்களுக்கு வாய்ப்பு

இதுபோன்ற நிலையில் அதிக தொகையைக் குறிப்பிடுபவர்களுக்கே அக்கட்சி வாய்ப்பு அளிப்பதாகவும் கூறப்படுகிறது. இதில், அக்கட்சி தேர்வு செய்பவரின் வெற்றியை பற்றிக்கூட கவலைப்படாமல் இருந்து விடுகிறதாம்.

ஒன்றில் கூட வெற்றி இல்லை

இதுவும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்ததால் கடந்த 2014 தேர்தலில் மாயாவதி கட்சியின் வேட்பாளர்களுக்கு ஒரு தொகுதியிலும் வெற்றி கிடைக்கவில்லை என்ற கருத்து உ.பி.யில் உள்ளது.

தேசியக்கட்சிகள் தேர்வு முறை

உ.பி. உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் போட்டியிடும் காங்கிரஸ், பாஜக போன்ற தேசியக் கட்சிகள் தன் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் முறை மற்றவைகளை விட வேறுபட்டது. இதில் அக்கட்சிகளின் தலைமையே இறுதி முடிவு எடுக்கிறது.

வேட்பாளர் தேர்வில் கோஷ்டி பூசல்

காங்கிரஸில் வேட்பாளர்கள் தேர்வில் கோஷ்டி பூசல் பூதாகரமாக வெளிப்படுவது உண்டு. மாநில நிர்வாகம் வேட்பாளர்களை வரிசைப்படுத்தி தலைமைக்கு பரிந்துரைப்பது முறையாக உள்ளது.

ஓங்கிய கோஷ்டியின் கை

காங்கிரஸ், தமிழகத்தில் மட்டும் திராவிடக் கட்சிகளைப் போல், விருப்ப மனுக்களை பெறத் தொடங்கியுள்ளது. எனினும், காங்கிரஸுக்காக ஒரு மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்களை வைத்து அங்கு எந்த கோஷ்டியின் கை ஓங்கியுள்ளது என அறியப்படும்.

எம்ஜிஆர் தேர்ந்தெடுத்த காங்கிரஸ் வேட்பாளர்

தமிழக காங்கிரஸில் ஒருகாலத்தில் தொகுதியை மட்டும் அக்கட்சியும் அதன் வேட்பாளர்களை கூட்டணியின் தலைவராக இருந்த எம்.ஜி.ஆரும் தேர்ந்தெடுத்தது உண்டு. இந்த முறையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

வேட்பாளருக்கு தேடப்படும் தொகுதி

மாற்றத்தின்படி, காங்கிரஸில் போட்டியிட கூட்டணிக்கட்சி தலைவர்களின் உதவியை வேட்பாளர்கள் நாடும் வழக்கம் தொடங்கிவிட்டதாகப் புகார் உள்ளது. சிலசமயம், வேட்பாளர்களைத் தேர்வு செய்து விட்டு பிறகு அவருக்காக தொகுதிகளை தேடும் வழக்கமும் காங்கிரஸில் உள்ளது.

ராகுலுக்கு வேண்டியவர்கள்

இதுபோன்ற திரைமறைவு முறைகளில் ராகுலுக்கு வேண்டியவர்கள் வேட்பாளர்களாகி விடுவதும் சேர்ந்துள்ளது. ஆனால், எந்த மாநிலத்திலும் வேட்பாளர்களை அழைத்து தலைமை நேரடியாகப் பேசுவது காங்கிரஸில் குறைவு.

தேர்தல் பொறுப்பாளர் பங்கு

வேட்பாளர் தேர்வுகளில் அதிக உழைப்பைச் செலவிடும் கட்சியாக பாஜக உள்ளது. இதற்காக தன் தொகுதிகளின் பகுதி, வட்டம், மாவட்ட நிர்வாகிகளை அழைத்து அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் பேசுகிறார்.

பாஜகவிலும் குறைகள்

இதில் தேர்வு செய்யப்படும் வேட்பாளர்களை பாஜகவின் ஆட்சிமன்றக்குழுவும் அழைத்துப் பேசிய பின் வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது. இதனால், ஜனநாயக முறையை கட்சியிலும் தூக்கிப் பிடிப்பதாக மார்தட்டிக் கொள்ளும் பாஜகவில் பல குறைகள் உண்டு.

ஆர்எஸ்எஸ் தலையீடு

பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கின்(ஆர்எஸ்எஸ்) தலையீடு வேட்பாளர் தேர்வில் அதிகம் என்ற புகார் உள்ளது. தனது நீண்டகால ஆர்எஸ்எஸ் தொண்டர் மற்றும் நிர்வாகிகளுக்கு கட்சியினரை விட முக்கியத்துவம் அதிகம்.

பாஜகவின் வரலாறு

இது அக்கட்சியின் வேட்பாளர் தேர்வை பற்றிய வரலாற்றைப் புரட்டினால் பல உதாரணங்கள் கிடைக்கும்.  கடந்த 2017-ல் உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தன் இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது.

வேட்பாளரை மாற்றிய அமித் ஷா

மெயின்புரியில் வேட்பாளரை மாற்றி தன் நிர்வாகியை தேர்ந்தெடுக்க பாஜக தலைவர் அமித் ஷாவை வலியுறுத்தியது ஆர்எஸ்எஸ். இதனால், வேறுவழியின்றி அந்த வேட்பாளரை அழைத்த அமித் ஷா தோற்றாலும் பரவாயில்லை எனக் கருதி ஆர்எஸ்எஸ் காட்டிய நபருக்கு வாய்ப்பளித்தார்.

ஆர்எஸ்எஸ் பெருமை

ஆனால், அந்த வேட்பாளர் வெற்றி பெற்று பாஜக தலைமையை ஆச்சர்யத்தில் மூழ்கடித்து விட்டார். பிறகு ஆசிபெற வந்தவரிடம் அமித் ஷா, ஆச்சர்யப்பட்டு வாழ்த்தியதாக உ.பி. ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பெருமைப்பட்டுக் கொள்வது உண்டு.

இடதுசாரிகளில் அடிமட்டத் தொண்டனுக்கும் பங்கு

இடதுசாரிகளில் வேட்பாளர் தேர்வில் அடிமட்டத் தொண்டனுக்கும் பங்கு அளிக்கப்படுகிறது. மாநில நிர்வாகத்தால் எடுக்கப்படும் இறுதி முடிவை தேசிய தலைவர்கள் ஏற்கின்றனர். ஆனால், மற்றதில் போல் கட்சியில் இல்லாதவர் வேட்பாளராக முடியாது.

மக்கள் செல்வாக்கு முக்கியம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் வேட்பாளர்களுக்கான செலவுத்தொகையை அதன் கட்சித் தலைமை அளிக்கிறது. இதனால், அவர்கள் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்கள் மக்கள் செல்வாக்கு உள்ளவரா எனவும், கட்சிப் பணிகளில் காட்டும் தீவிரம் முக்கியமாகவும் பார்க்கின்றனர்.

மாநில முடிவை ஏற்கும் தேசிய நிர்வாகம்

வாக்குச்சாவடி பகுதியினரும் பங்கு வகிக்கும் மாவட்ட கவுன்சிலின் பரிந்துரையை ஏற்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் வேட்பாளர்களே செலவை ஏற்க வேண்டும். இதன் தேசிய நிர்வாகக்குழு முடிவு எடுக்கும் அதிகாரத்தை மாநிலத்திற்கு அளித்து விடுகிறது.  

பொதுமக்களே பொறுப்பு

இதுபோல், பல்வேறு கட்சிகளின் வேட்பாளர் தேர்வுகளில் வாரிசு அரசியல் மற்றும் பிரச்சார செலவு ஆகிய இரண்டு விஷயம் பெரும்பாலான கட்சிகளால் கடைப்பிடிக்கப்படுகிறது. இதில், பிரச்சார செலவு செய்யும் வேட்பாளர் தேர்விற்கு தேர்தலில் வாக்களிக்கும் பொதுமக்கள் மட்டுமே காரணம் அன்றி அரசியல்வாதிகள் அல்ல என்பது அனைவரும் அறிந்த உண்மை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x