Published : 27 Mar 2019 05:52 AM
Last Updated : 27 Mar 2019 05:52 AM
பெங்களூரு தெற்கு தொகுதியில் தொடர்ந்து 6 முறை வென்ற மத்திய அமைச்சர் அனந்த்குமார் கடந்த நவம்பரில் உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து வருகிற மக்களவைத் தேர்தலில் அந்த தொகுதியில் போட்டியிட அனந்த்குமாரின் மனைவி தேஜஸ்வினி விருப்பம் தெரிவித்தார். கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா தேஜஸ்வினிக்கு சாதகமான பதிலை அளித்ததால் கடந்த இரு மாதங்களாக தேர்தல் பணிகளை தேஜஸ்வினி மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் பாஜக மேலிடம் கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை மூன்று கட்டங்களாக வெளியிட்டது. அதில் பிற தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், பெங்களூரு தெற்கு தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது. நேற்று வேட்பு மனு தாக்கல் நிறைவடைய இருந்த நிலையில், அந்த தொகுதியில் தேஜஸ்வி சூர்யா என்பவர் போட்டியிடுவார் என பாஜக தலைமை அறிவித்துள்ளது.
இதனால் அதிருப்தி அடைந்த தேஜஸ்வினி கட்சி தலைமை தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி, பெங்களூருவில் உள்ள தனது வீட்டுக்கு முன்பாக தர்ணாவில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக அனந்த்குமாரின் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் எடியூரப்பா, தேஜஸ்வினியை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு சமாதானப்படுத்தினார்.
இதனிடையே தேஜஸ்வி சூர்யா நேற்று பெங்களூரு தெற்கு தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 28 வயதான அவர் வழக்கறிஞராக பணியாற்றிவருகிறார். ஆர்எஸ்எஸ் குடும்பத்தை சேர்ந்த இவர் சிறுவயதில் இருந்தே ஆர்எஸ்எஸ், ஏபிவிபி, பாஜக இளைஞர் அமைப்பு உள்ளிட்டவற்றில் உறுப்பினராக இருந்துள்ளார். சிறந்த பேச்சாளரான இவர், கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் மோடிக்கு ஆதரவாக பெங்களூருவில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது எதிர்க்கட்சியினரை விளாசிய அவரது பேச்சுத்திறனை பாஜக மேலிடத் தலைவர்கள் கண்டு வியந்தனர். அதன் அடிப்படையிலே இந்த வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT