Last Updated : 22 Mar, 2019 05:22 PM

 

Published : 22 Mar 2019 05:22 PM
Last Updated : 22 Mar 2019 05:22 PM

சன்னி தியோல், பூனம் தில்லான், ஹர்பஜன்சிங்; பஞ்சாபில் பாலிவுட் நட்சத்திரங்களைப் போட்டியிட வைக்க பாஜக யோசனை

பஞ்சாபில் பாலிவுட் நட்சத்திரங்களை போட்டியிட வைக்க பாஜக யோசனை செய்கிறது. அக்கட்சியின் பஞ்சாப் நிர்வாகிகள் சார்பில் திரை நட்சத்திரங்களான சன்னி தியோல் மற்றும் பூனம் தில்லான், கிரிக்கெட் வீரர் ஜர்பஜன்சிங் ஆகியோர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

மக்களவைக்காக பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக மே 19-ல் நடைபெறுகிறது. இதில், பாஜக மூன்றிலும், மீதியுள்ளவற்றில் அதன் கூட்டணியான சிரோமணி அகாலி தளம் கட்சியும் போட்டியிட முடிவாகி உள்ளது. அம்ருத்ஸர், குருதாஸ்பூர் மற்றும் ஹோஷியார்பூர் ஆகிய தொகுதிகள் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், ஹோஷியார்பூரில் மட்டும் பாஜகவின் எம்.பி. தற்போது உள்ளார்.

மூன்று வேட்பாளர்களைத் தேந்தெடுத்து தம் தலைமைக்குப் பரிந்துரைக்க, பஞ்சாப் பாஜக சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வரும் பஞ்சாப் நட்சத்திரங்களைப் போட்டியிட வைப்பது பலன் தரும் என அதில் ஆலோசிக்கப்பட்டது.

இறுதியில் குருதாஸ்பூரில் தர்மேந்திராவின் மகனான சன்னி தியோல் (62),  நடிகை பூனம் தில்லான் (56) ஆகியோர் பெயர்கள் திரைநட்சத்திரங்களில் இறுதி செய்யப்பட்டன. இவர்களுடன் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன்சிங் பெயர் அம்ருத்ஸர் தொகுதிக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் கட்சியை எதிர்கொள்ள பொதுமக்கள் முன் பிரபலமாக இருப்பவர்கள் வேட்பாளர்களாக்கினால் வெற்றி நிச்சயம் என பாஜக கருதுகிறது. இதற்கு முன் பஞ்சாபின் குருதாஸ்பூர் தொகுதியில் மறைந்த பாலிவுட் நடிகரான வினோத் கன்னா பாஜக எம்.பி.யாக இருந்தார்.

இதுபோல், பாலிவுட் நட்சத்திரங்களை பாஜக மக்களவைக்கு போட்டியிட வைப்பது முதன்முறையல்ல. 2014-ல் தர்மேந்திராவின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான ஹேமாமாலினி உ.பி.யின் மதுராவில் எம்.பி.யானார்.

ஹேமாவிற்கு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் அகமதாபாத் கிழக்கு தொகுதியில் பிரபல குணச்சித்திர நடிகரான பரேஷ் ராவல் எம்.பி.யாக உள்ளார். சண்டிகரில் கிரண் கேர் பாஜக எம்.பி.யாக இருந்தார். தொலைக்காட்சி நடிகையான ஸ்மிருதி இரானி அமேதியில் போட்டியிட்டு ராகுல் காந்தியிடன் தோல்வி அடைந்தார்.

பிறகு மாநிலங்களவை உறுப்பினராக்கப்பட்டு மத்திய அமைச்சரானவருக்கு மீண்டும் அமேதியில் போட்டியிடுகிறார். போஜ்புரி மொழி திரைப்படத்தின் பிரபல நடிகரான மனோஜ் திவாரி டெல்லியின் எம்.பி.யாகவும் பாஜகவின் மாநிலத் தலைவராகவும் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x