Last Updated : 19 Mar, 2019 09:28 AM

 

Published : 19 Mar 2019 09:28 AM
Last Updated : 19 Mar 2019 09:28 AM

ரஃபேல் கொள்ளையில் சிக்கியதும் நாட்டையே காவலாளி ஆக்கிவிட்டார் மோடி: ’தி இந்து நாளிதழை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி விமர்சனம்

மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக மாநிலம் கலபுர்கியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அங்கு போட்டியிடும் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

கடந்த இரு நாட்களாக பாஜக தலைவர்கள் ''நான் சவுகிதார்''(காவலர்) என பிரச்சாரம் செய்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தன் பெயருக்கு முன் சவுகிதார் (காவலர் நரேந்திர மோடி) என மாற்றி, நானும் கூடநாட்டின் காவலாளி என பிரச்சாரம் செய்கிறார்.

ஆனால் அவர் கடந்த 5 ஆண்டுகளாக அனில் அம்பானி, அதானி, விஜய் மல்லையா, நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோருக்கு மட்டுமே காவலாளியாக இருந்துள்ளார். கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது ரஃபேல் போர் விமானம் தயாரிப்பதற்காக, கர்நாடகாவில் உள்ள பொதுத்துறை நிறுவனமான ஹெச்.ஏ.எல்- உடன் ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போது பிரான்ஸிடம் இருந்து வாங்கும் ஒரு விமானத்துக்கு ரூ. 526 கோடி என விலை நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் நாட்டை காப்பதாக கூறும் மோடி ஆட்சிக்கு வந்ததும் அனில் அம்பானியை பிரான்ஸுக்கு அழைத்து சென்று அவருக்கு ஒப்பந்தத்தை மாற்றி விட்டார். இதனால் ஹெச்.ஏ.எல். நிறுவனத்தின் வருமானம் பாதிக் கப்பட்டு, ஏராளமானோர் வேலை இழந்தனர்.

காங்கிரஸ் ஆட்சியில் ரூ. 526 கோடிக்கு போடப்பட்ட ஒப்பந்தம் மோடியின் ஆட்சியில் ரூ. 1600 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அனில் அம்பானிக்கு மோடி ரூ. 30 ஆயிரம் கோடியை தூக்கி கொடுத்துள்ளார். இதனை,‘தி இந்து' நாளிதழ் புலனாய்வு செய்து ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது.

இந்த ரஃபேல் கொள்ளையில் ஈடுபட்டிருந்த போது சிக்கியதும், பிரதமர் மோடி ஒட்டுமொத்த நாட்டையே காவலாளி ஆக்கிவிட்டார். அதற்கு முன் ஒருமுறை கூட காவலாளி என சொல்லவில்லை. இப்போது நான் பிரதமர் இல்லை, காவலாளி என சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x