Published : 18 Mar 2019 09:09 AM
Last Updated : 18 Mar 2019 09:09 AM
அருணாச்சலப் பிரதேசத்தின் அஞ்சவ் மாவட்டத் தலைநகர் ஹயுலியாங். இங்கிருந்து 39 கி.மீ. தொலைவில் உள்ளது மலோகம் கிராமம். இந்த இடம்அருணாச்சல் - சீன எல்லையில் உள்ளது. இங்கு செல்ல சரியான பாதைகள் கிடையாது. கரடுமுரடான மலைப் பாதைதான். இங்கு சொகேலா தயாங் என்ற பெண் குழந்தைகளுடன் வசிக்கிறார்.
மலோகம் கிராமத்தில் சில குடும்பங்களே வசிக்கின்றன. இங்குள்ள வாக்காளர்கள் வேறுவாக்குச் சாவடிகளில் தங்கள்பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். ஆனால், 39 வயது சொகேலா மட்டும் பெயரை பதிவு செய்யவில்லை. கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மலோகம் பகுதியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடி யில் சொகேலா, அவரது கணவர் ஜனிலும் தயாங் ஆகிய 2 பேர் மட்டுமே வாக்களித்தனர்.
இந்த மக்களவைத் தேர்தலில் தன்னுடைய பெயரை மட்டும் ஏதோ சில காரணங்களுக்காக ஜனிலும் தயாங் வேறு வாக்குச்சாவடிக்கு மாற்றிக் கொண்டுள் ளார். அதனால், இருக்கும் ஒரேஒரு வாக்காளர் சொகேலாவுக் காக மலோகம் பகுதியில் வாக்குச் சாவடி அமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக தேர்தல் அதிகாரிகள் தேர்தல் பொருட்களை எடுத்துக் கொண்டு கடினமான மலைப் பகுதியில் நடந்தே செல்ல உள்ளனர்.
இதுகுறித்து துணை தலைமை தேர்தல் அதிகாரி லிகென் கோயு கூறும்போது, ‘‘மலோகம் வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவன்று தேர்தல் அதிகாரிகள், பாதுகாவலர்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இருப்பார்கள். வாக்களிக்க சொகேலா எப்போது வருவார் என்று தெரியாது. விரைந்து வந்து வாக்களிக்கும்படி அவரையாரும் கட்டாயப்படுத்த முடியாது’’ என்றார்.
8 லட்சம் வாக்காளர்கள்
அருணாச்சலில் சட்டப் பேரவை மற்றும் மக்களவைக்கு ஒரே நேரத்தில் ஏப்ரல் 11-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் 4 லட்சம் பெண்கள் உட்பட மொத்தம் 7.94 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்த வரையில் பல வாக்குச்சாவடிகளில் குறைந்த எண்ணிக்கையிலேயே வாக்காளர்கள் உள்ளனர். அருணாச்சல பிரதேசத்தில் மலோகம் வாக்குச் சாவடிதவிர பக்கி - கெசாங் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட லம்டா வாக்குச் சாவடியில் வெறும்6 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT