Published : 13 Mar 2019 05:27 PM
Last Updated : 13 Mar 2019 05:27 PM
பிரிவினையின் போது முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கே சென்றிருக்கலாம் என சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம்கான் கூறியது சர்ச்சையாகி உள்ளது. அவர் மக்களவைத் தேர்தலை ரம்ஜான் மாதம் நடத்துவதாக எழுந்த புகாரில் கூறிய கருத்தில் இதைத் தெரிவித்தார்.
கடந்த ஞாயிறு அன்று மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்த மக்களவைக்கான தேதிகள் ரம்ஜான் மாதத்தில் அமைந்துள்ளன. இதனால், முஸ்லிம்கள் வாக்களிப்பதில் பிரச்சினை இருக்கும் எனப் புகார் எழுந்தது.
இதன் மீது கருத்து கூறிய ஆசம்கான் கூறும்போது, ''ரம்ஜான் மாதத்தை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளாதது ஏன்? தம் சொந்த நாட்டில் முஸ்லிம்கள் வாடகைதாரர்களாக கருதப்படுவது ஏன்?'' எனக் கேள்வி எழுப்பினார்.
இது குறித்து ஆசம் மேலும் கூறுகையில், ''1947-ன் பிரிவினையில் பல முஸ்லிம்கள் தாமாகவே இந்தியாவில் தங்கி விட்டனர். இதைவிட அனைவரும் பாகிஸ்தானுக்கே சென்றிருக்கலாம். தற்போது இந்தியாவில் முஸ்லிம்கள் ஒரு வாடகைதாரர்களாகவே பாவிக்கப்படுகிறார்கள். எங்களை இரண்டு அல்லது மூன்றாவது குடிமகன்களாக்குவதாக ஆர்.எஸ்.எஸ் கூறி வந்தது'' எனக் குறிப்பிட்டார்.
ஆசம்கானின் இந்தக் கருத்து வட இந்தியாவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. முஸ்லிம்கள் மறந்து போய் அமைதியாக வாழும் நிலையில் பழைய வரலாற்றை கிளறி ஆசம்கான் பலரது கோபத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.
இந்தக் குறிப்புகளை ஆசம்கான் இப்போது கூறுவது தேவையில்லாதது எனவும், சர்ச்சையைக் கிளப்பி அரசியல் லாபம் அடையவே ஆசம்கான் இதைப் பேசியிருப்பதாகவும் உ.பி. முஸ்லிம்கள் புகார் கூறியுள்ளனர்.
இவ்வாறு ரம்ஜானையும், முஸ்லிம்களையும் அரசியல் கட்சிகள் எதனுடனும் சம்பந்தப்படுத்தி பேசுவது தவறு எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ரம்ஜான் மாதத்தில் எந்த மாற்றமும் இன்றி வழக்கம்போல் முஸ்லிம்கள் தம் பணியில் ஈடுபடுவதால் தேர்தலிலும் பாதிப்பு இல்லை எனவும் கூறியுள்ளனர்.
உ.பி.யில் பலமுறை ஆட்சி செய்த சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான ஆசம்கான் அம்மாநில முஸ்லிம் தலைவராகக் கருதப்படுகிறார். அவர் முஸ்லிம்களின் விவகாரத்தில் இவ்வாறு பேசுவது அவ்வப்போது சர்ச்சைக்குள்ளாகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT