Published : 27 Mar 2019 05:42 AM
Last Updated : 27 Mar 2019 05:42 AM

பாஜக கூட்டணி 300 தொகுதிகளை கைப்பற்றும்: புதிய கருத்துக் கணிப்பில் தகவல்

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 300 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று ஐஏஎன்எஸ்-சிவோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஐஏஎன்எஸ்-சிவோட்டர் இணைந்து நடத்திய முதல்கட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் கடந்த 10-ம் தேதி வெளி யிடப்பட்டன. அப்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 264, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 141 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதே ஐஏஎன்எஸ்-சிவோட்டர் கூட்டணி இரண்டாம் கட்டமாக கருத்துக் கணிப்பு நடத்தி கடந்த 24-ம் தேதி முடிவுகளை வெளியிட்டது. இதில் பாஜக கூட்டணி 300 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான முழுமையான விவரங்கள் வருமாறு:

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 42 சதவீத வாக்குகள் கிடைக்கும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 30.4 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைக்கும்.

உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாஜக கூட்டணி 28, சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி 48, காங்கிரஸ் கூட்டணி 4 தொகுதிகளில் வெற்றி பெறும். பிஹாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கு 36, காங்கிரஸ் கூட்டணிக்கு 4 இடங்கள் கிடைக்கும். மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் பாஜக கூட்டணி 34, காங்கிரஸ் கூட்டணி 14 இடங்களைக் கைப்பற்றும்.

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் 34, பாஜக 8 இடங்களைக் கைப் பற்றும். காங்கிரஸுக்கும் இடதுசாரிகளுக் கும் ஓரிடம் கூட கிடைக்க வாய்ப்பில்லை. மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 தொகுதிகளில் பாஜக 23, காங்கிரஸ் 6 தொகுதிகளில் வெற்றி பெறும்.

குஜராத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளில் பாஜக 24, காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி பெறும்.

ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் பாஜக கூட்டணி 17, காங்கிரஸ் 8 இடங்களில் வெற்றி பெறும். ஹரியாணாவில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் பாஜக கூட்டணி 7, காங்கிரஸ் 3 தொகுதிகளில் வெற்றி பெறும். ஒடிசாவில் மொத்தமுள்ள 21 தொகுதிகளில் ஆளும் பிஜு ஜனதா தளம் 10, பாஜக 11 இடங்களைக் கைப்பற்றும்.

டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும்.

ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 15 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 10, பாஜக கூட்டணி 4 இடங்களைக் கைப்பற்றும். பஞ்சாபில் மொத்தமுள்ள 13 தொகுதிகளில் காங்கிரஸ் 12, பாஜக கூட்டணி ஒரு தொகுதியைக் கைப்பற்றும். சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 12 தொகுதிகளில் காங்கிரஸ் 6, பாஜக 5 இடங்களைக் கைப்பற்றும். தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்புள்ளது. திமுக- காங்கிரஸ் கூட்டணி 31 இடங்களைக் கைப்பற்றக்கூடும்.

ஆந்திராவில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் ஆளும் தெலுங்கு தேசத்துக்கு 15 இடங்களும் ஒய்எஸ்ஆர் கட்சிக்கு 10 இடங்களும் கிடைக்கும். இந்த மாநிலத்தில் காங்கிரஸ், பாஜகவுக்கு ஓரிடம் கூட கிடைக்காது.

தெலங்கானாவில் மொத்தமுள்ள 17 தொகுதிகளில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி 16 இடங்களைக் கைப்பற்றும். ஏஐஎம்ஐஎம் கட்சி ஒரு தொகுதியில் வெற்றி பெறும். பாஜக, காங்கிரஸுக்கு ஓரிடம்கூட கிடைக்க வாய்ப்பில்லை. கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணிக்கு 17 இடங்களும் இடதுசாரி கூட்டணிக்கு 3 இடங்களும் கிடைக்கலாம். பாஜகவுக்கு ஓரிடம் கூட கிடைக்க வாய்ப்பில்லை. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் பாஜக 15 இடங்களையும் காங்கிரஸ் கூட்டணி 13 இடங்களையும் கைப்பற்றும்.

இதன்படி மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 261, காங்கிரஸ் கூட்டணிக்கு 143 இடங்கள் கிடைக்கும்.

தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி

தேர்தலுக்குப் பிறகு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 10, தெலங்கானா ராஷ்டிர சமிதி 16, பிஜு ஜனதா தளம் 10, மிசோ தேசிய முன்னணி 1 ஆகியவை பாஜக கூட்டணியில் சேர வாய்ப்புள்ளது. இதன் மூலம் பாஜகவுக்கு 37 இடங்கள் கிடைக்கும். ஒட்டுமொத்தமாக பாஜக கூட்டணிக்கு 298 இடங்கள் கிடைக்கும். இது 300-ஐ தாண்டக்கூடும்.

இவ்வாறு கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x