Published : 04 Mar 2019 09:10 AM
Last Updated : 04 Mar 2019 09:10 AM
தெலங்கானாவில் கடந்த வருடம் முன்கூட்டியே நடந்த தேர்தலில் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. டிஆர்எஸ் உத்தியை பின்பற்றி மக்களவையுடன் தங்கள் கட்சி ஆளும் மகாராஷ்டிரா, ஹரியாணா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் சேர்த்து ஒன்றாக தேர்தல் நடத்த பாஜக திட்டமிடுகிறது.
செலவுகளை குறைக்கும் வகையில் ஒரே சமயத்தில் மக்களவைக்கும் சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்த நிதி ஆயோக் பரிந்துரை செய்திருந்தது. பிரதமர் நரேந்திர மோடியும் அதை ஏற்று அமலாக்க விரும்பினார். வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் நேரலாம் என அவ்வப்போது பேச்சுகள் எழுந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய தேர்தல் ஆணையம், மக்களவை தேர்தலுக்கான பணிகள் மட்டுமே நடைபெறுவதாகவும், சட்டப்பேரவைகளின் தேர்தல்களுக்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறி இருந்தது. அதேநேரம், பாஜக ஆளும் மாநிலங்களான மகாராஷ்டிரா, ஹரியாணா மற்றும் ஜார்க்கண்டின் சட்டப்பேரவைகள் முன்கூட்டியே கலைக்கப்படுவதாகப் பேசப்படுகிறது. இவ்வாறு நடைபெற்றால் அந்த மூன்று மாநிலங்களிலும் மக்களவையுடன் சேர்த்து தேர்தல் நடத்துவதைத் தவிர மத்திய தேர்தல் ஆணையத்திற்கு வேறு வழியில்லை.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் பாஜகவின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘‘மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று நம்புகிறோம். விவசாயிகளுக்கு நிதியுதவி, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை ஆகியவற்றில் எங்களுக்கு மக்களின் ஆதரவு கிடைத்து வருகிறது. இது மக்களவைத் தேர்தலில் எங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த சாதகமான நிலையோடு, 3 மாநிலங்களின் சட்டப்பேரவைகளையும் கலைத்துவிட்டு, மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து முன்கூட்டியே தேர்தல் நடத்தினால் அந்த மாநிலங்களில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கலாம் என்று கருதுகிறோம்’’ எனத் தெரிவித்தனர்.
கடந்த வருடம் டிசம்பரில் நடந்த நான்கு மாநிலங்களின் தேர்தல் சூழலை உணர்ந்து தெலங்கானா சட்டப்பேரவையை முதல்வர் கே.சந்திரசேகர ராவ் முன்கூட்டியே கலைத்தார். இதன் பின்னணியில், வரும் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவையுடன் சேர்த்து தேர்தல் நடைபெற்றால் அதன் தாக்கம் தம் கட்சிக்கு ஏற்படும் அச்சம் சந்திரசேகர ராவுக்கு இருந்தது. எனவே, தெலங்கானாவில் முன்கூட்டியே சட்டப்பேரவையை கலைத்து, ராஜஸ்தான், ம.பி. உள்ளிட்ட நான்கு மாநிலங்களுடன் சேர்ந்து நடைபெற்ற தேர்தலில் அவரது டிஆர்எஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதேபோன்ற திட்டத்தை வகுத்து மக்களவைத் தேர்தலுடன் மகாராஷ்டிரா உட்பட 3 மாநில சட்டப்பேரவைகளுக்கும் முன்கூட்டியே தேர்தல் நடத்தி அந்த மாநிலங்களில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக திட்டமிட்டு வருகிறது.
பாஜக வழியில் அதிமுகதமிழகத்தில் ஆளும் அதிமுகவும் இதேபோன்ற லாபம் பெற முயல்கிறது. தமிழகத்தில் 21 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக உள்ளன. இதற்கான இடைத்தேர்தலில் குறைந்தபட்சம் 9 தொகுதிகளில் வெற்றி கிடைத்தால்தான் தற்போதைய ஆட்சிக்கு பிரச்சினையில்லாமல் இருக்கும். மக்களவைத் தேர்தலின் முடிவுகள் தமிழகத்தில் எப்படி இருக்கும் என்று தெரியாது. 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடைபெற்றால் அதன் தாக்கம் இடைத்தேர்தலில் இருக்கும் என அதிமுக அஞ்சுகிறது. இதனால், மக்களவையுடன் சேர்த்து, காலியான 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடப்பதே தனக்கு பாதுகாப்பு என அதிமுக கருதுகிறது.
மக்களவையுடன் சேர்த்து 21 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பும் வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன. இரட்டை இலை சின்னம் மீதான வழக்கிலும் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியாகி இருப்பதால் அதிமுக மகிழ்ச்சியுடன் உள்ளது. மேலும், தங்கள் கூட்டணியில் பாமக உள்ளிட்ட சில கட்சிகளின் பலமும் இடைத்தேர்தலில் பலன் அளிக்கும் என்று அதிமுக கருதுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT