Published : 02 Mar 2019 09:53 AM
Last Updated : 02 Mar 2019 09:53 AM
உத்தரபிரதேசத்தில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ் மறுபரிசீலனை செய்து வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உ.பி.யில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் சூழலில் காங்கிரஸ் உள்ளது. இதன் காரணமாக, தம்முடன் ஒத்த கொள்கைகள் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
அம்மாநிலத்தின் பெரிய கட்சிகளான அகிலேஷ் சிங் யாதவின் சமாஜ்வாதியும், மாயாவதியின் பகுஜன் சமாஜும் கூட்டணி அமைத்து, ராஷ்டிரிய லோக் தளம் கட்சியையும் தம்முடன் சேர்த்துக் கொண்டன.
ஆனால், காங்கிரஸை அக்கட்சிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே, மீதம் உள்ளவை சிறிய கட்சிகள் மட்டுமே. இதில், ஷிவ்பால் யாதவின் பிரகதீஷல் சமாஜ்வாதி லோகியா கட்சி (பிஎஸ்பிஎல்), கேசவ் தேவ் மவுரியாவின் மஹான் தளம், முகம்மது அயூபின் அமைதி கட்சி உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
சமாஜ்வாதியின் முக்கிய தலைவரும், முலாயம் சிங்கின் சகோதரருமான ஷிவ்பால், அக்கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்சியை துவக்கியவர்.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர்களாக பிரியங்கா வத்ரா, ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோர் உ.பி.யின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதி பொறுப்பாளர்களாக பொறுப்பேற்றனர்.
ஒவ்வொரு கட்சியுடன் கூட்டணி குறித்து பேசிய அவர்கள், மஹான் தளம் கட்சியுடன் மட்டும் கூட்டணி வைக்க சம்மதித்தனர். இந்தச் சூழலில், முராதாபாத் கூட்டத்தில் பேசிய மஹான் தளம் தலைவர் கேசவ், ‘போட்டியிடும் வேட்பாளர் நல்லவரா, கெட்டவரா? என யாரும் பார்க்கக் கூடாது. அவர் பாகிஸ்தானை சேர்ந்தவராக இருப்பினும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள்’ எனக் கூறி சர்ச்சையை கிளப்பினார்.
இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையேஏற்கெனவே பிரச்சினை ஏற்பட்டிருக்கும் சூழலில், கேசவின் பேச்சு காங்கிரஸுக்கு உ.பி.யில் தருமசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பது குறித்து காங்கிரஸ் மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து, ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் உ.பி. காங்கிரஸின் நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘சிறியகட்சிகளின் தலைவர்கள் பேச்சை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இவர்கள்தான் எங்களால் லாபம் அடைவார்கள் என ஒரு தனியார் நிறுவன புள்ளிவிவரம் கூறியுள்ளது. எனவே, உ.பி.யில் காங்கிரஸ் எவருடனும் சேராமல் தனித்துப் போட்டியிடும் வாய்ப்புகள் உள்ளன’ என அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, லக்னோவில் நான்கு நாட்கள் தங்கியிருந்த பிரியங்கா, சிறிய கட்சித் தலைவர்கள் அனைவருடனும் கூட்டணி தொடர்பாக முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்திவிட்டார்.
மேலும், பாஜக தலைமையிலான கூட்டணியில் இருக்கும் மத்திய மருத்துவ நலத்துறை இணை அமைச்சரும், அப்னா தளம் கட்சியின் தலைவருமான அனுபிரியா படேல் மற்றும் உ.பி. அமைச்சரான ராஜ்பரின் சுஹல்தேவ் பாரதிய சமாஜ் ஆகிய கட்சிகளுடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.
இந்தக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ் மறுபரிசீலனை செய்ய உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT