Published : 24 Mar 2019 07:31 AM
Last Updated : 24 Mar 2019 07:31 AM

ஏழைகளுக்கு 4 சிலிண்டர்கள இலவசம்: ஆந்திராவில் காங். தேர்தல் அறிக்கை

ஆந்திர மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்நிலையில், அம்மாநிலத்தில் தனித்து களம் இறங்கும் காங்கிரஸ் கட்சி, தமது தேர்தல் அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர் ஆகியோருக்கு வட்டி இல்லா வங்கிக் கடன் வழங்கப்படும். விவசாயி உற்பத்தி பொருட்ளின் செலவினை ஈடுகட்ட ரூ. 5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்.

கல்வி உரிமை சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும். ராஜீவ் ஆரோக்கிய ஸ்ரீ மருத்துவத் திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை இலவச மருத்துவ சேவை அளிக்கப்படும். கார்ப்பரேட் மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நெசவாளர்களுக்கு ஜிஎஸ்டி ரத்து செய்யப்படும்.

பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வரப்படும். ஏழைகளுக்கு ஆண்டுக்கு 4 காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். 70 வயது நிரம்பியவர்களுக்கு 3 ஆயிரம் மாத உதவித்தொகை வழங்கப்படும். தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x