Last Updated : 23 Mar, 2019 09:18 AM

 

Published : 23 Mar 2019 09:18 AM
Last Updated : 23 Mar 2019 09:18 AM

சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்ததால் உ.பி.யில் காங்கிரஸ் தொண்டர்கள் அதிருப்தி

மக்களவை தேர்தலில் உத்தரபிரதேசத்தில் சிறிய கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளதால் அக்கட்சியின் தொண்டர்கள் அதிருப்திக்கு உள்ளாகி விட்டனர். இதன் மீது விசாரணை நடத்துமாறு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவிற்கு புகார் அனுப்பியுள்ளனர்.

உ.பி.யின் கிழக்குப் பகுதி பொறுப்பை ஏற்ற பிரியங்கா வத்ரா, சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க முடிவு செய்திருந்தார். மஹான் தளம் எனும் கட்சியுடன் முதலாவதாக கூட்டு சேர்த்தார். இரண்டாவதாக, கிருஷ்ணா பட்டேல் தலைமையிலான அப்னா தளம் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் அளித்து காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. இப்போது, ஏழு தொகுதிகள் அளித்து உபேந்திரா குஷ்வாஹா தலைமையிலான ஜன் அதிகார் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டு சேர்ந்துள்ளது. இது உ.பி. காங்கிரஸ் தொண்டர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஏனெனில், தேசிய கிராம சுகாதாரநலத் திட்டத்தில் உ.பி.யில் நடைபெற்ற ஊழலில் உபேந்திர குஷ்வாஹா சிக்கியிருந்தார். இதன் ஆதாரமாக அவரது கைப்பேசி குரல் பதிவை காங்கிரஸ் வெளியிட்டு சிக்க வைத்திருந்தது. இதற்காக குஷ்வாஹா சுமார் 7 வருடங்கள் சிறையில் இருந்தார். இதுபோன்ற ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த கூட்டணியில் சேர்க்க சிறிய கட்சி தலைவர்களுக்கு பணப்பரிவர்த்தனையும் நடந்திருப்பதாக உ.பி. காங்கிரஸ் தலைவர்கள் மீது பிரியங்காவிடம் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் உ.பி. மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘குஷ்வாஹாவின் ஊழல் விவகாரத்தை பிரியங்காவிடம் மறைத்து அவருடன் கூட்டணி அமைக்க சில முக்கிய உ.பி. நிர்வாகிகள் பரிந்துரைத்துள்ளனர். கூட்டணியில் சேர்க்க சில உ.பி. காங்கிரஸ் தலைவர்கள் சிறிய கட்சிகளுக்கு பணமும்அளித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மீது விசாரணை நடத்தி முடிவு எடுக்கும்படியும் அவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.’ எனத் தெரிவித்தனர்.

அதன் தலைவர் கேசவ் தேவ் மவுரியாவிற்கு ஒரு தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. இதன் பின்னணியில் அவர் பணத்தை பெற்று அதற்கு சம்மதித்ததாகக் கூறப்படுகிறது. இந்த ரகசியத் தகவலை மவுரியா தனது நண்பர்களிடம் பகிரும் குரல்பதிவும் உ.பி.யில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த மவுரியா தனது தவறை சமாளிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். குஷ்வாஹாவின் ஜன் அதிகார் கட்சிக்கு அளித்தது போல் தனக்கும் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என பிரியங்காவிடம் வலியுறுத்தத் துவங்கி உள்ளார்.

இதனிடையே, ஐந்து தொகுதிகளில் மட்டும் ஜன் அதிகார் கட்சியில் பாத்திரம் சின்னத்தில் குஷ்வாஹாவின் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் இதன் வேட்பாளர் பட்டியலில் தன் மனைவி ஷிவ் கன்யாவிற்கு சந்தவுலியிலும், கட்சி நிறுவனரும் தனது சகோதரருமான ஷிவ் சரண் சிங்கிற்கு ஜான்ஸியும், அவரது மகனான சந்திரசேகர் சிங்கிற்கு பஸ்தியும் ஒதுக்கியுள்ளார். ஏட்டாவில் மட்டும் கட்சி நிர்வாகியான சூரத் சிங் ஷக்கியாவை போட்டியிட வைத்துள்ளார் குஷ்வாஹா. ஒரு தொகுதிக்கு வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. மீதியுள்ள இரண்டு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக குஷ்வாஹா கட்சியினர் போட்டியிடுகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x