Published : 28 Feb 2019 09:06 AM
Last Updated : 28 Feb 2019 09:06 AM
கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி நடைபெறுவதால், மக்களவைத் தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் என கடந்த ஜூலையில் அறிவிக்கப்பட்டது. கடந்த இரு மாதங்களாக இரு கட்சி தலைவர்களும் தொகுதி பங்கீடு தொடர்பாக, 3 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர். மஜத மாநிலத் தலைவர் எச்.விஸ்வநாத், பொதுப்பணித் துறை அமைச்சர் எச்.டி.ரேவண்ணா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ், துணைமுதல்வர் ஜி.பரமேஷ்வர் ஆகியோர் பங்கேற்ற இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.
இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்த போது, ‘‘கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் சரிபாதியாக மஜத 14 தொகுதிகளை கோரியது. இதற்கு காங்கிரஸ் மறுத்ததால் மஜத 12 தொகுதிக்கு இறங்கி வந்தது. இதனையும் ஏற்க மறுத்து காங்கிரஸ் தரப்பில் 4 முதல் 7 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது. கடந்த 3 மக்களவைத் தேர்தலிலும் மஜத 2-க்கும் மேற்பட்ட இடங்களில் கூட வெற்றிப்பெறவில்லை. எனவே 12 தொகுதிகளை ஒதுக்க வாய்ப்பே இல்லை.
அதே போல கடந்த தேர்தலில் காங்கிரஸ் வென்ற தொகுதிகளை விட்டுத்தர முடியாது. மஜத கோரிய மண்டியா, மைசூரு, தும்கூரு, ஹாசன், கோலார், சிக்பளாப்பூர், பெங்களூரு ஊரகம் உள்ளிட்ட தொகுதிகளையும் விட்டுத்தர முடி யாது என திட்டவட்டமாக கூறியது. இதனை மஜத நிர்வாகிகள் ஏற்க மறுத்து, தற்போது ஆட்சியில் இருப்பதால் அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் காங்கிரஸ் மேலிடம் அதனை ஏற்க மறுத்துவிட்டது''என்றனர்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி இன்னும் இறுதி ஆகாததால் கர்நாடக முதல் வர் குமாரசாமி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க முடிவு செய்துள்ளார். நேற்று முன் தினம் மாலையே டெல்லி செல்ல இருந்த அவர், ராகுல் காந்தி நேரம் ஒதுக்காததால் கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்தார். இன்னும் சில தினங்களில் ராகுல் காந்தி சந்திக்க நேரம் ஒதுக்குவதாக கூறியுள்ளதால் அப்போது டெல்லி செல்ல குமார சாமி திட்டமிட்டுள்ளார். ராகுல் காந்தியிடம் தங்கள் கட்சிக்கு 12 தொகுதிகளை கேட்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் மஜதவுக்கான தொகுதிகளை பெறு வது குறித்து முன்னாள் பிரதமர் தேவகவுடா குமாரசாமிக்கு நேற்று அறிவுரை வழங்கினார். ராகுலுடன் பேச்சுவார்த்தையின் மூலம் 12 தொகுதிகளையும், குறிப்பாக மண்டியா, ஹாசன், பெங்களூரு ஊர கம் உள்ளிட்ட தொகுதி களை பெற முடிவெடுத்துள்ளார். அதே வேளையில் மஜதவுக்கு மாநி லம் தழுவிய அளவில் செல்வாக்கு இல்லாததால் காங்கிரஸ் 12 தொகுதிகளை அளிக்காது என கூறப்படுகிறது.
இந்நிலையில் கர்நாடக காங் கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், ‘‘தொகுதி பங்கீடு குறித்து இரு கட்சிகளின் தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். அதில் முடிவு எட்டப்படாததால், இரு கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இறுதி முடி வெடுப்போம். கூட்டணியை பொறுத்தவரை எண்ணிக்கையை விட வெற்றி தான் முக்கியம். வெற்றி வாய்ப்பை அடிப்படையாக வைத்துதான் தொகுதியை பங்கீடு செய்ய முடியும்''என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT