Published : 28 Feb 2019 08:59 AM
Last Updated : 28 Feb 2019 08:59 AM

‘நான் தலித் என்பதால் முதல்வர் பதவி மறுக்கப்பட்டது- கர்நாடக துணை முதல்வர் பரமேஷ்வர் குற்றச்சாட்டு

கர்நாடகாவில் உள்ள தாவணகெவில் தலித் அரசியல் விடுதலைமாநாடு அண்மையில் நடைபெற்றது. இதில், அம்மாநில துணைமுதல்வர் பரமேஷ்வர் பங்கேற்றார்.

அவர் பேசியதாவது:

21-ம் நூற்றாண்டிலும் இந்திய சமூகத்தில் அனைத்து நிலைகளிலும் சாதி ரீதியான பாகுபாடு காட்டப்படுகிறது. கல்வியின் மூலம் உயரிய பதவியை அடைந்தாலும், தலித்துகள் சாதி ரீதியாகஒடுக்கப்படுகிறார்கள். காலம் மாறினாலும், ஆட்சிகள் மாறினாலும் தலித்துகளின் மீதான சாதி கொடுமை மட்டும் மாறாமல் இருக்கிறது.

அரசியலில் பெரிய பதவியை அடைந்தாலும், சாதி ரீதியாக பாகுபாடு காண்பிக்கப்படுகிறது. பொது மேடைகளில் சமூக நீதி பேசும் தலைவர்கள், உள்ளுக்குள் சாதி பாகுபாடு காட்டுகிறார்கள். காங்கிரஸில் கூட சிலர் தலித் தலைவர்களை வளர விடாமல் தடுக்கிறார்கள். நான் காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தபோது, தேர்தலில் வெற்றிப் பெற்றும் எனக்கு முதல்வர் பதவி வழங்கப்படவில்லை.

நான் தலித் என்பதால் மூன்றுமுறை முதல்வர் பதவி மறுக்கப்பட்டது. சுதந்திரம் அடைந் 70 ஆண்டுகள் ஆன பின்னரும், கர்நாடகாவில் இன்னும் தலித் ஒருவர் முதல்வர் நாற்காலியில் அமர முடியவில்லை.

என்னைப் போலவே, தலித் வகுப்பைச் சேர்ந்தபசவலிங்கப்பா, ரங்கநாத் போன்ற பெரும் தலைவர்களுக்கும் காங்கிரஸில் முதல்வர் பதவி வழங்கப்படவில்லை. அனைத்து தகுதிகள் இருந்தும் மூத்த தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவுக்கும் முதல்வர் பதவி வழங்கப்படவில்லை.

காங்கிரஸில் சிலர் தலித் தலைவர்களை வளர விடாமல் தடுப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகே, நான் துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். இதனை தடுக்கவும் சிலர் முயற்சித்தனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

சித்தராமையா மறுப்பு

பரமேஷ்வரின் இந்த கருத்து காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலர் அவரது கருத்தை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா மறுத்துள்ளார்.

பாஜக விமர்சனம்

இதுகுறித்து பாஜக மாநிலதலைவர் எடியூரப்பா கூறுகையில், ‘‘காங்கிரஸில் தலித்துகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை. தேவராஜ் அர்ஸ் காலத்தில் பசவலிங்கப்பாவுக்கு முதல்வர் பதவி தரப்பட‌வில்லை. 6 முறை எம்.எல்.ஏ.வாகவும், சட்டப்பேரவைத் தலைவராகவும் இருந்த ரங்கநாத்துக்கு முதல்வர் பதவி வழங்கப்படவில்லை. இதேபோல, மல்லிகார்ஜூன கார்கே முதல்வராவதையும் பலர் தடுத்தனர். பரமேஷ்வர் முதல்வராவதை சித்தராமையா தடுத்தார். ஆனால், பாஜகவோ தலித் ஒருவரை குடியரசுத் தலைவராக ஆக்கியுள்ளது'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x