Published : 22 Feb 2019 10:12 AM
Last Updated : 22 Feb 2019 10:12 AM
பாஜகவுடனானது தேர்தலுக்கான தற்காலிகக் கூட்டணியே தவிர, கொள்கைக்கானது அல்ல என அதிமுகவின் சிறுபான்மை பிரிவுசெயலாளரும், எம்.பி.யுமான ஏ.அன்வர் ராஜா (69) தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி பின்வருமாறு:
கேள்வி: பாஜக கூட்டணியை எதிர்த்து நீங்கள் அதிமுகவை விட்டு வெளியேறுவதாக சமூக வலை தளங்களில் செய்திகள் உலவுகிறதே?
பதில்: இது முற்றிலும் தவறான செய்தி. திமுக பரப்பி வரும் இந்தவிஷமத்தனமான செய்தியை என்னை நன்கு அறிந்தவர்கள் நம்ப மாட்டார்கள்.
அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்திருப்பதை நீங்கள் உட்பட அக்கட்சியில் உள்ள முஸ்லிம்கள் ஆதரிக்கிறீர்களா?
கூட்டணி என்பது தேர்தலுக்கான தற்காலிக ஏற்பாடு. இதில் இரண்டு கட்சிகளுக்கான கொள்கைகளில் உடன்பாடு என்பது கிடையாது. இந்தக் கூட்டணியானது தேர்தலுடன் முடிந்துவிடும். மக்களவைத் தேர்தலில் அதிக உறுப்பினர்களை பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் தற்காலிக ஏற்பாட்டுக்கு பெயர் தான் கூட்டணி. எனவே, இதில் அதிமுகவில் உள்ள முஸ்லிம்கள் ஆட்சேபனை தெரிவிக்க இடமில்லை.
பாஜக வற்புறுத்தலுக்கு அதிமுக பணிந்து விட்டதாக கருத முடியுமா?
மூன்றாவது பெரிய கட்சியாக 37 எம்.பி.க்கள் அதிமுகவில் உள்ளனர். எனினும், ஆட்சியில் பங்குபெறாத காரணத்தால் தமிழகத்திற்காக நிதி ஒதுக்கீடு பெறுவதிலும், பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் ஒரு சுணக்கம் ஏற்பட்டது. நீதிமன்றத் தீர்ப்பு போன்ற நியாயமான விஷயங்களுக்கு தீர்வு பெறவும் நாடாளுமன்றத்தை முடக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. காங்கிரஸுடன் திமுக சேர்ந்துள்ளதால் நாமும் ஒரு தேசியக்கட்சியுடன் கூட்டணி அமைப்பது தான் சிறந்தது.
பாஜகவுடன் கூட்டணி சேர அதிமுகவின் பெரும்பாலான எம்எல்ஏ, எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்பட்டதே?
ஒரு கட்சிக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருப்பது இயற்கை. அவரவர் கருத்தை சுதந்திரமாக எடுத்துச் சொல்ல அதிமுகவில் மட்டுமே முழு உரிமைகள் கிடைக்கிறது. கட்டுப்பாட்டிற்கு பெயர்போன எங்கள் கட்சியில் அதன் நலனுக்காக நம் தலைமை ஒரு முடிவு எடுத்த பின் அதை ஒருவர் கூட இம்மியளவும் மீற மாட்டார்கள்.
பாஜக தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்த தம்பிதுரை இப்போது, வெற்றிக்கு பின் மத்திய ஆட்சியில் அதிமுக இடம்பெறும் என பல்டியடித்துள்ளாரே?
ஒரு அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்து, தம் கட்சியின் நற்கொள்கையை எடுத்துச் சொல்லும் நாடாளுமன்ற எம்.பி.யின் கடமையை தான் நானும், தம்பிதுரையும் செய்தோம். இப்போது கூட்டணி சேர்ந்தமையால் அவர்களின் அருகில் இருந்து தவறான முடிவுகளை எடுக்காமல் தடுப்போம். இதை மீறினால் மீண்டும் எதிர்ப்போம்.
பாஜகவுடன் கூட்டணி ஏற்பட்டிருக்கும் நிலையில், மக்களவைக்கு நீங்கள் மீண்டும் போட்டியிடுவீர்களா?
எனது கட்சி தலைமை வாய்ப்பளித்தால் கண்டிப்பாக ராமநாதபுரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன். உறுதியாக வெற்றியும் பெறுவேன்.
உங்கள் வெற்றிக்கானப் பிரச்சாரத்திற்கு பாஜகவினர் உதவியைக் கோருவீர்களா?
ஒவ்வொரு வேட்பாளரும் தன் வெற்றியில் அதிக எண்ணிக்கையுள்ள வாக்குகளில் வெற்றிபெறவே எண்ணுவார்கள். இந்தவகையில், எனக்கு பாஜகவினரும் தானாகவே முன் வந்து வாக்களிப்பதை வரவேற்கிறேன்.
தமிழகத்தில் சுமார் 6 சதவிகிதம் உள்ள முஸ்லிம்களுக்கு அதிமுக அரசு செய்தது என்ன? அதன் பலன், பாஜக கூட்டணியால் கிடைக்காமல் போகுமா?
தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு மிக அதிகமான நன்மைகளை செய்தஒரே கட்சி அதிமுக. மத்திய அரசுரத்து செய்த ஹஜ் புனிதப் பயணத்துக்கான மானியத்தை தமிழக அரசு வழங்க உத்தரவிட்டது. மாவட்ட காஜிக்களுக்கு முதன்முறையாக ஊதியம் வழங்கியதுடன் 2016-ம் ஆண்டு வரை அதன் நிலுவையும் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது.
எனவே, முஸ்லிம்களுக்கான எங்கள் பணி தொடருவதற்கு பாஜகவுடனான கூட்டணி தடையாக இருக்காது.
பாஜகவுடன் சேர்ந்தபின் அதிமுக என்ன சொல்லி முஸ்லிம்களிடம் வாக்கு கேட்கும்?
மத்திய அரசிடம் தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதில் எங்கள் பங்கு மிகவும் அதிகமாக உள்ளது. இத்துடன் சிறுபான்மையினர் உரிமைகளை மீட்பதிலும் எங்கள் பணி தொடரும். பாஜக உடனிருந்தாலும் சிறுபான்மையினர் ஆதரவுக் கொள்கையில் நாம் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்.
பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் சிறுபான்மையினர், காவிரி உள்ளிட்ட தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை நாம் எதிர்த்ததற்கான முன் உதாரணங்கள் உள்ளன. ஆட்சிக்கூட்டணியில் இருந்த போதும் ஒருமுறை எங்கள் கொள்கையை பாஜக ஏற்கவில்லை என்பதற்காக அதன் தலைமையிலான அரசை எங்கள் அம்மா, கவிழ்த்தததை நாட்டு மக்கள் அறிவர்.
திருபுவனம் படுகொலை சம்பவம் இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
அங்கொன்றும், இங்கொன்றுமாக இதுபோன்ற சம்பவங்கள் கடந்த50 ஆண்டு காலமாக நடந்துகொண்டு தான் இருக்கிறது. திருபுவனம் சம்பவத்தில் எங்கள் அரசு சட்டப்படி நடவடிக்கையும் எடுத்து வருவதால் அதன் தாக்கம் தேர்தலில் இருக்காது.
அதிமுகவில் இருந்த ஒரே முஸ்லிம் கட்சியான தமீமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயகக் கட்சியும் வெளியேறிய நிலையில், யாரை காட்டி நீங்கள் முஸ்லிம்களிடம் வாக்கு கேட்பீர்கள்?
முஸ்லிம் அமைப்புகளும், அவர்களின் வாக்குகளும் வேறுவேறு. இந்த அமைப்புகளின் கீழ், முஸ்லிம்களின் வாக்குகள் இல்லை. தமிழகத்தில் ஒரே ஜாதி, ஒரே மதம் என்றில்லாமல் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே எந்தவொரு வேட்பாளரும் வெற்றிபெற முடியும். எனவே, இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற தமீமுன் அன்சாரி மத அரசியல் செய்வதை பற்றிஎங்களுக்கு கவலை இல்லை. ஏனெனில், ஜாதி, மத ரீதியான அரசியலை அதிமுக எந்தக் காலத்திலும் முன்னெடுத்ததில்லை.
முத்தலாக் மீதான அவசர சட்டம்மூன்றாவது முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை எதிர்த்த அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்திருப்பதை எப்படி நியாயப்படுத்துவீர்கள்?
இது கொள்கை ரீதியான கூட்டணி இல்லை. முத்தலாக் சட்டம் எத்தனை முறை கொண்டு வரப்பட்டாலும் அதனை அதிமுக எதிர்க்கும்.
பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டையும் எதிர்த்த அதிமுகவுடன், பாஜக சேர்ந்ததில் முரண் தெரிகிறதே?
எங்களைப் போல் இந்த இட ஒதுக்கீட்டை திமுகவும் எதிர்த்தது. ஆனால், அதற்கு ஆதரவளித்த காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளுடன் திமுக வைத்த கூட்டணியிலும் முரண் உள்ளது. இந்த முரண்பாடுகளுடன் உருவான கூட்டணி தேர்தலுக்கானதே தவிர கொள்கைகளுக்கு அல்ல.
இவ்வாறு அன்வர் ராஜா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT