Published : 27 Feb 2019 10:34 AM
Last Updated : 27 Feb 2019 10:34 AM
தேவைப்பட்டால் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடும் எனவும், கூட்டணிப் பேச்சுவார்த்தையும் நடைபெறுவதாகவும் அதன் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். அவர் டெல்லியில் நேற்று முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசினார்.
இன்று தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிக்கு கமல்ஹாசன் டெல்லி வந்திருந்தார். இந்த நிகழ்ச்சி கடைசிநேரத்தில் ரத்தாகி விட அவர் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரான அர்விந்த் கேஜ்ரிவாலை சந்தித்தார்.
இதில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தன் கட்சிக்கு தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய கேஜ்ரிவாலுக்கு கமல் அழைப்பு விடுத்தார். சுமார் அரை மணி நேர சந்திப்பிற்குப் பின் கமல் செய்தியாளர்களிடம் பேசினார்.
இது குறித்து கமல் கூறியதாவது:
''மக்கள் நீதி மய்யம் தொடங்கியது முதல் எங்களுக்கு ஆதரவளித்து வருபவர் கேஜ்ரிவால். இதை அவரிடம் தேர்தல் சமயத்தில் நினைவூட்ட வந்தேன். இந்தமுறை ஆம் ஆத்மி தமிழகத்தில் போட்டியிடவில்லை. இதனால், அவர்கள் சார்பில் போட்டியிடும் எங்களுக்கு அக்கட்சி ஆதரவளிக்கும்.
இந்தச் சந்திப்பில் அரசியல் இல்லை என்றும், நட்பு மட்டும் எனவும் கூற முடியாது. ஏனெனில், எங்களுக்கு இடையில் வளர்ந்த நட்பே அரசியலினால் தான். இது ஒரேவிதமான கருத்துகள் கொண்டது.
எங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு முதல் குரல் கொடுத்து ஆரம்பித்தவரே அவர் தான். அவருக்கு நேரம் கிடைக்கும் போது தமிழகத்திற்கு வந்து எங்களுக்கு பிரச்சாரம் செய்ய அழைப்பு விடுத்தோம்''.
இவ்வாறு கமல் தெரிவித்தார்.
தமிழகத்தில் அமைந்து வரும் திமுக, அதிமுக தலைமையிலானது போல் கமலின் கட்சியும் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு உள்ளது. இதற்கான முயற்சியிலும் அவர் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது.
இது குறித்து கமல் கூறுகையில், ''தேவைப்பட்டால் தனித்துப் போட்டியிடுவோம். கூட்டணிக்கானப் பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. எல்லோருடனும் கைகுலுக்கி விட முடியாது என்பதில் திண்ணமாக உள்ளது மக்கள் நீதி மய்யம்.
காரணம், மக்களுக்கு உணவு பறிமாறும்போது எங்கள் கைகள் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற பேராவா தான். இந்த எங்கள் அழுத்தமான முடிவை டெல்லி முதல்வர் பாராட்டினார்'' என்றார்.
பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ்-எ-முகம்மது முகாமில் இந்திய விமானப்படை நேற்று தாக்குதல் நடத்தியது. இதன் பின்னணியில் அரசியல் இருப்பதாக எழுந்துள்ள புகார் மீதும் கமல் கருத்து தெரிவித்தார்.
''அரசியல்வாதிகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு துணையாக, எங்கள் நாட்டைப் பாதுகாக்கும் படையினர் வரமாட்டார்கள் என நம்புகிறேன். எனவே, அவர்கள் நாட்டை காப்பதற்கான கடமையை செய்துள்ளார்கள்.
ஒரு பெரிய நாடு தன்னைக் காத்துக்கொள்ள என்ன செய்யுமோ, அதையெல்லாம் அவர்கள் செய்து இந்திய விமானப்படைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்'' என்று கமல் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT