Published : 23 Feb 2019 08:41 AM
Last Updated : 23 Feb 2019 08:41 AM

பிரதமர் மோடி ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை: திருப்பதியில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்து இதுவரை ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை என திருப்பதியில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று ஒரு நாள் சுற்றுப்பயணமாக திருப்பதி வந்தார். திருப்பதியில் உள்ள தாரகராமா விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுகூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசியதாவது:5 ஆண்டுகளுக்கு முன், இதே இடத்தில், பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசினார். ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாகவும், ஆட்சிக்கு வந்ததும், கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ. 15 லட்சம் போடுவதாகவும், விவசாயிகளின் உற்பத்தி தானியங்கள், காய்கறிகளுக்கு தக்க விலை நிர்ணயம் செய்து தருவதாகவும், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாகவும் பல வாக்குறுதிகளை வழங்கினார். ஆனால் இதில் ஒன்றை கூட அவர் நிறைவேற்றவில்லை. மோடி ஒரு பிரதமர், கோடிக்கணக்கானோரின் பிரதிநிதி. தனி நபர் கிடையாது. அப்படி இருக்கையில் ஏன் மக்களை ஏமாற்றும் வகையில் பொய்யான வாக்குறுதிகளை கொடுக்க வேண்டும்? காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். இதனை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

ரஃபேல் விவகாரத்தில் தொழிலதிபர் அம்பானிக்கு ரூ. 30 ஆயிரம் கோடி ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. வேலியே பயிரை மேயலாமா ? கடந்த 2013-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிதான் நில சேகரிப்பு திட்டத்தைக் கொண்டு வந்தது. காங்கிரஸ் ஆட்சியில்தான் நாட்டில் ரூ. 70 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் தற்போதைய பிரதமர், கார்ப்பரேட் நிறுவனங்களின் கடனைத்தான் தள்ளுபடி செய்கிறார். விவசாயிகளை அவர் கண்டுகொள்வதே இல்லை. சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியபிரதேச மாநிலங்களில் ஆட்சிக்கு வந்ததும் வெறும் 2 நாட்களில் காங்கிரஸ் விவசாயக் கடனை தள்ளுபடி செய்தது. காங்கிரஸ் கட்சி என்பது கொடுத்த வாக்கை காப்பாற்றும் கட்சி என்பதை மக்கள் அறிவார்கள். இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

முன்னதாக, ரேணிகுண்டா விமான நிலையம் வந்த ராகுலை மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ரகுவீரா ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் பனபாக லட்சுமி உட்பட கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர், அலிபிரி அடிவாரம் வரை காரில் சென்ற ராகுல்காந்தி, அங்கிருந்து மலைப்பாதை வழியாக நடந்து திருமலைக்கு சென்றார். வழிநெடுகிலும் பக்தர்களிடமும், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடமும் அன்போடு பேசியபடி வேகமாக நடந்து சென்றார். ராகுல்காந்தி வெறும் 1 மணி நேரம் 50 நிமிடங்களில் திருமலை சென்றடைந்தார். ஏற்கெனவே இதுபோன்று நடந்து சென்ற நடிகர் சிரஞ்சீவி, 7 மணி நேரத்தில் திருமலை சென்றடைந்தார். நடிகர் பவன் கல்யாண் 4 மணி நேரத்திலும், சந்திரபாபு நாயுடு மூன்றரை மணி நேரத்திலும் நடந்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது. பின்னர், சாதாரண பக்தர் போன்று வரிசையில் சென்று மாகாலகு தரிசனம் மூலம் ஏழுமலையானை தரிசித்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்பு அளித்து, தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர். பின்னர், ராகுல் நேற்று மாலை ரேணிகுண்டாவிலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x