Last Updated : 23 Feb, 2019 09:08 AM

 

Published : 23 Feb 2019 09:08 AM
Last Updated : 23 Feb 2019 09:08 AM

தேவகவுடாவுக்கு மீண்டும் பிரதமர் ஆசை? - 1996 திரும்புமா?

'மீண்டும் பிரதமராகும் ஆசை இல்லை' என எச்.டி. தேவகவுடாவின் வாய் சொல்கிறது. மனமோ இன்னொரு முறை பிரதமராக ஆசைப்படுகிறது. ' அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். 2019-ல்மீண்டும் 1996 திரும்ப வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது' அவரது மகன் எச்.டி. குமாரசாமிஆசையை வெளிப்படுத்துகிறார்.

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹரதன ஹள்ளிகிராமத்தில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த தேவகவுடா தொடக்கத்தில் காங்கிரஸில் இருந்தார். பின்னர் ஜெய் பிரகாஷ் நாராயணின் ஜனதா கட்சியில் இணைந்த இவர், கர்நாடக முன்னாள் முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே தலைமையிலான ஜனதா தள ஆட்சியில் அமைச்சர் ஆனார். ஜனதா தளம் உடைந்த போது, தேவகவுடா மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை தொடங்கினார்.

1996 மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக 161 இடங்களையும், காங்கிரஸ் 140 இடங்களையும் பிடித்தன. இதனால் மீண்டும் ஒன்று சேர்ந்த ஜனதாகட்சி தலைவர்கள் காங்கிரஸ், பாஜக அல்லாத மாநில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைக்க முயற்சித்தனர். இதற்கு 44 இடங்களை வைத்திருந்த இடதுசாரிகள் ஆதரவு கொடுத்ததால், மாநில கட்சியை சேர்ந்த ஒருவருக்கு பிரதமராகும் சூழல் உருவானது. பிரதமர் பதவிக்கான போட்டியில் தமிழ் மாநில காங்கிரஸை சேர்ந்த மூப்பனார், மேற்குவங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு ஆகியோரின் பெயர்கள் அடிப்பட்டன. இதில் யாரும் எதிர்பாராத வேளையில் தேவகவுடா பிரதமரானார். இதனால்தான் இப்போதும் தேவகவுடா தன்னை ‘ஆக்ஸிடெண்ட்டல் பி.எம்’’ என சொல்லி சிரிக்கிறார்.

1996-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி பிரதமராக பொறுப்பேற்ற பின்னரே, தேவகவுடா டெல்லியில் சஃப்தர்ஜங்க் சாலையில் சொந்தமாக வீடு வாங்கினார். கவுடா பிரதமராக இருந்த காலத்தில் அவர் டெல்லி வீட்டில் இருந்த நாட்களை விட, பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள வீட்டில் இருந்த நாட்கள்தான் அதிகம். இதனால் டெல்லி ஊடகங்கள், ‘இந்தியாவின் தலைநகரம் பெங்களூரா?’ என எழுதின.

அமைச்சர் பதவி, துறை ஒதுக்கீடு, ஊழல்என அடுக்கடுக்காக குவிந்த குற்றச்சாட்டுகளினால் கவுடாவின் ஆட்சி 1997-ம் ஆண்டுஏப்ரல் 21-ல் கவிழ்ந்தது. இதன்பிறகு மக்களவை தேர்தல் வரும் போதெல்லாம் தேவகவுடா மூன்றாம் அணியை உருவாக்குவார். ஆனால் காங்கிரஸும், பாஜகவும் மாறி மாறி வென்றதால், கவுடாவின் பிரதமர் ஆசை கைகூடவில்லை.

இதனால் மனமுடைந்த தேவகவுடா இந்த முறை ‘மூன்றாம் அணியை’ உருவாக்கவில்லை. மேலும் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆதரவுடன் மகன் குமாரசாமியை முதல்வராக ஆக்கி இருப்பதால், மூன்றாம் அணி முயற்சியை அவர் தூசு தட்டவில்லை. அதே நேரம் குமாரசாமியின் பதவியேற்பு விழாவுக்கு அனைத்து மாநில கட்சி தலைவர்களையும் மேடையேற்றி, மறைமுக மூன்றாம் அணியை உருவாக்கினார் தேவகவுடா.

ஒருவேளை தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ், பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் போனால் மாயாவதி, மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு ஆகியோரின் ஆதரவோடு ஆட்சி அமைக்க திட்டமிட்டிருக்கிறார் கவுடா.

கர்நாடகாவில் மட்டும் வலுவாக இருக்கும்கட்சியை கேரளா, ஆந்திரா, டெல்லி, அருணாச்சலபிரதேசம்ஆகிய மாநிலங்களுக்கும் கொண்டுசெல்லும் முயற்சியில் கவுடா இறங்கியுள்ளார். இதற்காக கவுடா மீண்டும் டெல்லி அரசியலில் மையமிட்டிருக்கிறார். இந்நிலையில் பாஜகவில் இருந்து விலகிய அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் கெகாங் அபாங்கை மஜதவில் இணைத்தார்.

இதே போல பிஹார், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ், பாஜக மீது அதிருப்தியில் இருக்கும் தலைவர்களை மஜதவுக்கு இழுக்கும் வேலையில் இறங்கியுள்ளார் கவுடா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x