Published : 08 Apr 2019 07:28 PM
Last Updated : 08 Apr 2019 07:28 PM
ஜவுளி நகரமான ஈரோடு, பெருமளவு விவசாயமும் நடைபெறும் பகுதி. காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஈரோட்டில் அதன் சுற்றுப் பகுதிகள் முழுக்க ஆண்டு முழுவதும் விவசாயம் நடைபெறுகிறது. ஈரோடு மஞ்சளுக்கு நாடு முழுவதும் மவுசு அதிகம்.
ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். ஏற்கெனவே 2009 - 2014 ஆம் ஆண்டு வரை எம்.பி.யாக இருந்த கணேசமூர்த்தி, வாக்காளர்களிடம் நன்கு அறிமுகமானவர். கணேசமூர்த்தி தொகுதி முழுவதும் நல்ல பெயர் கொண்ட பலமான வேட்பாளராக உள்ளார். இருந்தாலும் கூட்டணிக் கட்சியான திமுகவின் தேர்தல் பணி சிறப்பாக இல்லாததால் பின்தங்குவார் என்று கூறப்படுகிறது.
அதிமுக சார்பில் ஜி.மணிமாறன் போட்டியிடுகிறார். காங்கயம் அதிமுக நகரச்செயலாளரான வெங்கு என்னும் மணிமாறன் வாக்காளர்களுக்கு அறிமுகம் இல்லாதவர். கூட்டணி பலம், கடைசிநேர அதிரடி கவனிப்புகள் போன்ற காரணங்களால் அதிமுக வேட்பாளர் மணிமாறன் ஒரு படி முந்தியுள்ளார்.
அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதிமய்யம் கட்சி வேட்பாளர்கள் தேர்தல் முடிவில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த முடியாத அளவுக்கு மிகவும் பின்தங்கியுள்ளனர். எனினும் கடைசிக்கட்டத் தேர்தல் பிரச்சாரங்களைப் பொறுத்து அதிமுகவுக்கும் மதிமுகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் பல தொகுதிகளில் வீசும் திமுக ஆதரவு ஆலை ஈரோட்டிலும் எதிரொலிக்கிறது.
தொகுதி குறித்த கருத்துக் கணிப்பு
கருத்துக் கணிப்பின்படி, திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்திக்கான வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. அடுத்த இடத்தில் அதிமுகவின் வெங்கு ஜி.மணிமாறன் 2-ம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி 3-ம் இடத்தில் உள்ளது.
முக்கிய குறிப்பு:
இது தொகுதிவாரியான வாக்காளர்கள் அளித்துள்ள வாக்கு விகிதம் அல்ல. கட்சி அல்லது வேட்பாளர் மீது அபிமானம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளலாம் என்பதால், குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான/எதிப்பான இணையதள வாசகர்களின் மனநிலையையே இந்த வாக்களிப்பு காட்டுகிறது. அதை மனதில் கொண்டு இந்த முடிவுகளை அணுகும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
மற்ற தொகுதிகள் குறித்த விவரங்கள காண:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT