Published : 20 May 2016 08:59 AM
Last Updated : 20 May 2016 08:59 AM

மீண்டும் அதிமுக ஆட்சி: தொடர்ச்சியாக 2-வது முறை வென்று 1984-க்கு பிறகு வரலாற்றுச் சாதனை

அதிமுக - 134; திமுக அணி - 98 | மநகூ அணி, பாமக, பாஜக படுதோல்வி



*

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 134 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அதிமுக தக்கவைத்துள்ளது. கடந்த 1984-ம் ஆண்டுக்கு பிறகு, ஆளுங்கட்சி தொடர்ந்து2-வது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா 6-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்கிறார்.

தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த 16-ம் தேதி தேர்தல் நடந்தது. பணப் பட்டுவாடா புகார் காரணமாக அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மற்ற 232 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இதில் 74.26 சதவீத வாக்குகள் பதிவாகின.

6 முனை போட்டி

இத்தேர்தலில், அதிமுக, திமுக - காங்கிரஸ், தேமுதிக ம.ந.கூட்டணி தமாகா அணி, பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சி என 6 முனைப் போட்டி நிலவியது. ஆளும்கட்சியான அதிமுக 227 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. கூட்டணி கட்சிகளான இந்திய குடியரசுக் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, சமத்துவ மக்கள் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, தமிழ் மாநில முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும், மனிதநேய ஜனநாயக கட்சிக்கு 2 தொகுதிகளும் என 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. கூட்டணி கட்சிகளும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டன. அதிமுக வர லாற்றில் முதல்முறையாக 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக கூட்டணி போட்டியிட்டது.

திமுக கூட்டணியில் அக்கட்சி 174 தொகுதிகளில் போட்டியிட்ட து. கூட்டணி கட்சிகளில் மக்கள் தேமுதிக, பெருந்தலைவர் மக்கள் கட்சி, சமூக சமத்துவப் படை மற்றும் தமிழ்நாடு தொழிலாளர்கள் விவசாயிகள் கட்சிகள் 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன. காங்கிரஸ் 41, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 5, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சிகள் தலா 4 தொகுதிகளில் போட்டியிட்டன.

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணியில், தேமுதிக 104, மதிமுக 29, தமாகா 26, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ னிஸ்ட், விடுதலைச் சிறுத்தை கட்சிகள் தலா 25 தொகுதிகளில் போட்டியிட்டன. இதுதவிர, பாஜ கூட்டணியில் பாஜக 141 இடங்களிலும், ஐஜேகே 45, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் 24, கொங்குநாடு ஜனநாயக கட்சி 4 தொகுதிகளிலும் போட்டியிட்டன. பாமகவும் நாம் தமிழர் கட்சியும் தனித்து களத்தில் இறங்கின.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியிலும், திமுக தலைவர் கருணா நிதி திருவாரூர் தொகுதியிலும், மு.க.ஸ்டாலின் கொளத்தூரிலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையிலும், பாமகவின் அன்புமணி பென்னாகரம் தொகுதியிலும் போட்டியிட்டனர்.

தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தமிழகம் முழுவதும் 68 மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகளும், தொடர்ந்து மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப் பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் திமுகவுக்கு ஆதரவாக முடிவுகள் வந்தன. ஆனால், நேரம் செல்லச் செல்ல முன்னிலை நிலவரம் மாறத் தொடங்கியது. பல தொகுதிகளில் அதிமுக முன்னிலை பெற்றது. திமுகவின் முன்னிலை நிலவரம் அவ்வப்போது மாறினாலும், அது அதிமுகவை பாதிக்கவில்லை. இறுதி நிலவரப்படி அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி பெற்று, அறுதிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. திமுக கூட்டணிக்கு 98 தொகுதிகள் கிடைத்தன. தேமுதிக - ம.ந.கூட்டணி - தமாகா, பாமக, பாஜக ஆகிய கட்சிகள் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தோல்வி அடைந்தனர்.

கடந்த 1984-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் ஆளும்கட்சி தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. தமிழக முதல்வராக 6-வது முறையாக ஜெயலலிதா பொறுப்பேற்கிறார். அதிமுகவின் வெற்றியை அக்கட்சித் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா, வரும் 23-ம் தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடக்கிறது. முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x