Published : 05 Apr 2016 04:08 PM
Last Updated : 05 Apr 2016 04:08 PM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 1977-ம் ஆண்டுக்கு முன்பு ஊத்தங்கரை தொகுதியாக இருந்தது. பின்னர் 1977-ம் ஆண்டு ஊத்தங்கரை தொகுதி நீக்கப்பட்டு புதிதாக பர்கூர் சட்டமன்ற தொகுதி உருவாக்கப்பட்டது. ஊத்தங்கரை தொகுதியில் இருந்த பகுதிகள் 2 ஆக பிரிக்கப்பட்டு ஒரு பகுதி பர்கூர் சட்டமன்ற தொகுதியிலும், மற்றொரு பகுதி அரூர் (தனி) தொகுதியிலும் சேர்க்கப்பட்டது. 34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஊத்தங்கரை (தனி) தொகுதி கடந்த 2011-ம் ஆண்டு உதயமானது.
ஊத்தங்கரை தொகுதியில் ஊத்தங்கரை வட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் சேர்க்கப்பட்டுள்ளது. போச்சம்பள்ளி தாலுகாவின் சில பகுதிகளும் தொகுதியில் இணைந்துள்ளது. மேலும் ஊத்தங்கரை மற்றும் மத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம பகுதிகள் இந்த தொகுதியில் இணைந்துள்ளது.
அடிப்படையில் விவசாய தொழிலை முக்கிய தொழிலாக இந்த தொகுதி மக்கள் கொண்டுள்ளனர். இந்த தொகுதியில் அதிக அளவில் தாழ்த்தப்பட்ட இனத்தவரும், அதற்கு அடுத்தப்படியாக வன்னியர்கள், முஸ்லீம்கள், கொங்குவேளாளர்கள் என பல்வேறு இனத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தொகுதியில் சர்க்கரை ஆலை நிறுவ வேண்டும். பரசுன் ஏரியை சீர்படுத்த வேண்டும்.
கிருஷ்ணகிரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த தொகுதியின் வழியாக தான் செல்கிறது. பல ஆண்டுகளாக மிகுந்த மோசமான சாலையாக சீர் செய்யப்படாமல் உள்ளது.
இதே போல், ஊத்தங்கரை அருகில் உள்ள பாம்பாறு அணை அருகே உள்ள மிகவும் பழமை வாய்ந்த மேம்பாலம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இந்த பாலத்தில் இருந்து அடிக்கடி வாகனங்கள் கீழே விழுந்து விபத்திற்குள்ளாவதும், இந்த விபத்தால் உயிரிழப்பு ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடாக தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் புதிய பாலம் கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும் விரைவில் புதிய பாலம் கட்டி முடித்துவிடுவார்கள் என ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் தற்போது பாலம் கட்டும் பணி அரைகுறையாக அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறது.
மேலும் இந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் மேல்நிலை கல்விக்கு பின், கல்லூரி படிப்பை தொடர முடியாத நிலை உள்ளது. காரணம் இங்கிருந்து கல்லூரி படிக்க கிருஷ்ணகிரி, தருமபுரி போன்ற நகரங்களுக்கு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் யாரும் அவ்வளவு தூரம் சென்று படிக்க வைக்க பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் விரும்பாததால் தங்களது கல்லூரி படிப்பை கனவாகவே நினைத்து முடித்துகொள்கின்றனர். எனவே ஊத்தங்கரையில் அரசு கலைக்கல்லூரி ஒன்றை துவங்கிட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அத்துடன் படித்த மற்றும் படிக்காத இளைஞர்களுக்கு உரிய தொழில் வாய்ப்பு இல்லாததால் அண்டைய மாவட்டங்களுக்கும், அண்டைய மாநிலங்களுக்கும் வேலை தேடி செல்கின்றனர். எனவே இந்த பகுதி இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தொழிற்சாலைகளை ஏற்படுத்தி கொடுத்திட வேண்டும். அத்துடன் சுய தொழில் துவங்க உரிய தொழிற்பயிற்சியை வழங்கிட வேண்டும்.
குறிப்பாக இந்த தொகுதியில் அதிக அளவில் ஆதிதிராவிடர்கள் உள்ளதால், அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மான்ய சலுகைகள் குறித்த விவரங்களை எடுத்துகூறி, அந்த இளைஞர்களை தொழில்முனைவோராக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
ஊத்தங்கரையில் அரசு பொறியியல் கல்லூரி, மகளிர் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தொழிலாளர் நலத்துறை அலுவலம், வணிகவரித்துறை அலுவலகம், இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற தொழிற்சாலைகள், அறுவை சிகிச்சை அரங்குடன் விரிவாக்கம் செய்யப்பட்ட மருத்துவமனை, 24 மணி நேரமும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இருக்கும் வகையில் மருத்துவமனை வசதி, காய்கறி குளிரூட்டும் கிடங்கு போன்றவறை அமைத்து கொடுக்க என்பதே அனைவரது கோரிக்கையாகவும் உள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் (2011) இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மனோரஞ்சிதம் நாகராஜூம், தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த விடுதலை சிறுத்தைகள் சார்பில் மறைந்த முனியம்மாள் கனியமுதன் ஆகியோர் உள்பட மொத்தம் 7 பேர் போட்டியிட்டனர். இதில் மனோரஞ்சிதம் நாகராஜ் 90 ஆயிரத்து 381 ஓட்டுகளும், முனியம்மாள் கனியமுதன் 51 ஆயிரத்து 223 ஓட்டுகளும் பெற்றனர். இதன் மூலம் 39 ஆயிரத்து 158 ஓட்டுகள் வித்தியாசத்தில் மனோரஞ்சிதம் நாகராஜ் வெற்றி பெற்றார்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | நா. மனோரஞ்சிதம் | அதிமுக |
2 | எஸ். மாலதி | தி.மு.க |
3 | சி.கனியமுதன் | விசிக |
4 | த.நா.அங்குத்தி | பாமக |
5 | எஸ்.ஏ.பாண்டு | பாஜக |
6 | தி.வெங்கடேசன் | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
ஊத்தங்கரை தாலுக்கா
போச்சம்பள்ளி தாலுக்கா (பகுதி)
கன்னாண்டஹள்ளி, பொம்மேபள்ளி, சிவம்பட்டி, நாகம்பட்டி, பிச்சுகவுண்டனஹள்ளி, பட்ரஹள்ளி, சோனரஹள்ளி, ரெங்கம்பட்டி, கொண்டிரெட்டிப்பட்டி, கெண்டிகாம்பட்டி, பாளேதோட்டம், மூக்கம்பட்டி, மாரப்பநாயக்கன்பட்டி, பாரண்டபள்ளி, தாதம்பட்டி மற்றும் ஜிங்கில்கதிரம்பட்டி கிராமங்கள்
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,10,603 |
பெண் | 1,08,020 |
மூன்றாம் பாலினத்தவர் | 24 |
மொத்த வாக்காளர்கள் | 2,18,647 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 சட்டமன்ற தேர்தல் | 51. ஊத்தங்கரை | ||
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | மனோரஞ்சிதம் | அ.தி.மு.க | 90381 |
2 | முனியம்மாள் | வி.சி.கே | 51223 |
3 | S. வேடியப்பன் | சுயேட்சை | 4134 |
4 | C.K. சங்கர் | பி.ஜே.பி | 2549 |
5 | V. தேவராஜன் | சுயேட்சை | 2138 |
6 | P. வினோத்குமார் | சுயேட்சை | 1584 |
7 | முருகன் | சுயேட்சை | 1382 |
மொத்தம் | 153391 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT