Published : 06 Mar 2014 05:52 PM
Last Updated : 06 Mar 2014 05:52 PM
சி. உமாபதி - மாநில இளைஞரணிச் செயலாளர், கைவினைஞர்கள் முன்னேற்றச் சங்கம்:
தங்க நகை உற்பத்தியில் முதன்மை மாநிலம் தமிழ்நாடு. குறிப்பாக, குறைந்த எடையுள்ள மூக்குத்திகள், குழந்தைகளுக்கான மோதிரங்கள், கசை, ஜிமிக்கிகள், கட்டிங் செயின்கள் போன்றவை விழுப்புரம் மாவட்டத்தில்தான் அதிகம் உற்பத்தி செய்யப்பட்டு, நாடு முழுவதும் அனுப்பப்படுகின்றன.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக நகைத் தொழில் நசிவடைந்துவருகிறது. இதற்கு முக்கியக் காரணம், மத்திய அரசின் தவறான தொழில் கொள்கைகளில் ஒன்றான 'ஆன் லைன்' தங்க வர்த்தகம். இது தவிர, மெஷின் நகை வருகை, மூலதனம் பற்றாக்குறை போன்றவற்றால் நகைத் தொழிலாளர்கள் தங்களது பாரம்பரியத் தொழிலைக் கைவிட்டு, வேறு தொழிலுக்குச் செல்ல வேண்டிய நிலை. தொழில் நசிவு, அதனால் ஏற்பட்ட கடன், வறுமை காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 15 நகைத் தொழிலாளர்கள் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். இதுபற்றி அதிகாரத்தில் உள்ளவர்கள் கவலை கொள்ளவில்லை. இனியாவது ‘ஆன் லைன்’ வர்த்தகத்திலிருந்து தங்கத்தை மத்திய அரசு விடுவிக்க வேண்டும். காரைக்குடியில் செயல்படுத்தியதுபோல மத்திய அரசின் ‘ஸ்டார் சொர்ணகார்’ திட்டத்தின் கீழ் மூலதனக் கடனாகத் தங்கத்தை வழங்க வேண்டும். மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் நகைத் தொழிலுக்கான சிறப்புத் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும். இவற்றைச் செய்தால் மட்டுமே இங்குள்ள சுமார் ஒரு லட்சம் நகைத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் உயரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT