Published : 06 Mar 2014 06:45 PM
Last Updated : 06 Mar 2014 06:45 PM
# விழுப்புரம் தொகுதி குடிசைகள் நிறைந்த பகுதி. இங்குள்ள பெரும்பாலான வீடுகளில் கழிப்பிடம் கிடையாது. கணிசமான அளவு மக்கள் திறந்த வெளியைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துகிறார்கள். மனிதருக்கு மிகவும் அடிப்படையான பொதுக் கழிப்பறைக் கட்டமைப்புகள்கூடத் தொகுதியில் இல்லை. தொகுதி முழுவதும் கழிவுநீர் மேலாண்மை மிக மோசம். சாலைகளிலும் தெருக்களிலும் கழிவுநீர் தேங்கிக்கிடப்பது சகஜம். இதனால், பொதுச் சுகாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது.
# தொகுதிக்குள்ளாகவே அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள் நிறைய அமைந்துள்ளதாகத் திருப்தி தெரிவித்தனர் மக்கள். தொகுதியில் மக்கள் பாராட்டிய ஒரு விஷயம், போக்குவரத்து வசதிகள். தமிழகத்தின் மையப் பகுதியாக இருப்பதால், இங்கிருந்து தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பேருந்து, ரயில் மூலம் எளிதில் செல்லலாம்.
# போக்குவரத்து வசதி பாராட்டத் தக்கதாக இருந்தாலும் சாலை, பேருந்து நிலையங்கள் போன்றவற்றுக்கான உள்கட்டமைப்பு மோசம். இங்கிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் திண்டிவனத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். ஆனால், திண்டிவனம் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் கிடையாது.
# நந்தன் கால்வாயைத் தூர்வாரிச் சீரமைக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. பாலாறு மற்றும் செய்யாறு ஆறுகளை இணைத்து 36 ஏரிகளுக்கு நீரைக் கொண்டுவரும் கால்வாய் அது. இதனைச் சீரமைத்தால் விக்கிரவாண்டி, கீழ்பெண்ணாத்தூர், செஞ்சி ஆகிய பகுதிகள் பாசன வசதி பெறும். இதற்காக மத்திய அரசு ரூ. 250 கோடியும், மாநில அரசு ரூ.14.5 கோடியும் நிதி ஒதுக்கியுள்ளன. ஆனால், சுற்றுச்சூழல் துறையின் அனுமதியின்மையால் திட்டம் கிடப்பில் உள்ளது.
# வேலூரிலிருந்து தென் மாவட்டங்களுக்கு திருக்கோவிலூர் வழியாகத்தான் செல்ல வேண்டும். ஆனால், இங்குள்ள பேருந்து நிலையம் மிகச் சிறியது. புதிய பேருந்து நிலையம் வேண்டும் என்பது திருக்கோவிலூர் மக்களின் கோரிக்கை. திருக்கோவிலூரில் ரயில்வே முன்பதிவு மையமும் கிடையாது.
# தொகுதி முழுவதுமே குடிநீர் வசதிகள் சுமார்தான். குடிநீர் வசதிகளை மேம்படுத்த வேண்டும். தொகுதிக்குள் பெரிய தொழிற்சாலைகளோ பெரும் நிறுவனங்களோ அதிகம் இல்லை. எனவே, தொகுதியில் வேலைவாய்ப்புகள் மிகக் குறைவு. பெரும்பாலான படித்த இளைஞர்கள் வேலை தேடி சென்னைக்குச் செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது.
# திண்டிவனம் பகுதிக்கு அதிக நிதி ஒதுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியலில் ஜொலிக்க மாட்டார்கள் என்றொரு மூட நம்பிக்கை இங்கு நிலவுவது தொகுதியின் சாபக்கேடு. முன்பு இங்கு எம்.பி-யாக இருந்த தி.மு.க-வின் வெங்கட்ராமன் திண்டிவனத்தில் மேம்பாலம் கட்டப் பெரும் நிதி ஒதுக்கினார். அந்த நிதியில்தான் திண்டிவனம் மேம்பாலம் கட்டப்பட்டது. பின்பு, அவர் அரசியலில் சோபிக்கவில்லையாம். அதன் பின்பு வந்த எம்.பி. செஞ்சி ராமச்சந்திரனும் திண்டிவனம் பகுதிக்கு நிறைய பணிகளைச் செய்தார். அவரும் அரசியலில் ஜொலிக்காததால் அந்த மூட நம்பிக்கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறார்களோ எம்.பி-க் கள் என்று சந்தேகம் உள்ளது மக்களுக்கு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT