Published : 04 Mar 2014 07:44 PM
Last Updated : 04 Mar 2014 07:44 PM

இது எம் மேடை: அழிந்துவரும் விவசாயம்

ராஜேந்திரன் - விவசாய சங்கத் தலைவர், தண்டுரை.

விவசாயம் அழிந்துவருவது தொகுதியின் மிகப் பெரிய பிரச்சினை. சென்னை அருகில் இருப்பதால், ரியல் எஸ்டேட் தொழில் காரணமாக விவசாய நிலங்கள் மனைகளாக மாறிவருகின்றன. 10 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் நடந்த விவசாயம், இப்போது 3,000 ஏக்கராகச் சுருங்கிவிட்டது.

மத்திய அரசின் 100 நாட்கள் வேலைத் திட்டத்தால் விவசாய வேலைக்குக்கூட ஆட்கள் கிடைப்பதில்லை. தரமான விதைகள், உரங்கள் கிடைப்பதில்லை. உரம் விலை இருமடங்காக உயர்ந்துவிட்டது. ஆரணி, கொசஸ்தலை ஆகிய ஆறுகள் மற்றும் ஏரிகளில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுவதால் நீர்நிலைகள் வறண்டுவிட்டன.

சென்னைக்குக் குடிநீர் விநியோகம் செய்வதற்காகத் தொகுதியின் பல இடங்களில் ராட்சத ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுவதால், நிலத்தடி நீரும் குறைந்துவிட்டது. இதனால் கிணற்றுப் பாசனத்தை நம்பியிருந்த விவசாய நிலங்களும் வானம் பார்த்த பூமியாகி விட்டன. அவற்றை ரியல் எஸ்டேட் முதலாளியிடம் விற்பதைத் தவிர வேறு வழியில்லை. விளைபொருட்களைப் பாதுகாக்கக் குளிர்பதனக் கிடங்குகள் தேவை. இங்கு நெல் கொள்முதல் மையங்களும் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x