Published : 20 Mar 2014 07:57 PM
Last Updated : 20 Mar 2014 07:57 PM

திருப்பூரில் தொழிலாளர்களுக்குத் தங்கும் விடுதி கட்டப்படுமா?

# நாட்டின் பின்னலாடைகளின் மொத்த ஏற்றுமதியில் திருப்பூரின் பங்கு மட்டும் 80%. ஆனால், தொழிலாளர்களுக்குத் தற்போதுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில், உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற முடியாது. இங்கு படுக்கை வசதிகளும் இல்லை. தவிர, மாவட்டத் தலைமை மருத்துவமனையிலும் உள்கட்டமைப்பு வசதிகள் மிக மோசம். எனவே, 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக இ.எஸ்.ஐ-யை மேம்படுத்தி, போதுமான அளவு டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்பது தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை.

# பனியன் கம்பெனித் தொழிலாளர்களுக்குப் பிரத்தியேகப் பேருந்துகள் தேவை. குறிப்பாக, இரவு நேரப் பேருந்துகள். திருப்பூரில் தங்கிப் பணிபுரியும் பெண்களுக்குத் தனி விடுதி கட்டித்தர வேண்டும் என்கிற கோரிக்கையும் கிடப்பில் உள்ளது.

# உடுமலை, ஆனைமலை, நல்லாறு நீர்ப் பாசனத் திட்டம் நிறைவேற்ற வேண்டும் என்பது பல ஆண்டுக் கோரிக்கை. கேரள அரசு இடைமலை ஆறு அணைத் திட்டத்தை நிறைவேற்றிய பிறகு, நல்லாறு அணைத் திட்டம் கட்ட வேண்டும் என்று 1972-ல் எழுப்பப்பட்ட ஆனைமலை மற்றும் நல்லாறு இரு அணைத் திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், ஆறு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

# திருப்பூர் மாவட்டத்தில் நான்கு அரசு கலைக் கல்லூரிகள் உள்ளன. ஆனால், இங்கு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. காரணம், திருப்பூரில் அரசு பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் இல்லை. இதனால், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் கோவை, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது.

# பனியன் ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு 13,500 கோடி ரூபாய் வர்த்தகம் நடக்கிறது. ஆனாலும் மின்வெட்டு மற்றும் நூல் விலை உயர்வு பிரச்சினைகளால் தொழில் பாதிக்கப்பட்டு பல நிறுவனங்கள் மூடும் அபாயத்தில் இருக்கின்றன. மின்வெட்டுப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும். நூல் விலையைக் கட்டுப்படுத்துவதுடன், சாய ஆலை பிரச்சினைக்கும் தீர்வுகாண வேண்டும் என்கின்றனர் தொழில் முனைவோர்.

# திருப்பூர் ரயில் நிலையம் நவீனப்படுத்தப்படவில்லை. பெரும்பாலான தொலைதூர ரயில்கள் திருப்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்வதில்லை. இரண்டு நடைமேடைகளிலும் எப்போதும் பார்சல்கள் குவிந்து கிடப்பதால், பயணிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

# திருப்பூர் மாநகரப் பகுதியில் நெரிசலைத் தவிர்க்க தெற்குப் பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட வேண்டும். திருப்பூர் நகரின் இதர பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்களைத் தீர்க்கும் வண்ணம் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு, தேவையான இடங்களில் மேம்பாலங்கள், நகருக்கு வெளியே வட்டச் சாலைகள் அமைக்கப்பட வேண்டும். பவானியில் இருந்து மேட்டூர் நெடுஞ்சாலையில் நெரிசல் அதிகரிப்பதால், இருவழிச் சாலை அமைக்க வேண்டும் என்கின்றனர் மக்கள்.

# திருப்பூருக்கான நான்காவது குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தொகுதியின் பல இடங்களில் குடிநீர் விநியோகம் சீராக இருந்தாலும், பெருந்துறை உள்ளிட்ட சில இடங்களில் வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுவதால் மக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

# பெருந்துறையில் சிப்காட் வளாகத்தில் பொதுச் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.

# கோபிசெட்டிபாளையத்தில் கூடுதல் பேருந்து நிலையம் ஏற்படுத்த வேண்டும். அங்குள்ள வனப் பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களில் பயிர்களைக் காட்டுப் பன்றிகள் தொடர்ந்து சேதப்படுத்திவருவதால், காட்டுப் பன்றிகளை வனவிலங்குகள் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். அதேபோல் அந்தியூரில் யானைகள் ஊருக்குள் புகுவதைத் தடுக்க தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

# அந்தியூரில் மலைவாழ் மக்களுக்கு மலைவாழ் பிரிவினர் என்று சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது அந்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.

# பவானியில் ஏராளமான சாயம் மற்றும் சலவை ஆலைகள் உள்ளன. இதிலிருந்து வெளியேற்றப் படும் கழிவுகளால் பவானி ஆறு பாதிக்கப்படுகிறது. நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது. எனவே, இங்கு பொதுச் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை.

# நீண்ட நாளாகக் கிடப்பில் இருக்கும் மேட்டூர் வலது கரை பாசனத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால், அந்தப் பகுதி விவசாயிகள் இரண்டு போகம் விவசாயம் மேற்கொள்ள முடியும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x