Published : 26 Mar 2014 06:17 PM
Last Updated : 26 Mar 2014 06:17 PM

பெரம்பலூரில் பாதியில் நிற்கும் பெரும் திட்டங்கள்!

# மூன்று முறை இங்கு ஜெயித்த ஆ. ராசா பெரம்பலூர் பொதுத் தொகுதி ஆனதும் நீலகிரி செல்ல, நெப்போலியன் இங்கு வென்றார்.

ஆ. ராசா முன்னெடுத்த திட்டங்களை முடித்துக் காட்டுவேன் என்ற நெப்போலியனின் வாக்குறுதியை நம்பியே பெரும்பாலான ஓட்டுகள் விழுந்தன. சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு நிலம் கையகப்படுத்தியது, மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அடிக்கல் நாட்டியது, சட்டக் கல்லூரிக்கான முயற்சி எடுத்தது உட்பட ஆ. ராசா முன்னெடுத்த திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

# ரயில் வசதி இல்லாத தமிழக மாவட்டம் பெரம்பலூர் என்கிற அவப்பெயர் காலம்காலமாக நீடிக்கிறது. அரியலூர் சென்றுதான் ரயில் பிடிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் ஊருக்குள் ரயிலைக் கொண்டுவருவேன் என்று வாக்குறுதி கொடுக்கிறார்கள். ஆனால், ஜெயித்த பிறகு, அதைப் பற்றிப் பேசுவதுகூடக் கிடையாது. அரியலூர் - நாமக்கல் இடையே பெரம்பலூர் - துறையூரை இணைக்கும் ரயில் பாதைத் திட்டம் ஆய்வுப் பணிகளோடு நின்றுபோனது.

# பெரம்பலூர் அருகே எளம்பலூரில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் சிட்கோ தொழிற்பேட்டைப் பணிகள் தொடங்கி 18 ஆண்டுகள் கழித்தும் அது முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை. அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் திட்டமிடப்பட்ட 90 சிறு தொழிற்சாலைகளில் ஆறு மட்டுமே இங்கு இயங்குகின்றன. எனவே, தேவையான வசதிகளை ஏற்படுத்தி, பெரம்பலூரின் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும்.

# குளித்தலையில் பேருந்து நிலையம் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாகப் பேருந்து நிலையத்துக்கான இடம் தேர்வுசெய்வதிலேயே இழுபறி நீடிக்கிறது.

# முசிறி, மணச்சநல்லூர், லால்குடி விவசாயிகளுக்குத் தோள் கொடுக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை. திருவாரூர், தஞ்சாவூர் போன்ற டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும் முன்னுரிமைகளை இங்கும் வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

# கொல்லிமலை, பச்சமலைகளிலிருந்து மழைக் காலங்களில் ஓடைகள் வழியாகத் தண்ணீர் சமவெளிக்கு வந்து ஏரிகளை நிரப்பும். ஆனால், காலப்போக்கில் ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டதால், ஏரிகளுக்கு நீர்வரத்து நின்றுவிட்டது. இதனால், துறையூர், பெரம்பலூர் வட்டார விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள்.

# தமிழகத்தின் வெங்காயத் தேவையில் 51 சதவிகித்தைப் பெரம்பலூர் பூர்த்திசெய்கிறது. இங்கு ஆயிரக் கணக்கான ஏக்கரில் வெங்காயம் பயிரிடப்படுகிறது. ஆனால், விவசாயிகளின் நீண்ட காலக் கோரிக்கையான வெங்காய குளிர்பதனக் கிடங்கு செட்டிகுளத்தில் அமைக்கப்பட்டும், அரசியல் காரணங்களால் செயல்படாமல் முடங்கிக்கிடக்கிறது. தவிர, எளம்லூரில் தானியக் குளிர்பதனக் கிடங்கு கட்டப்பட்டும் செயல்பாட்டுக்கு வரவில்லை என்பது விவசாயிகளின் வருத்தம்.

# அரசு பரிந்துரைத்த பருத்தி ரகங்களைப் பயிரிட்ட விவசாயிகள் சோகத்தில் இருக்கிறார்கள். அவை அத்தனையும் நோய்வாய்ப்பட்டு அழிந்துபோனதில் விவசாயிகளுக்கு ஏகப்பட்ட நஷ்டம். அவர்களுக்கு விரைவில் நிவாரணம் அளிக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.

# எலுமிச்சை, வாழை போன்ற விளைபொருட்களைச் சேமிப்பதற்கான குளிர்பதனக் கிடங்குகள் இங்கு தேவை. விளைபொருட்களை மதிப்புக்கூட்டுப் பொருட்களாக மாற்றுவதற்கான தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டால், தொகுதி பொருளாதார வளர்ச்சி பெறும் என்கின்றனர் மக்கள்.

# மணச்சநல்லூர், லால்குடி பகுதிகளில் அரசு அரிசி ஆலைகளை ஆரம்பித்தால், பொதுவிநியோகத் திட்டம் உள்ளிட்ட தேவைகளுக்கும் தன்னிறைவு கிடைக்கும்; அரசி விலையையும் கட்டுப்படுத்தலாம்.

# முசிறி, குளித்தலை பகுதிகளின் பாரம்பரிய கோரைப்பாய்த் தொழில் அழிந்துவருகிறது. அவர்களுக்கான கடன் உதவிகள், தொழிற்சாலை, ஏற்றுமதி முகாந்திரங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது மக்களின் விருப்பம்.

# பெரம்பலூரின் கல் குவாரிகளில் முறையற்ற வகையில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாகக் கனிம வளம் வெட்டி எடுக்கப்படுகிறது. மலைகள் சுரண்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. முசிறி, குளித்தலை காவிரிப் படுகைகளில் இருக்கும் மணல் குவாரிகளில் நடைபெறும் மணற்கொள்ளை சமீப காலமாக அந்தப் பகுதிகளின் சட்டம் - ஒழுங்குக்குச் சவால் விடுகின்றன. இவற்றையும் கண்காணித்து முறைப்படுத்த வேண்டும் என்கிறார்கள் மக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x