Published : 06 Apr 2014 10:41 AM
Last Updated : 06 Apr 2014 10:41 AM
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் காசோலைகள் பட்டுவாடா செய்வதை இந்திய கம்யூனிஸ்ட், திமுகவினர் தடுத்து நிறுத்தினர்.
முத்துப்பேட்டை புதுகாளியம்மன் கோயில் அருகே மதுரா மைக்ரோ பைனான்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இதன்கீழ் இப்பகுதி கிராமங்களில் பல்வேறு மகளிர் சுய உதவிக் குழுக்கள் இயங்கி வருகின்றன. தேர்தல் நடத்தை விதிமுறைப்படி, சுய உதவிக் குழுக்களுக்கு பணம் மற்றும் காசோலைகள் வழங்க அனுமதி இல்லை, அதனால் தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில நாள்களாக இந்த நிதி நிறுவனம் அருகே நூற்றுக்கணக்கான பெண்கள் காத்திருந்ததைப் பார்த்த அரசியல் கட்சியினர் கேட்டபோது, பயிற்சி நடப்பதாக நிறுவனத்தினர் கூறிவந்தனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் நூற்றுக்கணக்கான சுய உதவிக் குழு பெண்கள் அலுவலகத்தின் உள்ளேயும் வெளியேயும் கூட்டமாக நின்றதால் சந்தேகமடைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் முருகையன், மாவட்டக் குழு உறுப்பினர் சந்திரசேகர ஆசாத், திமுக பேரூராட்சி கவுன்சிலர் அய்யப்பன், வார்டு செயலர் செல்வம் உள்ளிட்டோர் நிதி நிறுவனத்தின் உள்ளே சென்று பார்த்தபோது, நூற்றுக்கணக்கான சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ.12 ஆயிரம் வீதம் காசோலைகள் வழங்கிக்கொண்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் அதனை தடுத்து நிறுத்தினர். தகவலறிந்த தேர்தல் பறக்கும் படை அலுவலர் காலேஸ்வரன் தலைமையிலான குழுவினர் அங்கு வந்து சோதனை நடத்தியபோது, ரூ.5.16 லட்சம் மதிப்புள்ள காசோலைகள் இருந்ததைக் கண்டறிந்தனர்.
அவற்றை பறிமுதல் செய்த அலுவலர்கள், நிதி நிறுவன மேலாளர் முத்துலெட்சுமி, மண்டல அலுவலர் ராஜசேகர் மற்றும் ஊழியர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மேலும், கடந்த சில நாள்களாக வழங்கப்பட்ட காசோலைகள் குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆளும் கட்சியினரின் பரிந்துரையின் பேரில் இவை பட்டுவாடா செய்யப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT