Published : 28 Apr 2014 10:00 AM
Last Updated : 28 Apr 2014 10:00 AM
அத்வானியின் ரத யாத்திரையை பிஹாரில் தடுத்து நிறுத்தி, அவரைக் கைது செய்த 24 ஆண்டுகள் கழித்து, நரேந்திர மோடியின் செல்வாக்கை பிஹாரில் தடுத்து நிறுத்தும் முயற்சியில் தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத். தேர்தல்பற்றி உற்சாகமாகப் பேசுகிறார்.
மக்களவைத் தேர்தலில் உங்களுடைய கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கிறது?
இங்கே போட்டி எங்கே இருக்கிறது? பொதுக்கூட்ட மைதானங்களில் என்னுடைய பேச்சைக் கேட்கத் திரளும் கூட்டத்தின் முழு அளவையும் தொலைக்காட்சிகள் காட்டுவதே இல்லை. நரேந்திர மோடி சளைத்துவிட்டார் என்றே நினைக்கிறேன். அவருடைய கூட்டங்களுக்கு மக்கள் இப்போது வருவதே இல்லை. கூட்டம் குறைந்துகொண்டே வருகிறது. அவருடைய கூட்டத்துக்குப் போகிறவர்கள்கூட ஒரு கலவரக்காரர் எப்படி இருப்பார் என்று நேரில் பார்க்கத்தான் போகின்றனர்.
உங்களுடைய முக்கிய அரசியல் எதிராளி யார் - மோடியா, நிதீஷ்குமாரா?
அட... இங்கே போட்டியே இல்லை என்கிறேன். ஒருதரப்புதான் கை ஓங்கிய நிலையில் இருக்கிறது. அந்தத் தரப்பு நாங்கள்தான். பிஹாரில் உள்ள எல்லாத் தொகுதிகளுக்கும் செல்லுங்கள், மக்கள் என்னோடு இருப்பதைத் தெரிந்துகொள்வீர்கள்.
முதல் இரண்டு சுற்று வாக்குப்பதிவு எப்படி இருந்தது?
பாட்னாவில் இருக்கும் இரண்டு தொகுதிகளிலும் வென்றுவிட்டதாக பா.ஜ.க. நினைக்கிறது. அவர்களுடைய கனவெல்லாம் பலூன்போலக் காற்றில் உயரப் பறந்துகொண்டிருக்கிறது. அது பட்டென்று வெடித்ததும்தான் உண்மை அவர்களுக்கு உறைக்கும். களத்தில் என்ன நடக்கிறது என்று செய்தி ஊடகங்களுக்கு எதுவும் தெரியாது. நான் மட்டும்தான் இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவன். பேச்சைக் கேட்க மக்கள் வராதபோது கூட்டங்களை நடத்தி என்ன பயன்? பிஹாரில் இதுதான் நிலைமை, மற்ற மாநிலங்களில் என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியாது.
மீண்டும் முஸ்லிம் - யாதவ் ஆதரவாளர்களை உங்கள் பக்கம் ஈர்த்துவிட்டதாக நினைக்கிறீர்களா?
முஸ்லிம்கள், யாதவர்கள் மட்டுமல்ல, மகா தலித்துகள், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், முற்பட்ட வகுப்பினர்கூடப் பெரும் எண்ணிக்கையில் வந்து என்னை ஆதரிக்கின்றனர். முற்பட்ட வகுப்பில் முற்போக்கானவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் மோடி பித்துப்பிடித்து அலையவில்லை.
இந்தத் தேர்தலில் பிரச்சினைகள் என்ன? அடுத்துவரும் சுற்றுகளிலும் இப்படியேதான் இருக்குமா?
பா.ஜ.க. ஏற்கெனவே நம்பிக்கையை இழந்துவிட்டது. கிரிராஜ் சிங்கும் நிதின் கட்காரியும் விரக்தி காரணமாக வசைபாடத் தொடங்கிவிட்டனர். மோடியைச் சகித்துக்கொள்ள முடியாதவர்கள் பாகிஸ்தானுக்குப் போங்கள் என்கிறார் கிரிராஜ் சிங். பிஹாரிகளுக்கு ஜாதி உணர்வு ரத்தத்திலேயே ஊறியது என்கிறார் நிதின் கட்காரி.
என்ன அரசியல் சிந்தனை இது? அவர்கள்தான் பாசிஸ்ட்டுகள், மதவாதிகள். இதைத் தெரிந்தேதான் சொல்கிறார்கள்; கடும் ஆட்சேபணைகள் வந்த பிறகு சொன்னதைத் திரும்பப் பெறுகின்றனர். இதுதான் மோடியின் வேலைத்திட்டமா? அவர்களுக்கு மூளை வறண்டுவிட்டது.
காங்கிரஸுடனான கூட்டணி உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதா?
மதச்சார்பற்றவர்களின் வாக்குகள் சிதறாமல் இருக்கக் கூட்டணி அவசியம். இந்தக் கூட்டு நாட்டைக் காப்பதற்காக, அதன் மதச்சார்பற்ற அடித்தளத்தைக் காப்பதற்காக. நாங்கள் திறந்த மனதுடன் செயல்படுகிறோம்.
1990-ல் அத்வானியின் ரத யாத்திரையைத் தடுத்து நிறுத்தினீர்கள்; உங்களுடைய அடுத்த லட்சியம் மோடியின் முயற்சியை…
விரட்டிவிட்டேன். ஒரே உதைதான், மோடி எங்கிருந்து வந்தாரோ அங்கேயே ஓடிவிட்டார். ஆம், அவர் கதை முடிந்தது. இது மதச்சார்பற்ற நாடு. வகுப்புவாத சக்திகள் இங்கு வெற்றிபெறவே முடியாது. பெருந்தொழில் நிறுவனங்கள் என்ன செய்கின்றன என்று பாருங்கள்; அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள்? இளைஞர்கள்தான் பாழாய்ப்போவார்கள்.
யார் அடுத்த பிரதம மந்திரியாக வருவார்கள்? அடுத்த பிரதமரை நீங்கள்தான் தீர்மானிப்பீர்களா? தேர்தலுக்குப் பிறகு அரசியல் கட்சிகளிடையே புதிய அணி சேர்க்கை ஏற்படுமா?
இது எதுவும் என்னுடைய செயல்திட்டத்தில் இப்போதைக்கு இல்லை. நான் இப்போது போர்க்களத்தில் இருக்கிறேன்.
தமிழில்: சாரி
© தி இந்து (ஆங்கிலம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT