Published : 15 Apr 2014 09:54 AM
Last Updated : 15 Apr 2014 09:54 AM
நரேந்திர மோடி ரஜினிகாந்தை சந்தித்தது தமிழக அரசியலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறி இருக்கிறார் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான கார்த்தி சிதம்பரம்.
ரஜினிகாந்தும் மத்திய நிதிய மைச்சர் ப.சிதம்பரமும் நெருக்க மான நட்பில் இருப்பவர்கள். அரசி யலுக்கு வந்த பிறகு சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் ரஜினி யுடன் நல்ல நட்பில் இருக்கிறார். இந்நிலையில், ரஜினியை மோடி வீடு தேடிச் சென்று சந்தித்தது குறித்து கார்த்தி சிதம்பரத்திடம் கேட்டபோது, ’’அழகிரி கூடத்தான் ரஜினியைச் சந்தித்தார். ரஜினிக்கு எல்லாக் கட்சியிலும் நண்பர்கள் இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். எங்களுக்கு ரஜினி என்றைக்குமே நல்ல நண்பர். சோ-வும் நாங் களும் எதிர்மறையான கருத்து உடையவர்கள். ஆனால், எங்கள் இருவருக்கும் ரஜினி நண்பராய் இருக்கிறார்.
எனவே, ரஜினியை மோடி சந்தித்ததில் தவறொன்றும் இல்லை. இது தமிழக அரசி யலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது’’ என்று சொன்னார்.
’மோடி வலுவான தலைவர். அவர் நினைத்த காரியம் வெற்றி பெற வாழ்த்துகள்’ என்று சொல்லி இருக்கிறாரே ரஜினி? என்று கேட்ட போது, ’’வீட்டுக்கு வந்தவரை வாழ்த்தாமல் தோற்றுப் போவீர்கள் என்றா சொல்ல முடியும்? தமிழகத்தின் சிறப்பே வந்தவர்களை உபசரித்து அனுப்பும் விருந்தோம்பல்தான். அப்படித்தான் மோடிக்கு ரஜினி விருந்தோம்பல் செய்திருக்கிறார்’’ என்றார் கார்த்தி.
தொடர்ந்து அவரிடம், இதுவரை பாஜக-வை தாக்காமல் இருந்த ஜெயலலிதா திடீரென, ’பாஜக-வையும் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்’ என்று பேச ஆரம்பித்திருக்கிறாரே? என்று கேட்டபோது, ’’பாஜக-வுக்கும் அதிமுக-வுக்கும் உள்ளுக்குள் இன்னமும் ரகசிய உறவு இருக்கிறது. இல்லாவிட்டால், இரண்டு கட்சிக்கும் ஆலோசகரான சோ, ‘பாஜக போட்டியிடாத இடங்களில் அதிமுக-வுக்கு வாக்களிக்க வேண்டும்’ என்று சொல்வாரா? எனவே பாஜக-வை ஜெயலலிதா தாக்கிப் பேசுவதில் உண்மை இருப்பதாக நாங்கள் நம்பவில்லை’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT