Published : 21 Apr 2014 03:50 PM
Last Updated : 21 Apr 2014 03:50 PM

சிவகங்கை தொகுதியில் வாகை சூடுவது யார்? - உள்ளடிகளால் உறக்கமின்றி தவிக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு நடைபெற 2 நாள்களே உள்ள நிலையில், சிவகங்கை தொகுதியில் வேட்பாளர்களின் பிரச்சாரம் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. முக்கியக் கட்சிகளின் வேட்பா ளர்கள், சொந்தக் கட்சியினரின் ‘உள்ளடி’ வேலைகளால் உறக்கமின்றி தவிக்கின்றனர்.

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் 27 பேர் களத்தில் இருந்தாலும், குறிப்பாக அ.தி.மு.க. வேட்பாளர் பிஆர். செந்தில்நாதன், காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், திமுக வேட்பாளர் சுப. துரைராஜ், பாஜக வேட்பாளர் ஹெச். ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ்.கிருஷ்ணன் ஆகியோரிடையேதான் போட்டி நிலவுகிறது.

அதிமுக வேட்பாளர் பிஆர். செந்தில்நாதன்

அதிமுக அரசின் இலவசத் திட்டங்கள், முதல்வர் ஜெயலலிதாவின் பிரச்சாரம், உறக்கமின்றி உழைக்கும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் தேர்தல் வியூகம், பண(டை) பலம், நட்சத்திரப் பட்டாளங்களின் பிரச்சாரம், தொகுதிக்குள்பட்ட 4 ஆளும்கட்சி எம்எல்ஏக்களின் செல்வாக்கு ஆகியவை சாதகமாக உள்ளன. குறுகிய காலத்தில் அசுரவளர்ச்சி அடைந்துள்ளதால், தடை ஏற்படுத்த தருணம் பார்க்கும் மு(இ)ன்னாள் எம்எல்ஏ.க்கள், நிர்வாகிகள்.

பிரச்சாரத்தைவிட பிரச்சினையை ஏற்படுத்த எதிர்க் கட்சிகளோடு கைகோர்க்கும் கீழ்மட்ட நிர்வாகிகள், மின்வெட்டு, குடிநீர் பிரச்சினை பாதகமான அம்சங்கள்.

காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம்:

தொகுதியில் ஏழு முறை எம்.பி.யாக வென்று உயர் பதவி வகிக்கும் தந்தை நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் செல்வாக்கு, தொகுதி முழுக்க வங்கிகள் திறந்து கல்விக்கடன், மகளிர் குழுவினருக்கு கடன், தொழில் கடன், தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 19 கோடியை வளர்ச்சித் திட்டங்களுக்கு வழங்கியது, தனியார்துறை மூலம் 400 கண்மாய்களை தூர்வாரியது; சிறுபான்மையினர், தலித், மகளிர் மாநாடு நடத்தியது சாதகமான அம்சங்கள்.

செல்வாக்கு மிக்க உள்துறை, நிதி அமைச்சர் பதவிகளில் இருந்தும், தொகுதிக்கு உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம். பெரிய தொழிற்சாலைகளைக் கொண்டு வராதது, கிராபைட் ஆலையை விரிவாக்கம் செய்யாதது, சிதம்பரம் நினைத்திருந்தால், சிவகங்கை தொகுதியை சிங்கப்பூர் ஆக்கி இருக்கலாம் என்ற பிரச்சாரமும் எடுபடுகிறது. தொகுதிக்கு 97 முறை வந்து சென்றதைக் கூட சிதம்பரம் சாதனையாகச் சொல்வது. வாசன், சுதர்சனநாச்சியப்பன் கோஷ்டிகளுக்கு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட சின்னம் கொடுக்காதது, கட்சிக்காரர்களை தேர்தல் நேரத்தில் மட்டுமே கண்டுகொள்வது போன்றவை பாதகங்கள்.

திமுக வேட்பாளர் சுப.துரைராஜ்:

சுமார் 30 ஆண்டுகளுக்குப்பின் போட்டியிடுவதால் திமுகவினரிடையே ஏற்பட்டுள்ள எழுச்சி, முன்னாள் அமைச்சர் பெரியகருப்பனின் பக்க பலம், கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு, சிறுபான்மையினரின் ஆதரவு, ஆலங்குடி, திருமயம், காரைக்குடி பகுதியில் வேட்பாளரின் ஜாதி செல்வாக்கு, ஸ்டாலின் சூறாவளிப் பிரச்சாரம் ஆகியவை சாதகமாய் உள்ளன.

அதிமுகவிலிருந்து வந்தவர் சுப. துரைராஜ், உண்மைத் தொண்டர்கள் பலர் இருக்க பணம் கொடுத்து ‘சீட்’ வாங்கியவர், இவரை தோற்கடிக்க வேண்டும் என காரைக்குடியில் மு.க. அழகிரி பேசியது; முன்னணி நிர்வாகிகள் பலர் ‘சீட்’ கிடைக்காத விரக்தியில் உள்ளடி வேலைகளில் இறங்கியுள்ளது, கட்சிக்காரர்களுக்கே பணம் செலவழிப்பதில் சிக்கனம் காட்டுவது போன்ற காரணங்கள் பாதகமாய் உள்ளன.

பாஜக வேட்பாளர் ஹெச். ராஜா

ஆடிட்டர் தொழிலுடன், அரசியல் அனுபவமிக்கவர், ப.சிதம்பரத்திற்கு புள்ளி விவரமாய் பதிலடி தரும் பிரச்சாரம், நாடு முழுவதும் எழுந்துள்ள மோடி அலை மீது அதீத நம்பிக்கை, அசராமல் உழைக்கும் தேமுதிக, மதிமுக, மற்றும் கூட்டணிக் கட்சியினரின் பலம், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, ராஜ்நாத் சிங், வெங்கைய்ய நாயுடு ஆகியோரின் பிரச்சாரம் ஆகியவை சாதகமாய் உள்ளன.

மோடி அலையை நம்பியவர், சொந்தக் கட்சியின் சொற்ப தொண்டர்களை நம்பாதது, பாஜக நிர்வாகிகளுக்கு பதில், தமது ஆதரவாளர்களை களம் இறக்கி போட்டி ஏற்படுத்தியது, மாநிலத் தலைவர் பொன்னார் அணி, ஹெச்.ஆர் அணி என கோஷ்டிகளை உருவாக்கியது, கூட்டணிக் கட்சியினருக்கு ‘கவனிப்பில்’ தொய்வு போன்ற பல காரணங்கள் பாதகமாய் உள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் எஸ்.கிருஷ்ணன்

வழக்கறிஞர் தொழிலுடன் கட்சிப் பணியாற்றுவதால் தோழர்கள் மத்தியில் பிரபலம், சிவகங்கை தொகுதியை தொடர்ந்து தக்க வைத்துள்ள எம்எல்ஏ. குணசேகரனின் தொகுதி செல்வாக்கு, தேசியத் தலைவர்களின் பிரச்சாரம், எதிர்க்கட்சிகளின் முறைகேடுகளை அம்பலப்படுத்தும் பிரச்சாரம், எதையுமே எதிர்பார்க்காமல் உழைத்தும் தோழர்களின் பலம், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, தொழிற்சங்க ஆதரவு சாதகமாய் உள்ளன. இதுவரை அதிமுக கூட்டணியிலிருந்து விட்டு தற்போது எதிர்த்துப் பேசி ஆதரவு திரட்டுவது, பிரச்சாரச் செலவுக்கு கூட நிதியின்றி தடுமாறுவது பாதகமாய் உள்ளன.

இத்தொகுதியில் ‘நிதி’ வெல்லுமா, நீதி வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளதால் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று, வாகை சூடப்போகும் வேட்பாளர் யார் என்பதை நாடே எதிர்பார்க்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x