Last Updated : 28 Apr, 2014 10:00 AM

 

Published : 28 Apr 2014 10:00 AM
Last Updated : 28 Apr 2014 10:00 AM

கொஞ்சம் படிப்பு, நிறைய அரசியல்!- ஒரு கல்வி நிலையம்

ஒரு வகுப்பறை. ஆசிரியர் மன்மோகன் சிங். கரும்பலகையில் குச்சியை வைத்து சுட்டிக்காட்டிப் பாடம் நடத்துகிறார் சிங். மாணவர்களாகத் தரையில் குத்தவைத்து உட்கார்ந்திருக்கிறார்கள் அவருடைய மந்திரிமார்கள். கரும்பலகையில் எழுதப்பட்டிருக்கும் பாடத் தலைப்பு: ஊழல் செய்வது எப்படி?

இப்படி வரையப்பட்ட ஒரு சுவரோவியத்தை இந்தியாவில் எந்தக் கல்வி நிலையத்திலாவது - அதுவும் துணைவேந்தர் அறைக்கு எதிரிலேயே - நாம் பார்க்க முடியுமா? பிரதமரில் தொடங்கி அருணாச்சலப் பிரதேசத்தின் உள்ளூர் அரசியல்வாதி வரை சகலரையும் கிண்டலடிக்கும் கேலிச் சித்திரங்கள், இந்திய ராணுவம் காஷ்மீரில் நடத்தும் அத்துமீறல்களைக் காட்டமாக விமர்சிக்கும் சுவரொட்டிகள், இனவாத அரசியலுக்குக் கடுமையான எச்சரிக்கைகளை விடுக்கும் சுவரோவியங்கள்...

- டெல்லிவாசிகளுக்கு ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆச்சர்யம் இல்லை. ஆனால், டெல்லி எல்லைக்கு அப்பாலிருந்து வரும் எவரையும் ஆச்சர்யத்திலும் பரவசத்திலும் ஆழ்த்தும் ஒரு கனவுக் கல்விச்சாலை அது.

ஒரு குட்டி இந்தியா

டெல்லியின் தென் பகுதியில் ஆரவல்லி மலைத்தொடரின் கரடுமுரடான பரப்பில், கிட்டத்தட்ட ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஒரு குட்டி இந்தியா. மலைப் பாறைகளும் புல்வெளிகளும் மரங்களும் நூற்றுக்கணக்கான பறவைகளும் வன உயிரினங்களும் அடங்கிய இந்தப் பல்கலைக்கழகத்தின் வளாகம், ஒரு பாடசாலை என்பது வெறும் செங்கற்களால் மட்டுமே கட்டப்படுவது இல்லை என்பதைச் சொல்லாமல் சொல்லக் கூடியது.

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்து வரும் ஏழாயிரத்துச் சொச்ச மாணவ - மாணவிகள் இங்கு படிக்கின்றனர். தவிர, நூற்றுமுப்பது வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள். ஏராளமான துறைகள் இந்தப் பல்கலைக்கழகத்தில் உண்டு. அனைத்துத் துறை மாணவர்களுக்கும் பொதுவான துறை அரசியல்!

பேச்சுதான் ஆதாரச் சுருதி

ஒரு பல்கலைக்கழகம் என்பது மனிதநேயம், சகிப்புத்தன்மை, பகுத்தறிவு, உண்மையைத் தேடுவதற்கான களமாக இருக்க வேண்டும்; சாகச சிந்தனைகளை வளர்ப்பதற்கான களமாக இருக்க வேண்டும்; மிக உயர்ந்த லட்சியங்களுக்காக மனித இனம் மேற்கொள்ளும் முன்னோக்கிய பயணத்துக்கு உதவ வேண்டும் என்று கனவு கண்டார் நேரு. அவருடைய மகள் இந்திராவால் தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், 40 ஆண்டுகள் ஆகும்போதும் அந்த தாகத்தை இன்னமும் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

எங்கு பார்த்தாலும் மாணவ - மாணவிகள் கைகோத்து நடக்கிறார்கள். நள்ளிரவிலும் மணிக்கணக்காக உட்கார்ந்து பேசுகிறார்கள். “பேச்சுதான் இந்தப் பல்கலைக்கழகத்தின் ஆதாரச் சுருதி. பாலினச் சமத்துவத்திலிருந்துதான் இந்தப் பல்கலைக்கழகத்தின் ஜனநாயக மாண்புகள் தொடங்குகின்றன” என்கிறார்கள்.

“நான் இங்கு வந்த காலத்தில் பிரமித்துப்போனேன். இங்கிருந்த பேராசிரியர்கள் வரிசை அப்படி. ரொமிலா தாப்பர், சதீஷ் சந்திரா, பிபின் சந்திரா, சேஷாத்ரி... இந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் வரிசையும் இப்படி அற்புதமானது. இந்தியாவின் பல்வேறு சமூகங்களைப் பற்றியும் இங்குபோல வேறெங்கும் கற்றுக்கொள்ள முடியாது” என்கிறார் இப்போது ஓய்வுபெற்றுவிட்ட பேராசிரியர் புஷ்பேஷ் பந்த்.

பேராசிரியரும் முன்னாள் பத்திரிகையாளருமான பெ.ராமஜெயம் இங்கு படித்தவர். “தமிழ்நாட்டிலிருந்து வந்தபோது எனக்கு இது புது உலகமாகத் தெரிந்தது. மணிப்பூரின் காடுகளிலிருந்து வரும் பழங்குடியின மாணவர்களும் பிஹாரின் மிக ஏழ்மையான குக்கிராமங்களிலிருந்து வரும் மாணவர்களும் ஒரு முனை என்றால், நேரெதிர் முனையில் இருப்பார்கள் பஞ்சாப், ஹரியாணா நகரங்களிலிருந்து வரும் மாணவர்கள். இந்தியா எவ்வளவு பரந்துபட்ட நாடு; எத்தனை எத்தனை தேசிய இனங்களும் கலாச்சாரங்களும் இங்கே வேரூன்றி இருக்கின்றன என்பதை நேரில் அவர்கள் மூலமாகப் பார்த்தபோது வியந்துபோனேன்.

நான் படிக்க வந்த காலத்துடன் ஒப்பிடும்போது, இன்றைக்கு நீங்கள் பார்க்கும் சுதந்திரம் கொஞ்சம் கெடுபிடிகளுடன் கூடியது. அன்றைக்கெல்லாம் மாணவர்கள் விடுதிகளுக்கு மாணவிகள் செல்வது சகஜம். இரவில்கூட அப்படிச் செல்வார்கள். அதேபோல, உலகில் எங்கு மக்களுக்கு எதிரான அநீதி நடந்தாலும் அதற்கு எதிரான குரல் இங்கு ஒலிக்கும். கடுமையான விவாதங்கள் நடக்கும். மாணவர்கள் அரசியல் பேசக் கூடாது என்று இங்கே எதாவது குரல் கேட்டால், அது ஒரு பைத்தியக்காரக் குரலாகவே இருக்க முடியும்.

ஆனால், இந்தச் சுதந்திரமும் திறந்த கலாச்சார மனநிலையும் படிப்பை நாசமாக்கிவிடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இன்றைக்கும் இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலின் முன்வரிசையில் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இருக்கிறது” என்கிறார்.

இங்கு மாணவர்கள் - மாணவிகள் விடுதிகள் அருகருகே அமைக்கப்பட்டிருப்பது மட்டும் அல்ல; ஆசிரியர்கள் குடியிருப்புகளும்கூட அவற்றினூடே கலந்து கலந்தே கட்டப்பட்டிருக்கின்றன. யாவரும் ஒரு குடும்பம் என்பதை உணர்த்தவே இந்த ஏற்பாடு. மாணவ - மாணவியர் விடுதிகளை ஒட்டியிருக்கும் தாபாக்கள்தான் அரசியல் பேசுவதற்கான சபைகள். ‘கங்கா தாபா'வில் ஒரு சமோசா - சாயா வாங்கிக்கொண்டு, தாபாவுக்கு முன்னால் கிடக்கும் பெரிய பெரிய பாறாங்கற்களில் ஒன்றைப் பிடித்துக்கொண்டால் போதும்... நாடாளுமன்றம் உங்களுடையது.

மாணவர்களிடம் பேசும்போது அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருந்தாலும், தேசத்தைப் பற்றியும் அது எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றியும் ஒரு தெளிவு இருப்பதை உணர முடிகிறது.

“முதன்முதலாக வந்தபோது எனக்கு எங்களூர் அரசியலே தெரியாது. இங்கு வந்த பின்புதான் தெரிந்துகொண்டேன், என்னுடைய வாழ்க்கையை எவ்வளவு அரசியல் அழுத்தியிருக்கிறது என்று. மாணவர்களை அரசியலிலிருந்து விலக்கிவைப்பது உண்மையில் ஒரு தந்திரம். நம்மைச் சுற்றி எல்லாவற்றிலுமே அரசியல் இருக்கும்போது, நம் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக அரசியல் இருக்கும்போது அதிலிருந்து எப்படி விலகி நிற்க முடியும்?

இந்த வயதுதான் துடிப்பான வயது. தன்னலம் பார்க்காமல் எல்லோருக்காகவும் துணிந்து நிற்கும் வயது. இந்த வயதில் ஒருவனைச் செயல்படாமல் முடக்கிவிட்டால், அப்புறம் காலமெல்லாம் அவனை முடக்கிவைத்துவிடலாம். இன்றைக்கு நம்முடைய கல்வி நிறுவனங்கள் அந்த அயோக்கியத்தனத்தைத்தான் செய்கின்றன” என்கிறார் பிஹாரின் ஷேக்புராவிலிருந்து படிக்க வந்திருக்கும் ராஜேந்திரா.

ஒடிசாவின் கேந்த்ரபராவைச் சேர்ந்த மோனாலிசா சமல், “இன அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் நடத்துவதே காங்கிரஸ், பா.ஜ.க. தொடங்கி எல்லாக் கட்சிகளுக்கும் வாடிக்கையாகிவிட்டது. எதாவது ஒரு புரட்சிகரமான அமைப்பு வர வேண்டும். நாடு இப்போது ஒரு புரட்சிக்காகத்தான் ஏங்கிக்கொண்டிருக்கிறது” என்கிறார்.

ஜம்மு காஷ்மீரின் லடாக்கைச் சேர்ந்த லோப்ஜாங் “ஜனநாயக அரசியல் களம் நல்ல விஷயம். ஆனால், அது புத்தகத்தில் ஒரு மாதிரியும் நடைமுறையில் ஒரு மாதிரியும் இருக்கிறது. இரண்டுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைப்பதே நம் முன் உள்ள பெரிய சவால்” என்கிறார்.

வலியது வெல்லும்

பொதுவில், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் தீவிர இடதுசாரிகளின் கோட்டை என்றாலும், வலதுசாரிகளுக்கும் பஞ்சம் இல்லை. “எல்லாச் சித்தாந்தங்கள் - கருத்துகளுக்கும் இங்கே இடம் உண்டு; நீங்கள் நம்பும் சித்தாந்தம் வலுவானது என்றால், வெளியே அதை மோதலில் விட்டுப்பாருங்கள்... ஜெயித்து வரட்டும்” என்கிறார்கள். எல்லா அரசுப் பல்கலைக்கழகங்களுக்கும் உரிய குறைகளான நிதி ஒதுக்கீட்டின் போதாமை, ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகமும் விதிவிலக்கு அல்ல. ஆனால், இங்கே மாணவர்களே அந்தப் பிரச்சினைகளை முன்னெடுக்கிறார்கள்.

பல்கலைக்கழக நிர்வாகமும் துணைவேந்தரும் அந்தக் குரல்களுக்கு உரிய மதிப்பை அளிக்கிறார்கள். “ஜனநாயகத்தின் அடிப்படை எல்லாக் குரல்களுக்கும் மதிப்பளிப்பது, அதாவது கேட்பது... இங்கே உள்ள ஒவ்வொருவரும் பேசுவதைவிடவும், கேட்பதற்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். இந்த நான்கு தசாப்தங்களில் இந்திய ஜனநாயகத்துக்கு வலுவான குரல்களை ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் அனுப்பியிருக்கிறது. இனிவரும் காலங்களில் மேலும் அந்தக் குரல்கள் வலுவடையும்” என்கிறார்கள் பேராசிரியர்கள்.

அங்கிருந்து திரும்பும்போது, ஆரவல்லி மலைத்தொடரின் ஒரு பாறையின் மீது கைகோத்து நிற்கின்றனர் சில மாணவர்கள். ஓவென்று உற்சாகக் கூச்சலிடுகின்றனர். கை அசைத்து அழைக்கின்றனர். மெல்ல ஏறி அந்தப் பாறையில் அவர்களோடு கைகோத்து நின்று பார்க்கிறேன். நாட்டின் பெரும்பான்மையான கல்லூரிகள் நர்சரி பள்ளிக்கூடங்களாகக் காட்சி அளிக்கின்றன!

- சமஸ், தொடர்புக்கு: samas@kslmedia.in
உதவி: எம்.சண்முகம்​

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x