Published : 06 Apr 2014 03:53 PM
Last Updated : 06 Apr 2014 03:53 PM
"தமிழகத்துக்குள் மீறி நுழைபவர்கள் நம்முடைய எதிர்ப்பால் ஒரு கோடியிலேதான் நிற்க வேண்டும். மோடிகளுக்கு இங்கே வேலை இல்லை என்று நான் உரைக்க முடியும்" என்றார் திமுக தலைவர் கருணாநிதி.
திமுக வேட்பாளர்களை ஆதரித்து, கோவை வஉசி மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் கருணாநிதி பேசியது:
"திமுக இயக்கம் பிறந்தது தேர்தலுக்காக அல்ல; இந்த இயக்கத்தினுடைய குறிக்கோள், நாடி நரம்புகளைத் தொட்டுப் பார்த்தால், அதில் ஏற்படுகின்ற துடிப்பு, இந்த இனத்தை வாழ வைக்க வேண்டும் என்பதற்காக - பெருந்தலைவர்கள், இடஒதுக்கீடு கோரிய சர். பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர், டாக்டர் நடேசனார், முத்தையா முதலியார், சர் ஏ..டி. பன்னீர் செல்வம் போன்ற பெருந்தலைவர்கள் இந்த இயக்கத்திற்காகப் பாடுபட்டார்கள் என்றால், அவர்களுடைய சுயநலத்திற்காக அல்ல, நம்முடைய எதிர்கால வாழ்வுக்காகத் தான் அவர்கள் பாடுபட்டார்கள், பணியாற்றினார்கள்.
கடைசி தேர்தல்...
உங்களுக்கெல்லாம் என்னையும் சேர்த்து சொல்லுகின்றேன். விடுதலை வாங்கித் தர வேண்டும். நாமெல்லாம் தமிழர்கள் என்ற அந்த உணர்வைப் பெற்றாக வேண்டும் என்பதற்காகத்தான் நான் இந்த வயதிலும் பாடுபட்டு வருகின்றேன். எனக்குத் தெரியாது. ஒருவேளை இதுவே நான் கலந்து கொள்கின்ற கடைசித் தேர்தலாகக் கூட இருக்கலாம். "அப்படிச் சொல்லாதே சொல்லாதே" என்று கையை உயர்த்தினீர்கள். அப்படி நான் சொல்லாமல் இருக்க வேண்டுமேயானால், "நாங்கள் தமிழர்களாக வாழ்வோம், யாருக்கும் அடிமையாக மாட்டோம்" என்ற உறுதியை எனக்கு நீங்கள் அளித்தாக வேண்டும். அந்த உறுதியை அளித்தால், ஒன்றல்ல இரண்டல்ல, பத்தல்ல பதினைந்தல்ல இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகக் கூட நான் உயிரோடு இருப்பேன். இல்லையென்றால், அடிமைத் தமிழ்நாட்டில் நானும் உங்களோடு சேர்ந்து வாழ வேண்டியிருக்குமானால் அது வாழ்க்கையாக இருக்காது. ஆகவேதான் தமிழன் தமிழனாக வாழ வேண்டும்.
இந்தி எதிர்ப்பு...
இன்றைக்கு எனக்கு வயது 91. என்னுடைய பதினாறாவது வயதில் ஒரு சோகம். அரசியல் சோகம். அதுதான் இந்தியாவின் ஆலோசனைக்காக லண்டன் மாநகருக்கு அனுப்பப்பட்ட சர். ஏ.டி. பன்னீர் செல்வத்தை ஓமான் கடல் விழுங்கிய சோகம். அந்த ஓமான் கடலை அன்றைக்கே சபித்து; அன்றைக்கு ஓமான் கடல் மீது ஆத்திரம் கொப்பளிக்க ஒரு கவிதையை எழுதியவன் நான்.
"கோமானே! யாம் அழுதழுது உகுத்த கண்ணீர் - ஓமான் கடல் ஆயிரத்தை வெற்றி கொள்ளும்" என்று அன்றைக்கே நான் கவிதை எழுதினேன். இது எப்பொழுது? என்னுடைய பதினாறாவது வயதில். பதினாறாவது வயதில் அந்தக் கவிதை எழுதிய நான், 13, 14 வது வயதில் மொழி காக்க போர்க் குரல் கொடுத்தேன். "ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்! நீ தேடி வந்த கோழையுள்ள நாடு இதல்லவே! வீரத் தமிழ்க் கொஞ்சும் நாட்டிலே நாங்கள் சாரமில்லா சொற்கள் ஏற்க மாட்டோம் வீட்டிலே" என்று பாடியவன்தான் இந்தக் கருணாநிதி.
அந்த மொழி உணர்வு இந்த 91வது வயதிலும் பட்டுப் போகவில்லை. பட்டுப் போகாது. இந்தப் பக்குவம், இந்த உணர்ச்சி தமிழ்நாட்டு இளைஞர்களுக் கெல்லாம் இருந்தால் இனி கட்டாய இந்தி என்று அந்த மொழி தமிழகத்திலே நுழையாது. அந்த ஒரு எண்ணம் யாருக்கும் பிறக்காது. நம்முடைய மொழியை கட்டாயமாகப் புகுத்துவோம் என்ற ஆணவம் எவருக்கும் ஏற்படாது. இளைஞர்களாக இருக்கிற நீங்கள், அந்த உறுதியைப் பெற வேண்டும். என்னை நினைத்து அந்த உறுதியைப் பெறுங்கள். பிறகு இந்தியும் வராது, அது கட்டாயமாக இங்கே நுழையவும் நுழையாது.
மோடிகளுக்கு இங்கு வேலை இல்லை
தமிழ்நாடு கேட்பாரற்ற பூமியாகி விட்டது. இனி தமிழ்நாட்டிலே எவர் வேண்டுமானாலும் நுழையலாம். அத்துமீறி நுழையலாம். ஆட்சி புரியவே நுழையலாம் என்கின்ற எண்ணம் 'மோடி'களுக்கும் ஏற்படாது. "தமிழன் என்றோர் இனம் உண்டு, தனியே அவர்க்கோர் குணம் உண்டு" என்ற நாமக்கல் கவிஞருடைய வார்த்தையை நாம் மறவாமல் பணியாற்றினால், மோடி அல்ல; யாரும் உள்ளே நுழைய முடியாது. மீறி நுழைபவர்கள் நம்முடைய எதிர்ப்பால் ஒரு "கோடி"யிலேதான் நிற்க வேண்டும். "மோடி"களுக்கு இங்கே வேலை இல்லை என்று நான் உரைக்க முடியும்.
இந்தியாவில் ஏதோ திறந்த வீடு, யார் வேண்டுமானாலும் நுழையலாம் என்று தைரியம் வந்தால்; பிறகு இந்தியா சீர்குலைந்துபோகும். இன்றைக்கு இந்தியாவிற்கு இருக்கும் சிறப்பே, தமிழ்நாட்டிற்கு இருக்கும் சிறப்பே நாம் கட்டிக்காத்த உணர்வுகள்தான். நாம் கட்டிக்காத்த வீரம்தான். நாம் கட்டிக்காத்த உணர்வுகளும், உரிமைகளும்தான். அதற்கு பங்கம் ஏற்பட்டால் இந்த நாடு, இந்த தமிழ் நிலம், கட்டபொம்மன் வாழ்ந்த பூமி. மருது பாண்டியர்கள் நாங்கள். இங்கே எட்டப்பன்களுக்கு இடம் இல்லை. பூலித்தேவன்களுக்குத் தான் இடம் என்றுரைத்து, தமிழ்நாட்டிலே போர்க்கொடி உயர்த்தியவர்கள் நாம். அந்த கொடி இன்னும் தாழவில்லை; தாழாது. அதைத் தாழ விடப்போவதும் இல்லை. இந்த உறுதியுடன் நாம் களத்தில் நிற்கிறோம்.
எதிர்காலத்தில் இந்த சமுதாயம் வாழ வேண்டும், தன்மானத்தோடு வாழ வேண்டும், சுய மரியாதையோடு வாழ வேண்டும் என்றால் இடையிலே வந்து போகின்ற தேர்தல் வெற்றிகள் அதை நிர்ணயிக்காது. அதை அளந்து காட்டாது. தேர்தல் வெற்றிகள் வரும் போகும். தேர்தலிலே தோற்காதவர்கள் யார்? தேர்தலிலே வெற்றி பெற்றவர்களெல்லாம் இந்த நாட்டை ஆண்டு முடித்து விட்டார்களா? இல்லை. அவர்களுடைய இலட்சியங்களை ஈடேற்றி விட்டார்களா? இல்லை.
நம்முடைய லட்சியங்களை அடைய வேண்டுமேயானால் மொத்த தமிழ் இனமும் அதற்கான போர்க்குரலை எழுப்ப வேண்டும். மொத்த தமிழ்ச் சமுதாயமும் அதற்கான எழுச்சியைப் பெற வேண்டும். அந்த எழுச்சியைப் பெறும்போது, கண் கட்டி வித்தை செய்ய, பொம்மலாட்டம் காட்டி ஏமாற்ற, சிலபேர் புறப்படக் கூடும்.
ஜெ. சொத்துக் குவிப்பு...
இன்றைக்கும் சொல்லுகின்றேன் இந்த மாவட்டத்திலே, தமிழகத்தினுடைய முதலமைச்சர் சுற்றுப் பயணம் செய்து தான் ஏதோ பெரிய யோக்கியரை போலவும், மற்றவர்கள் எல்லாம் தவறானவர்கள் என்பதை. போலவும் எடுத்துக் காட்டியிருக்கிறார். ஒன்றை மாத்திரம் உங்களுக்கு புள்ளி விவரத்தோடு சொல்லுகின்றேன். நாம் எப்படிப்பட்ட முதலமைச்சரைப் பெற்றிருக்கிறோம் என்பதற்கு பெங்களூரில் நடைபெறுகின்ற சொத்துக் குவிப்பு வழக்கு ஒன்றே போதுமான உதாரணம்.
இந்த அம்மையார் (ஜெயலலிதா) வாங்கிய இடத்தினுடைய, இவர்கள் ஆட்சிக்கு வந்து இந்த கணக்குகள் எல்லாம் வரும் வரையில், இவர்கள் வாங்கிய சொத்து மதிப்பு 5,107 கோடி ரூபாய். இஃதன்னியில் நகை, வைரம், கம்பெனி முதலீடுகள், அசையும் சொத்துக்களை கணக்கில் சேர்த்தால் மேலும் பல கோடி ரூபாய் வரும். முதலில் அவர் வைத்திருந்ததோடு ஒப்பிட்டுப் பார்த்தால் 310 மடங்கு அதிகமாகச் சொத்து குவித்திருக்கிறார்கள் என்று அரசு வழக்கறிஞர் நீதி மன்றத்தில் சொல்லியிருக்கிறார்.
இவ்வளவு சொத்துக்களுக்கு அதிபதி, நான் ஏழை, நான் ஏதும் இல்லாதவர் என்று அனுதாப வேஷம் போடும் இந்த நிலைக்கு என்ன காரணம்? தமிழன் தலையிலே மிளகாய் அரைக்கலாம் என்பதை தவிர வேறு என்ன காரணம்? தமிழன் ஏமாந்தவன்; அவனை காலம் காலமாக, ஆண்டாண்டுக் காலமாக, யுகம் யுமாக, ஏமாற்றி வாழ்ந்த கூட்டத்தின் தொடர்ச்சியாக இப்பொழுது ஆளுங் கட்சி என்ற பெயரால் ஜெயலலிதா ஏமாற்றுகிறார் என்பதற்கு இதைத் தவிர வேறு என்ன அடையாளம் வேண்டும்.
ஆகவே, நீங்கள் மூக்கிலே விரலை வைக்காதீர்கள். ஏ! அப்பா! இவ்வளவு நிலமா? இவ்வளவு பணமா? இவ்வளவு சொத்துக்களா? என்று ஆச்சரியப்படாதீர்கள். நீங்கள் இந்த தேர்தலிலும் அவர்களை தப்பிக்க விடுவீர்களேயானால், இன்னும் பல நூறு கோடி ரூபாய் சொத்துக்களை அவர்கள் தமிழ்நாட்டிலே குவிப்பார்கள். தமிழ்நாட்டிலே சம்பாதிப்பார்கள். அதற்கெல்லாம் இடம் கொடுக்க வேண்டும், நாம் ஏமாற தயாரா இருக்க வேண்டும் என்று எண்ணினால் நீங்கள் இந்த தேர்தலிலே எங்களை ஆதரிக்காமல் அவர்களையே ஆதரியுங்கள். அப்பொழுதுதான் தமிழ்நாடு ஜெயலலிதாவால் தொடர்ந்து சுரண்டப்பட்டு, பொட்டல் காடாக ஆகும். தமிழ்நாடு பொட்டல் காடாக ஆக வேண்டும் என்று கருதினால் இந்த தேர்தலில் - இந்த நாடாளுமன்றத் தேர்தலில், அந்த அம்மையார் சுட்டிக் காட்டுகின்ற வேட்பாளர்களுக்கு நீங்கள் வாக்களியுங்கள். இல்லையென்றால் எங்கள் பேச்சை தயவு செய்து கேளுங்கள்.
நாங்கள் உங்களவர்கள், உங்களோடு இருப்பவர்கள், சாவு, வாழ்வுக்கு உரிமை உடையவர்கள். எனவே, எங்களுடைய பேச்சை உதாசீனப்படுத்தினால், அலட்சியப்படுத்தினால் வந்ததை அனுபவியுங்கள் என்று சாபம் விடுவதைத் தவிர வேறு வழியில்லை. நீங்கள் இந்தச் சாபத்திற்கு ஆளாக மாட்டீர்கள். ஏனென்றால் எதிர்கால சந்ததியாம் நம்முடைய தமிழ் சந்ததியை வாழ வைக்க நிச்சயமாக முன்வருவீர்கள் என்ற நம்பிக்கையோடு உங்களையெல்லாம் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கின்ற அரிய வாய்ப்பை பெற்றமைக்காக என்னுடைய வாழ்த்துக்களையும் உணர்வுகளை கொட்டினோம் என்ற திருப்தியையும் தெரிவித்து, ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரியுங்கள் என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்" என்றார் கருணாநிதி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT