Published : 19 Mar 2014 12:00 AM
Last Updated : 19 Mar 2014 12:00 AM
வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் அ.தி.மு.க, இம்முறை எப்படியும் வெற்றிக் கனியை எட்டிப் பறிப்பது என்ற உறுதிப்பாட்டுடன் பிரச்சாரத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது.
1977 மற்றும் 1980 தேர் தல்களைத் தவிர மற்ற தேர்தல்களில்கூட்டணிக் கட்சிகளுக்கே வடசென்னையை விட்டுக்கொடுத்துள்ளது அ.தி.மு.க. 1977-ல் நாஞ்சில் கி.மனோ கரனும் 1980-ல் அப்துல்காதரும் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு தோற்றார்கள். அந்த வரலாறை மாற்றி எழுதும் திட்டத்துடன் மூன்றாவது முறையாக மீண்டும் இங்கே களம் காண்கிறது அ.தி.மு.க. இதற்காக, அ.தி.மு.க அவைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் தலை மையில் அ.தி.மு.க-வினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொழிலாளர்கள், மீனவர் குடியிருப்புகள் நிறைந்த வட சென்னை தொகுதியில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. தொழிற்சாலைகளின் மாசு, சுகாதாரச் சீர்கேடு, கன்டெய்னர் லாரிகளால் போக்குவரத்து நெரிசல் என தொல்லைகள் நீண்டு கொண்டேபோகிறது.
“கடந்த 50 ஆண்டுகளில் தென் சென்னை கண்டுள்ள வளர்ச்சி, வசதிகளில் பாதி அளவுகூட வடசென்னையை வந்தடையவில்லையே” என்பது வடசென்னைவாசிகளின் ஆதங்கம். “இங்கே 10 முறை வெற்றிபெற்ற அ.தி.மு.க பெரிதாக எதையும் சாதித்துவிடவில்லை. நாங்கள் வெற்றிபெற்றால் சிறப்புத் திட்டங்களைக் கொண்டுவந்து வட சென்னையை வளமாக்குவோம்” என்று முழங்குகிறது அ.தி.மு.க.
கடந்த காலங்களில் வட சென்னை வளர்ச்சிக்காக மேற் கொள்ளப்பட்ட திட்டங்களைப் பட்டியலிட்டு வாக்கு கேட்கிறது திமுக. உழைப்பாளிகள் நிறைந்த வடசென்னையில் அவர்களது வாக்குகளை குறிவைத்து வாசுகியைக் களம் இறக்கியுள்ளது மார்க்சிஸ்ட் கட்சி. பா.ஜ.க அணியில் கூட்டணி இறுதி செய்யப்படவில்லை. காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர்களை இன்னும் தேடிப் பிடிக்கவில்லை. வடசென்னையில் ஐந்துமுனை போட்டி நிச்சயம் என்றாலும் நிஜமான போட்டி அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வுக்கும்தான். தி.மு.க இந்தத் தொகுதியை மீண் டும் தக்கவைக்குமா அல்லது அ.தி.மு.க தட்டிப் பறிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT