Published : 16 May 2014 07:39 AM
Last Updated : 16 May 2014 07:39 AM
2014 மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக எண்ணப்பட்டு முடிவு தெரியும் முன்னதாகவே ‘வாக்குக் கணிப்பு’ முடிவுகள் (எக்சிட் போல்) வெளிவந்து ஒரு சாராருக்கு மகிழ்ச்சியையும், மற்றொரு சாராருக்குச் சோர்வையும் ஏற்படுத்தியிருக்கிறது. தோற்கும் என்று சொல்லப்பட்ட கட்சிகளின் தலைவர்கள், ‘இந்தக் கணிப்பு முடிவை ஏற்க முடியாது’ என்று சொல்லியிருக் கிறார்கள். இது விரக்தியால் வந்த விளைவு அல்ல; உண்மையில், இந்த வாக்குக் கணிப்புகளும் கருத்துக் கணிப்புகளும் பலமுறை பொய்த்துப்போயிருப்பதால் ஏற்க மறுப்பதிலும் நியாயம் இருக்கிறது. எனவே, இதை கருத்துக் கணிப்பு என்று ஏற்காமல், கருத்துத் திணிப்பு என்றே முத்திரை குத்துகின்றனர்.
‘கோடிக் கணக்கானவர்கள் வாக்களித்த தேர்தலை, சில ஆயிரம் பேரிடம் மட்டும் கருத்துக் கேட்டுவிட்டு முடிவுசெய்வது சரியாக இருக்குமா?’ என்று கேட்கின்றனர். அதைவிட முக்கியம், எத்தனைபேர் உண்மையைச் சொல்வார்கள் என்பதும் சிந்திக்க வேண்டிய விஷயம்.
‘எக்சிட் போல்’ என்று அழைக்கப்படும் வாக்குக் கணிப்புக்கும், தேர்தலுக்குப் பிந்தைய ‘போஸ்ட் போல் சர்வே’க்களுக்கும் என்ன வித்தியாசம்? பொதுமக்களைக் கேட் டால் ‘இரண்டுமே ஒன்றுதானே’ என்று பதில் சொல்வார்கள். இரண்டுக்கும் லேசான வித்தியாசம் இருக்கிறது.
‘எக்சிட் போல்’ என்ற வாக்குக் கணிப்பு, வாக்கை அளித்து விட்டு வாக்குச் சாவடியைவிட்டு வெளியே வருகிறவரிடம் உடனே கேட்டுக் குறித்துக்கொள்வது. ‘போஸ்ட் போல் சர்வே’ என்பது அடுத்த நாளோ அதற்கடுத்த நாளோ வாக்காளரை வீடுகளில் சந்தித்து சாவகாசமாகக் கேட்டுக் குறிப்பது.
தேர்தல் கணிப்பு நிபுணர்களைக் கேட்டால், வீடுகளில் கேட்டுக் குறிப்பதுதான் துல்லியமான முடிவுக்கு அருகில் வரும் என்கிறார்கள். மற்றொரு காரணம், வாக்களித்த மறுநாள் அல்லது அதற்கும் மறுநாள் கருத்துக் கேட்பதற்கு முன்னால் பணக்காரர்கள், நடுத்தர வகுப்பினர், ஏழைகள் என்றும் உயர் சாதிக்காரர், நடுத்தர சாதிக்காரர், பரம ஏழைகள் என்றும் படித்தவர்கள், படிப்பறிவில்லாதவர்கள் என்றும் ஆடவர்கள், மகளிர், இளைஞர்கள் என்றும் வெவ்வேறு ரக வாரியாக அணுகி கருத்துகளைப் பதிவுசெய்யலாம். வியாபாரிகள், தொழிலாளர்கள், கூலி வேலைக்குச் செல்வோர், சொந்த வியாபாரம் செய்வோர், வழக்கறிஞர்கள், டாக்டர்கள், ஆடிட்டர்கள் என்று இந்த சர்வேயில் அனைத்துத் தரப்பினரையும் திட்டமிட்டுக் கொண்டுவர முடியும். அத்துடன் கிராமவாசிகள், நகர்ப்புறத்தினர், விவசாயிகள், அரசு ஊழியர்கள் என்றெல்லாம்கூடத் திட்டமிட்டுக் கருத்துகளைத் திரட்ட முடியும். இப்படித் திரட்டுவதற்கு நாடு முழுவதும் பல்வேறு தொகுதிகளையும் பகுதிகளையும் முன்கூட்டியே அடையாளம் காண வேண்டும். எந்த அளவுக்கு இந்த சர்வேயின் பரப்பளவும், வாக்காளர்களின் எண்ணிக்கையும் கூடுகிறதோ அந்த அளவுக்கு முடிவும் கிட்டத்தட்டத் துல்லிய மாக அமைய வாய்ப்பு உண்டு.
வளரும் சமுதாயங்களை ஆய்வு செய்யும் லோக் நீதி மையத்தின் இணை இயக்குநர் சஞ்சய் குமார் இது குறித்துக் கூறுகையில், “1996-ல் தூர்தர்ஷனுக்காக இந்தக் கணிப்பை நடத்தினோம். தேசிய அளவில் எங்களுடைய கணிப்பு சரியாக இருந்தது. மாநிலங்களைப் பொறுத்தவரை நாங்கள் கணித்ததற்கும், உண்மையான முடிவுகளுக்கும் வேறுபாடு இருந்தது” என்கிறார். வாக்களித்த உடனேயே கருத்தைக் கேட்டு முடிவைக் கணிப்பதைவிட வாக்களித்த மறுநாளோ அதற்கடுத்த நாளோ கணிப்பதே துல்லியமாகக் கணிக்க உதவும் என்று தன்னுடைய அனுபவத்திலிருந்து தெரிவிக்கிறார்.
இந்த முறை லோக் நீதி - சி.எஸ்.டி.எஸ். என்ற அவர்களுடைய அமைப்பு சி.என்.என். ஐ.பி.என். தொலைக்காட்சிக்காக சர்வே நடத்தியிருக்கிறது. என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்காக ஹன்சா ஆய்வு நிறுவனம் சர்வே நடத்தியிருக்கிறது. இந்த நிறுவனம் பா.ஜ.க. கூட்டணிக்குக் குறைந்தபட்சம் 258 தொகுதிகளும் அதிகபட்சம் 300 தொகுதிகளும் கிடைக்கும் என்றும் 37.4% வாக்குகள் ஆதரவாகக் கிடைத்திருப்பதாகவும் புதன்கிழமை இரவு அறிவித்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 22.7% வாக்குகளும் குறைந்தபட்சம் 91 தொகுதிகளும் அதிகபட்சம் 115 தொகுதிகளும் கிடைக்கும் என்றும் இதர கட்சிகளுக்குக் குறைந்தபட்சம் 149 தொகுதிகளும் அதிகபட்சம் 173 தொகுதி களும் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
அவசரப்பட்டு வாக்குக் கணிப்பு முடிவுகளை வெளியிடும் போது தவறாகப் போய்விடுகிறது என்று என்.டி.டி.வி. நெட் வொர்க் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி விக்ரம் சந்திரா கூறுகிறார்.
மிகப் பெரிய அளவில் கருத்துக்கணிப்பு நடத்தியிருப்பதாக டைம்ஸ் நௌவ் - ஓ.ஆர்.ஜி. இந்தியா நிறுவனம் தெரிவிக்கிறது. 180 தொகுதிகளில் 5.4 லட்சம் வாக்காளர்களிடம் கருத்து கேட்டுக் கணித்திருக்கிறது.
சி.எஸ்.டி.எஸ். - சி.என்.என்., ஐ.பி.என். இணைந்து 287 தொகுதிகளில் 1,284 இடங்களில் 21,044 வாக்காளர்களிடம் கருத்துக் கேட்டுக் கணித்துள்ளது. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 40% வாக்குகள் கிடைத்திருப்பதாகவும் அந்தக் கூட்டணிக்குக் குறைந்தபட்சம் 274 தொகுதிகளும் அதிகபட்சம் 286 தொகுதிகளும் கிடைக்கும் என்று புதன்கிழமை இரவு வெளியிட்ட இறுதி வாக்குக் கணிப்பில் தெரிவித்திருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 26% வாக்குகளும் குறைந்தபட்சம் 92 தொகுதிகளும் அதிகபட்சம் 102 தொகுதி களும் கிடைக்கும் என்று தெரிவித்திருக்கிறது.
உடனடி முடிவுகள்:
தேர்தல் கட்டம் கட்டமாக நடத்தப்படுவதால் நிறைய நிறுவனங்கள் தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பு முறையையே (போஸ்ட் போல்) கையாள்வதாக ஏ.சி. நீல்சன் நிறுவனத்தின் ஆலோசகர் ரஞ்சித் சிப் தெரிவிக்கிறார்.
ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் ஒரே கட்டத்தில் மாநிலம் முழுவதற்கும் தேர்தல் நடந்த இடங்களில் மட்டுமே ‘எக்சிட் போல்’ எனப்படும் வாக்குக் கணிப்பு முறையைக் கையாண்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
கலப்பு கணிப்பு
பெரும்பாலான நிறுவனங்கள் வாக்குக் கணிப்பு (எக்சிட் போல்), தேர்தலுக்குப் பிந்தைய கணிப்பு (போஸ்ட் போல்) என்ற இரு வழிமுறைகளையும் கலந்தே கணிக்கின்றன என்று பெயர் தெரிவிக்க விரும்பாத தேர்தல் கணிப்பு நிபுணர் தெரிவிக்கிறார். இதைத் தேர்தலின் கடைசி கட்ட நாளில் மேற்கொள்வதாகத் தெரிவித்தார். உடனடியாக எங்களுக்கு முடிவு தெரிவிக்கப்பட வேண்டும் என்று தொலைக்காட்சி நிறுவனங்கள் நெருக்குதல் தருவதால் இந்த முறையைக் கையாள்கின்றனர் என்றும் குறிப்பிடுகிறார்.
வாக்குக் கணிப்புகளில் கருத்துக் கேட்கும்போது நகர்ப்புறங் களைச் சேர்ந்த இளைஞர்கள்தான் உடனடியாகப் பதில் அளிப்பார்கள் என்பதால் அந்தக் கணிப்பு மாதிரியில் பலதரப் பட்ட வாக்காளர்களின் கருத்து சேர்ந்து எதிரொலிக்காது என்கிறார் லோக் நீதி -சி.எஸ்.டி.எஸ். நிறுவனத்தைச் சேர்ந்த குமார்.
பெண்கள், ஏழைகள், கிராமப்புறங்களிலும் தொலைதூரப் பகுதிகளிலும் வாக்களிக்கும் வாக்காளர்கள் இந்தக் கணிப்பி லிருந்து பெரும்பாலும் விடுபட்டுவிடுகின்றனர். இதைத் தவிர்க்கத்தான் தங்களுடைய அமைப்பு ஏராளமான தொகுதி களில் பலதரப்பட்ட இடங்களில் கணிப்பை நடத்துகிறது என்கிறார் குமார்.
கருத்துக் கணிப்புகள் என்பது அறிவியல் முறைகளில் மக்களுடைய கருத்தைத் திரட்டும் முயற்சிதான். இதை முறையாகவும் நேர்மையாகவும் செய்யும்போது துல்லியமாகக் கணிப்பது சாத்தியம். அப்படிச் செய்தால் மக்களுக்கு இதன் மீது நம்பிக்கை பிறக்கும். இல்லாவிட்டால், இது ஏதோ உள்நோக்கத்துடன் செய்யப்படுவதாகவும் வியாபாரத்துக்கு மட்டுமே இதைப் பயன்படுத்திக்கொள்வதாகவும் மக்கள் நினைத்துவிடுவார்கள். இப்போது இந்தக் கருத்துக் கணிப்பு நடவடிக்கைகளில் எல்லா பெரிய ஊடகங்களும் நிறுவனங்களும் இறங்கியிருப்பதைப் பார்த்தால், இதுவே பெரிய தொழிலாகப் போய்விடும்போலத் தெரிகிறது!
பிஸினஸ் லைன், தமிழில்: சாரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT