Last Updated : 16 May, 2014 07:25 AM

 

Published : 16 May 2014 07:25 AM
Last Updated : 16 May 2014 07:25 AM

சிங்கின் பத்தாண்டுகள்

கல்வியாளராகவும் ரிசர்வ் வங்கி கவர்னராகவும் பொருளாதாரச் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்த நிதியமைச்சராகவும் மட்டுமே அறியப்பட்ட மன்மோகன் சிங்கைத் திடீரென ‘பிரதமர்’ பதவிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேர்வு செய்தபோது காங்கிரஸ்காரர்கள் மட்டுமல்ல, நாடே திகைத்தது. ஆனால் எவருமே, ‘இந்தப் பதவிக்கு இவர் தகுதியானவர் அல்ல’ என்று சொல்லவே முடியவில்லை. பத்தாண்டுகள் பிரதமராகப் பதவி வகித்த பிறகு, அவருடைய பதவிக் காலத்தைப் பற்றியும் ஆட்சியைப் பற்றியும் எவரிடம் கேட்டாலும் அவர்கள் சொல்லக்கூடிய ஒரே பதில் - ‘இந்தப் பதவி இவருக்குத் தகுதியானது அல்ல’ என்பதுதான்.

சோனியாவின் தேர்வு

நரசிம்ம ராவைப் போல சாணக்கியத்தனத்தை மறைத்துக்கொண்டு, வெளியில் சாதாரணமாகத் தெரியும் எந்த காங்கிரஸ் தலைவரிடமும் பிரதமர் பதவியை ஒப்படைக்கக் கூடாது. அப்படி ஒப்படைத்தால், பிறகு காங்கிரஸ் கட்சியும் தன்னிடம் இருக்காது என்று நன்கு புரிந்துகொண்ட சோனியா காந்தி செய்த தேர்வுதான் மன்மோகன் சிங். மன்மோகன் பிரதமரானபோது, ‘ஓரிரு ஆண்டுகள் கழித்து, இவரை அந்தப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு சோனியாவே அமர்ந்துவிடுவார் அல்லது மகனைக் கொண்டுவந்துவிடுவார்’ என்று பலரும் நினைத்தார்கள். தானோ தன் மகனோ ஆட்சியில் அமர்ந்தால்கூடச் செய்ய முடியாததை மன்மோகனை அமரவைத்துச் சாதித்துக்கொண்டார் சோனியா.

குடும்ப ஆதிக்கம்

‘மன்மோகன் சிங் பலவீனமான பிரதமர்’ என்று பலர் விவரம் புரியாமலேயே விமர்சிக்கின்றனர். நேரு குடும்பத்துக்குத்தான் தலைமைப் பதவியும் அதிகாரமும் என்பது காங்கிரஸின் எழுதப்படாத வேதமாக இருக்கும் நிலையில், அந்தக் கட்சியில் சோனியாவால் பார்த்து பதவியில் அமர்த்தப்பட்டிருக்கும் மன்மோகனுக்கு எப்படி அதிகாரங்கள் இருக்கும் என்பதைக்கூட நினைத்துப் பார்க்க முடியாதவர்களின் வெற்று விமர்சனம் இது. அவர் நினைத்ததைச் சில துறைகளில் செய்துகொள்ளவும் அவருக்கு அதிகாரம் தரப்பட்டிருந்தது.

இந்தியா முழுக்க எல்லாக் கட்சிகளிலும் இதே குடும்ப ஆதிக்கம்தான். (இடதுசாரிக் கட்சிகள் விதிவிலக்கு). எனவே, இந்த விவகாரத்தில் மன்மோகன் சிங்கைக் குறைசொல்லும் தகுதி எந்தக் கட்சிக்கும் இல்லை. குடும்ப ஆதிக்கம் உள்ள கட்சியில் தரப்படும் பதவியை எப்படி வகிக்க வேண்டும், என்னென்ன அதிகாரங்கள், என்னென்ன சுதந்திரங்கள் என்பதை மன்மோகன் வெகு எளிதாகக் கற்றுக்கொண்டுவிட்டார். எனவே, பத்தாண்டுகளும் இரு தலைவர்களுக்கும் இடையே சுமுகமான உறவு நிலவியது.

முதல் முறையும் இரண்டாவது முறையும்

முதல் ஐந்தாண்டு காலத்தில் மன்மோகன் சிங் தனக்கென்று சில விதிகளை வகுத்துக்கொண்டு செயல் பட்டதைப் போலத் தெரிந்தது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் இப்படி ஆட்சி செய்த பிறகு, நம்பிக்கை அதிகரித்த நிலையில் அணுசக்தி ஒப்பந்தத்தில் சோனியா காந்தியின் சம்மதத்தின்பேரில் துணிச்சலான முடிவுகளை எடுத்தார். வெளியிலிருந்து ஆதரித்த இடதுசாரிகள் ஆதரவை வாபஸ் பெற்ற போதிலும் அரசு கவிழாது என்ற நிலை ஏற்பட்டது அவரை மேலும் உற்சாகப் படுத்தியது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் இடதுசாரிகள் இல்லாத குறையை மம்தா பானர்ஜி பூர்த்திசெய்தார். மத்திய அரசு உருப்படியாக நடக்க விடாமல் தொடர்ந்து தொல்லைகளைக் கொடுத்தார். பொருளாதாரச் சீர்திருத்தத்தை மேலும் தீவிரப்படுத்தவே மன்மோகன் விரும்பினாலும் சோனியாவுக்கு ஆர்வம் ஏற்படவில்லை. மேலும், தேசிய ஆலோசனை கவுன்சில் என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் தலைவராகி, மன்மோகனுக்குச் சம அந்தஸ்தைப் பெற்றுவிட்டதாக மகிழ்ந்தார் சோனியா. அத்துடன் முக்கிய கொள்கை முடிவுகளை அவரும் சமயங்களில் அவருடைய மகனுடன் ஆலோசனை கலந்தும் எடுக்க ஆரம்பித்தார். வெளிநாட்டு நேரடி முதலீடுகள் குறைந்தன. தொடர்ந்து தொழில்துறையில் மந்தநிலை ஏற்பட்டது. விலைவாசி உயர்ந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியது. ஒன்றன் பின் ஒன்றாக ஊழல்கள் வெளிப்பட்டு அரசுக்குத் தாள முடியாத அவப்பெயரும் பின்னடைவும் ஏற்பட்டது.

முதல் ஐந்தாண்டு காலத்தில் சிறப்பாக ஆட்சி செய்ததாகப் புகழப்பட்ட மன்மோகன், அடுத்த ஐந்தாண்டு காலத்தில் எல்லாத் துறைகளிலும் தோல்வியையும் கண்டனங்களையும் பெருமளவு சம்பாதித்தார். எனினும், இந்திய வரலாற்றில் மன்மோகன் நல்லவராகவே இடம்பெறு வார். அவரது ஆட்சியில் ஏற்பட்ட தோல்விகள் காலப் போக்கில் மறக்கப்பட்டுவிடும்; வெற்றிகள் நினைவுகூரப் படும். ஆனால், தங்கள் சாதனைகளை வெளியுலகத்துக்குச் சரியான விதத்தில் விளம்பரப்படுத்துவதற்கு காங்கிரஸ் தலைவர்களுக்கும் மன்மோகனுக்கும் தெரியாததுதான் அவர்களின் துரதிர்ஷ்டம். இந்த விஷயத்தில் அவர்கள் பா.ஜ.க-விடமிருந்தும் மோடியிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய.

மன்மோகன் ஆட்சியின் தோல்விகள், பலவீனங்கள் ஊரறிந்தவை. அந்தத் தோல்விகளைவிட அவரது ஆட்சிக் காலத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் மிக முக்கியமானவை. அந்தச் சாதனைகளின் பட்டியல் இங்கே:

மன்மோகனின் சாதனைகளில் சில

• தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் 2006-ல் 200 மாவட்டங்களில் அறிமுகம். பிறகு, அனைத்து மாவட்டங்களிலும் அமல்.

• மகளிருக்கு எதிரான வன்செயல்களைத் தடுக்க 2005-ல் சட்டம்.

• தகவல் அறியும் சட்டம், கல்வி பெறும் உரிமைச் சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம், லோக்பால் அமைப்புச் சட்டங்கள் நிறைவேற்றம்.

• வன உரிமைகள் அங்கீகரிப்புச் சட்டம்.

• நிலம் கையகப்படுத்தப்பட்டால், நியாயமான இழப்பீடு வழங்கச் சட்டம்.

• கையால் மலம் அள்ளுவதைத் தடை செய்யும் சட்டம், மறுவாழ்வுத் திட்டம் 2012.

• மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.

• 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் 8 புதிய ஐ.ஐ.டி-கள், 7 ஐ.ஐ.எம்-கள், 30 மத்திய பல்கலைக்கழகங்களைக் கொண்டுவரத் திட்டம்.

• நபர்வாரி வருமானம் 2004-ல் 630 டாலர்களாக இருந்தது 2012-ல் 1,550 டாலர்களாக உயர்ந்தது.

• பெட்ரோல் விலைக் கட்டுப்பாடு 2010-ல் நீக்கம்.

• டீசல் மீதான விலைக்கட்டுப்பாடு 2013-ல் பகுதியாக நீக்கம்.

• உணவு தானிய உற்பத்தி அதிகரிப்பு.

• ரயில்வே துறையில் 2008-ல் ரூ.90,000 கோடி ரொக்க உபரி.

• 2008 அக்டோபர் 22-ல் சந்திரயான்-1 ஏவப்பட்டது.

• ஆக்கபூர்வப் பணிகளுக்கு அணுசக்தியைப் பயன்படுத்த அமெரிக்காவுடன் ஒப்பந்தம்.

• டெல்லி-மும்பை, பெங்களூரு-சென்னை தொழில்கூடத் தொகுப்புகள் கட்ட ஒப்பந்தம்.

• சீனாவுடன் வர்த்தகம் 7,000 கோடி டாலர்களாக உயர்வு.

- சாரி, தொடர்புக்கு: rangachari.v@kslmedia.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x