Published : 06 May 2014 08:00 AM
Last Updated : 06 May 2014 08:00 AM

ஒவ்வொரு சுற்று எண்ணிக்கை முடிவும் இணையதளத்தில் வெளியிடப்படும்: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்

வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு சுற்று முடிவும் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள், வரும் 16-ம் தேதி எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அதிகாரிகளுக்கான பயிற்சி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அன்னை தெரசா மகளிர் வளாக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடந்தது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார், தேர்தல் அதிகாரிகளுக்கு பவர் பாயின்ட் பிரசன்டேசன் மூலம் பயிற்சி அளித்தார். இப்பயிற்சிக்கு 200 சிலேடுகள் பயன்படுத்தப்பட்டன.

பயிற்சியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த தேர்தல் அதிகாரிகள், வாக்குப்பதிவு அலுவலர்கள், முதன்மை உதவித் தேர்தல் அதிகாரிகள், தேர்தல் ஒருங்கிணைப் பாளர்கள் உள்பட 80 பேர் கலந்துகொண்டனர். சுமார் 3 மணி நேரம் பயிற்சி வகுப்பு நடந்தது.

பின்னர் நிருபர்களிடம் பிரவீண் குமார் கூறியதாவது:

இதுபோன்ற பயிற்சி இன்று (6-ம் தேதி) காலை 10 மணிக்கு கோவையிலும், 7-ம் தேதி காலை 9.30 மணிக்கு திருச்சியிலும், பிற் பகல் 3.30 மணிக்கு மதுரையிலும் நடக்கவுள்ளது. இவற்றில் பயிற்சி பெறும் தேர்தல் அதிகாரிகள், வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட வுள்ள 16 ஆயிரம் ஊழியர்களுக்கு விரைவில் பயிற்சி அளிப்பர்.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் 42 மையங் களில் வரும் 16-ம் தேதி காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டாலும், முடிக்கப்படாவிட்டாலும் 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கிவிடும்.

வீடியோவில் பதிவு

வாக்கு எண்ணிக்கைக்காக 234 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சட்டசபைத் தொகுதி யிலும் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 15 டேபிள்கள் போடப்படும். வாக்கு எண்ணும் மையங்களில் ஒரு கட்சிக்கு ஒரு ஏஜென்ட் மட்டுமே அனுமதிக்கப்படுவார். இந்த மையங்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதியில்லை.

வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும். அனைத்து மையங்களிலும் வெப் கேமரா பொருத்தப்படும். அதன்மூலம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்தபடி வாக்கு எண்ணிக்கையை முழுமையாக கண்காணிக்க முடியும்.

இணையதளத்தில்..

வாக்கு எண்ணிக்கையின் முடிவை பொதுமக்கள் பார்ப்பதற்கு வசதியாக, ஒவ்வொரு சுற்று முடிவும் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்படும். இறுதி முடிவை தேர்தல் ஆணையத்துக்கு இ-மெயில் அனுப்புவேன். அங்கிருந்து அனுமதி கிடைத்த பிறகே அதிகாரபூர்வமாக முடிவு வெளியிடப்படும். வாக்கு எண்ணிக்கை நடக்கும் 16-ம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதையும் மீறி யாராவது மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x