Published : 16 May 2014 04:09 PM
Last Updated : 16 May 2014 04:09 PM
திமுக தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்டது என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் திமுக தமிழகத்தில் 1 இடத்தில்கூட வெற்றி பெறாத நிலையில் இது குறித்து திமுக முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
பேட்டியில் மு.க.அழகிரி கூறியதாவது: "திமுக தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தால் இதுபோன்ற நிலைமை ஏற்பட்டிருக்காது.
திமுக கட்சி அழுக்காக உள்ளது. அழுக்காக இருக்கும் துணியை அழுக்கு நீங்க வெளுப்பது போல் திமுகவில் அடைந்துள்ள அழுக்கையும் நீக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே கட்சி மேலும் வளரும் இல்லாவிட்டால் 2016 சட்டமன்ற தேர்தலிலும் இதே நிலை தான் நீடிக்கும்.
அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது என்றால் அதற்கு அக்கட்சி பணத்தை வாரி இரைத்ததே காரணமாகும்.
நான் கட்சியில் இருந்து வீண் பழி சுமத்தப்பட்டு நீக்கப்பட்டேன். அவ்வாறு நீக்கப்படாமல் இருந்திருந்தால் வேட்பாளர்கள் தேர்வு சிறப்பாக நடைபெற்றிருக்கும். குறிப்பாக தென் மண்டலங்களில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் நல்ல ஆலோசனைகளை கூறியிருப்பேன். திமுகவில் ஒருவர் மட்டுமே ஆல் இன் ஆல் அழகுராஜா போல் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இது கட்சிக்கு நல்லதல்ல". இவ்வாறு அழகிரி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT