Published : 07 May 2014 10:41 AM
Last Updated : 07 May 2014 10:41 AM
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவையொட்டி, தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட 144 தடை உத்தரவு நாள்களில் தேர்தல் கண்காணிப்புப் படையினர் சிறப்பாகச் செயல்பட்டனர். இதன் காரணமாகவே பணப் பட்டுவாடா கட்டுப்படுத்தப்பட்டது என தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார்.
இம்மாதம் 16-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதற்கான முன் ஏற்பாடுகள் குறித்து கோவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முகாமில் தேர்தல் அலுவலர்களுக்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் பயிற்சி அளித்தார். இந்த பயிற்சியில் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய 8 மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் அலுவலர்கள் என 70-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதுதொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் செய்தியாளர்களிடம் கூறியது: அடிப்படை பிரச்சினைகள் காரணமாக, சில பகுதிகளில் தேர்தல் புறக்கணிப்பு நடைபெற் றுள்ளது. அனைவரும் வாக்களித்து சரியான வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையம் வலியுறுத்துகிறது.
தேர்தல் விதிமீறல்கள் தொடர் பாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் 1200 வழக்குகள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை நிலைக்கு வந்துள்ளன. 16-ம் தேதிக்கு முன்னர் அதிகபட்ச வழக்குகள் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்படும். 144 தடை உத்தரவு அமலில் இருந்த கடைசி 2 நாள்களில் மட்டும் 83 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.70 லட்சம் வரை கைப்பற்றப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவு வெளியானவுடன் 30 நாள்களுக்குள் கடைசி பரிசீலனை நடைபெறும். அதில் செலவு கணக்கை தவறாக காட்டியிருந்தாலோ அல்லது கணக்கு காட்டப்படாமல் இருந் தாலோ சம்பந்தப்பட்ட வேட்பாளர் 3 ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்யப்படுவார். பொதுக்கூட் டங்களுக்கு அரசுப் பேருந்துகளை கட்சிகள் பயன்படுத்தவில்லை. தனியார் பேருந்துகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் வேட்பாளர் அல்லது கட்சியின் செலவுக் கணக்கில் கொண்டுவரப்படும்.
வாக்கு எண்ணிக்கைக்காக வாக்கு எண்ணும் இடங்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்று முடிந்ததும் முடிவு வெளியிட்ட பிறகே அடுத்த சுற்று தொடங்கும். தவறுகள் நடக்க வாய்ப்பில்லை என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT