Published : 06 May 2014 08:04 AM
Last Updated : 06 May 2014 08:04 AM
மக்களவைத் தேர்தலில் மூன்றாவது அணியின் உருவாக்கத்தை வழக்கம்போல் கையில் எடுத்திருப்பவர்கள், இடதுசாரிகள்.
இதன் முக்கியக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி. ராஜா. மாநிலங்களவை உறுப்பினரான இந்தத் தமிழர், டெல்லியின் தலைமை அலுவலகத்தில் ‘தி இந்து'வுக்கு அளித்த சிறப்புப் பேட்டியிலிருந்து...
மக்களவைத் தேர்தல் எந்தச் சூழலில் நடைபெறுவதாகக் கருதுகிறீர்கள்?
நம் நாட்டின் பொருளாதாரம் பெரும் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கும் சூழலில்தான் இந்தத் தேர்தல் நடை பெறுகிறது. இந்தப் பொருளாதாரச் சிக்கலால் நமக்கு அரசியல் நெருக்கடி, சமூக நெருக்கடி இன்னும் சொல்லப்போனால் தார்மீக நெருக்கடியும் ஏற்பட்டுள்ள சூழலில்தான் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும்?
தேர்தல் முடிவுகளுக்குப் பின் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் நீடிப்பது சாத்தியமில்லை.
ஒருபக்கம் பெருநிறுவனங்கள் பெரிய அளவுக்கு வளர்ந்திருக்கின்றன. பில்லியனர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கூடிவருகிறது. ஆனால், ஏழைகள் எண்ணிக்கை உலகத்திலேயே அதிகமாக இருக்கிறது.
காங்கிரஸ் கட்சி 15 கோடி மக்களை வறுமைக்கோட்டுக்குக் கீழே இருந்து மேலே உயர்த்திக் கொண்டுவந்துவிட்டதாகக் கூறினாலும், அவர்கள் திட்டகமிஷனில் கூறிய வறுமைக் கோட்டினை அனைவரும் நிராகரித்தார்கள். மக்களுக்கு காங்கிரஸ் மீது கடும் கோபம் மற்றும் எதிர்ப்பு இருக்கிறது. எனவே, காங்கிரஸ் கட்சி தோற்றுப்போகும்.
காங்கிரஸ் போனால், அடுத்துத் தாங்கள்தான் என்று பா.ஜ.க கருதிக்கொள்கிறது. பா.ஜ.க. ஒரு வலதுசாரி அரசியல் கட்சி. இந்தக் கட்சியை ஆட்டுவிக்கும் சூத்திரதாரியான ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்துத்துவா எனும் மதவெறி அரசியலைக் கொண்டது. நம் நாட்டை ஜனநாயகம்தான் ஆள வேண்டும் என்ற முறையில்தான் டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அமைத்திருக்கிறார். ஆனால், ஆர்.எஸ்.எஸ்., இதற்கு நேரெதிராக இந்த நாடு ஒரு மதவாதக் கட்டமைப்புக்குள் அமைய வேண்டும் என்று சொல்கிறது.
மோடி பிரதமரானால் நாட்டில் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என பா.ஜ.க. சொல்கிறதே?
இன்றைக்கு இந்தியாவுக்கு ஒரு வலுவான தலைவர் தேவை என ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரம் செய்துவருகிறது. இது ஏதோ ஒரு தனிநபரால்தான் முடியும்; அமானுஷ்ய ஆற்றல் கொண்ட மோடியால்தான் அது முடியும் என முன்னிறுத்துகிறார்கள். ஒரு சர்வாதிகாரத்தின் துவக்கமும் அடித்தளமும் இதுதான்.
வைகோ உட்பட பலரும், மோடி பிரதமரானால் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்பதுபோலப் பேசிவருகிறார்கள். இது நமது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது. ஒரு அதிபர் தேர்தலைப் போலத் தேர்தல் நடத்துவதும், அதில் ஒருவரைப் பிரதமராக முன்னிறுத்துவதும் நாம் ஏற்றுக்கொண்ட நாடாளுமன்ற ஜனநாயக முறையை உள்ளிருந்தே சீர்குலைப்பதாகும்.
ஹிட்லருடன் மோடியைச் சிலர் ஒப்பிடுகிறார்களே?
தற்போது இந்தியாவில் நிலவுவது போன்ற ஒரு சூழல் ஜெர்மனியில் இருந்தது. அந்தச் சூழலில் ஹிட்லர் ஒருவர்தான் வலுவான தலைவர் என்று சித்தரிக்கப்பட்டார். ஜெர்மனியின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண்பவர் என்றே ஹிட்லர் முன்னிறுத்தப்பட்டார். இன்றைக்குப் பெரும் தொழில் நிறுவனங்கள் மோடியை நம்புகின்றன. அவரை வலுவாக ஆதரிக்கின்றன. இந்தியாவைக் காப்பாற்ற ஒரு தலைவர் வேண்டும், அது மோடியால்தான் முடியும் என்ற வலதுசாரி சிந்தனையாளர்களின் கருத்து, நாம் ஏற்றுக்கொண்டிருக்கிற இந்திய ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.
இப்போது வீசும் அலை காங்கிரஸ் எதிர்ப்பு அலையா? மோடிக்கான ஆதரவு அலையா?
இது ஜனநாயகத்துக்கு ஆதரவான ஜனநாயக அலை என்றோ காங்கிரஸ் மீதான கோப அலை என்றோ சொல்ல லாமே தவிர, நிச்சயமாக மோடிக்கான ஆதரவு அலை அல்ல.
தேர்தலுக்குப் பின், மூன்றாவதாக ஒரு அணி உங்கள் பங்கேற்புடன் அமைந்து, அதற்கு காங்கிரஸ் ஆதரவளிக்க முன்வந்தால் அதை ஏற்றுக்கொண்டு ஆட்சி அமைக்க முன்வருவீர்களா? அல்லது வறட்டுத்தனமாக மறுத்து பா.ஜ.க. தலைமையில் ஆட்சி அமைய விட்டுவிடுவீர்களா?
தேர்தலுக்குப் பின் வெளியாகும் முடிவுகளின்படி ஏற்படும் அரசியல் சூழலை வைத்துதான் எந்த முடிவும் எடுக்க முடியும். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. அல்லாத மாற்றுக் கட்சிகள் எத்தனை தொகுதிகள் பெறுகிறார்கள், அவர்களுக்கு என்ன மாதிரியான சூழல் ஏற்படுகிறது என்பதையெல்லாம் நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், மாற்று அணிகுறித்து பா.ஜ.க-வுக்கு ஒரு பயம் உருவாகியிருக்கிறது.
மூன்றாவது அணியின் முக்கிய நோக்கம் என்ன?
காங்கிரஸ் கட்சி அதிகாரத்திலிருந்து அகற்றப்பட வேண்டும். மதவெறி அரசியலை முன்னிறுத்துகின்ற பா.ஜ.க. அதிகாரத்துக்கு வருவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். மக்களுக்கான ஒரு மாற்று அரசியல் உருவாக வேண்டும். இதுதான் மூன்றாவது அணியின் நோக்கம்.
காங்கிரஸ்-பா.ஜ.க-வின் பொருளாதரக் கொள்கையில் மாற்றம் எதுவும் இல்லை என்று சொல்லிவருகிறீர்கள். ஆனால், நாட்டிலுள்ள இதர தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் எதற்கும் அப்படிப்பட்ட மாற்றுப் பொருளாதாரச் சிந்தனை இருப்பதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் உங்களால் எப்படி மாற்று அணியை உருவாக்க இயலும்?
இன்றைய நிலையில் பல அரசியல் கட்சிகள் பொருளாதாரச் சிந்தனையில் வேறுபட்டிருக்கின்றன. அந்நிய முதலீடு உட்பட பல கொள்கைகளில் மாறுபடுகிறார்கள். அதற்காக அவர் கள் இடதுசாரிகளாகிவிட்டதாக நான் சொல்ல மாட்டேன். இடதுசாரியாகவும் இல்லாமல் வலதுசாரியாகவும் இல்லாமல் ஒரு மையநிலையை அவர்கள் பின்பற்றினால் நாட்டுக்கு நல்லது. அப்படிப்பட்ட ஒரு முயற்சியைத்தான் நாம் மேற் கொண்டுவருகிறோம்.
கம்யூனிஸ்ட் நாடுகளான சீனா, வியட்நாம், கியூபா ஆகியவை உலக வங்கி, ஐ.எம்.எஃப். போன்ற அமைப்புகளில் பங்குவகித்தும், டபிள்யு.டி.ஓ. போன்ற சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உலக மயமாக்கல், பொருளாதாரச் சீர்திருத்தம் ஆகியவற்றை முன்னெடுத்தும் செல்லும்போது, இந்தியா மட்டும் இவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று நீங்கள் வலியுறுத்துவதன் நியாயம் என்ன?
டபிள்யு.டி.ஓ-விலிருந்து வெளியேறும்படி இடதுசாரிகள் கூறவில்லை. இது ஒரு பன்னாட்டு முறையைப் பயன்படுத்தக் கூடியதற்கான ஒப்பந்தம்தான். இந்த அமைப்புக்குள் நம்முடைய பொருளாதாரச் சுதந்திரம், தொழில், விவசாயம் ஏற்றுமதி ஆகியவற்றைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை இந்தியா தனித்த முறையில் மேற்கொள்ள வேண்டும். இந்தியா போன்ற வளர்முக நாடுகளில் ஒற்றுமையை உருவாக்கி, அவர்களுடைய ஒத்துழைப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்றுதான் நாம் சொல்கிறோம்.
பன்னாட்டு நிதிநிறுவனங்களுக்கு இந்தியா அடிபணிந்து போகக் கூடாது. கடந்த காலங்களில் இது நடந்தது. பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் திட்ட கமிஷனின் துணைத் தலைவர் அலுவாலியா ஆகியோர் அனைவரும் அப்படி ஒரு போக்கை மேற்கொண்டனர். அதனால்தான் நாட்டில் பொருளாதார நெருக்கடிநிலை உருவானது. அதனால்தான் நாம் அதை எதிர்க்கிறோம்.
அ.தி.மு.க. அரசின் ‘பி டீம்' போலத்தான் தமிழகத்தில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் செயல்பட்டன என்று சொல்லப்படுகிறது. இந்தப் புகாரை எப்படி மறுப்பீர்கள்? மேலும், அ.தி.மு.க. தற்போது உங்களைக் கழட்டிவிட்டதால் ஏற்பட்ட நஷ்டம் என்ன?
இந்த குற்றச்சாட்டுக்களுக்கு எங்கள் தமிழகத் தலைமையே பதில் சொல்லும். அரசியலில் லாப, நஷ்டம் பார்க்க முடியாது. கொள்கைகள் தான் முக்கியம். கூட்டணியிலிருந்து நாங்கள் வெளியேற்றப் பட்டதற்கு நாங்கள் பொறுப்பல்ல, அ.தி.மு.க-தான் பொறுப்பு.
முதன்முறையாக பா.ஜ.க. தமிழகத்தில் ஒரு சக்தியாக வளர்கிறதா?
பா.ஜ.க. தனிப்பட்ட முறையில் போட்டியிட்டால் தமிழகத்தில் வளராது. கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்துதான் வளர முடியும். பா.ஜ.க-வுக்கும் ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகளுக்கும் இடையிலான கொள்கை உடன்பாடு என்ன? தங்கள் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் அனைத்துக் கட்சிகளுக்கும் உருவாகியிருக்கிறது. இந்த நிலைமையைப் பயன்படுத்திக்கொண்டு தமிழகத்தில் ஆதாயம் தேடிக்கொள்ள பா.ஜ.க. முயல்கிறது.
- ஆர். ஷஃபிமுன்னா, தொடர்புக்கு: shaffimunna.r@kslmedia.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT